பெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்? (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 52 Second

முகநூலில் அன்றாடம் பல பக்கங்கள் நம்மை சிரிக்க வைக்கிறது, அறிவை வளர்க்கிறது, ஆச்சரியப்படுத்துகிறது. அந்த வகையில் ஒரு முகநூல் பக்கம் பலரை சிந்திக்க வைக்கிறது. அதே சமயம் கோப மூட்டவும் செய்கிறது. ஒருவரை ஆத்திரப்படுத்தும் அளவுக்கு அப்படி என்னதான் அந்த முகநூலில் பதிவு செய்கிறார்கள்?

அதில் அவர்கள் பேசுவது பெண் சுதந்திரம், பாலியல் சமத்துவம், பெண் முன்னேற்றம். இதனால் தினமும் பாலியல் அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும், தகாத வார்த்தைகளையும் அந்த முகநூல் வாசிகள் எதிர்கொள்கிறார்கள். இந்த சமத்துவ பேச்சு மற்றும் கருத்து பரிமாற்றங்கள் எல்லாம் நம் இந்தியாவில் அதுவும் அதிகபட்ச தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற ‘கருத்து கண்ணம்மா’ என்ற முகநூல் பக்கத்தில் தான் அரங்கேறுகிறது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உலகெங்கும் ரசிகர்களை கொண்டிருக்கும் இப்பக்கம், அதற்கு நிகரான எதிரிகளையும் சம்பாதித்திருந்தது. ‘கருத்து கண்ணம்மா’ அட்மின்களை அடக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தவர்கள், இப்பக்கத்தை முடக்கினார்கள். ஒருமுறை இருமுறை அல்ல நான்கு முறை. ஆனால் துளியும் தளராமல் புதிய பக்கத்தை ஆரம்பித்தனர், நம் கருத்து கண்ணம்மா அட்மின்கள். நான்காம் முறையாக ஆரம்பித்த பக்கம், இரண்டே மாதத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை ஈட்டியது. ஆனால் அந்த பக்கமும், பேட்டி முடிந்து இக்கட்டுரையை முடிப்பதற்குள் மீண்டும் முடக்கப்பட்டது.

இப்போது ‘கருத்து கண்ணம்மா-karutthu kannammaa’ என்ற தமிழ், ஆங்கிலம் கலந்த பெயரில் புதிய பக்கம் ஆரம்பித்துள்ளனர். கருத்து கண்ணம்மாவை நிர்வகிப்பவர்கள் நான்கு பேர். பக்கத்தை முதன் முதலில் நிறுவியவர்கள் மலேசியாவைச் சேர்ந்த ஹேமா ஸ்ரீயும், கலைவாணியும். இவர்கள் இருவருமே மலேசிய இந்தியர்கள். அதிக இந்தியர்கள் இந்த பக்கத்தில் இணைந்ததால், தங்கள் இடுகைகளை இந்திய பெண்களை மையப்படுத்தியுள்ளனர். முகநூலில் பல பக்கங்கள் பெண்ணியம் சார்ந்து இயங்கி வந்தாலும், இந்திய பெண்களின் வாழ்வியலை சொல்லும் முகநூல் பக்கங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தாலும், அது ஆண்கள் இயக்கும் பக்கங்களாகவே இருந்தன.

அதனால் சமகால இந்திய பெண்களை மனதில் வைத்து இந்த பக்கத்தை இருவரும் தொடங்கினர். மலேசியா, இந்தியா என இன்னும் பல நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் இருப்பதால், இந்த பக்கம் ஆங்கிலத்தில் இயங்கி வருகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் இவர்களுடன் பல இந்தியர்கள் கருத்து கண்ணம்மாவை நிர்வகிக்க உதவியிருக்கின்றனர். அதில் இப்போது இவர்களுடன் இணைந்திருப்பவர், வாசுகி. இங்கிலாந்தில் வசித்துவரும் நம்ம மதுரை பொண்ணு இவர். நான்காவது அட்மின் யார் என்று சொன்னால், கருத்து கண்ணம்மாவை பின்பற்றுபவர்களுக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும். காரணம் அவர் ஒரு ஆண். பெயர் வெங்கடேஷ், இந்தியாவில் வசித்து வருகிறார்.

இது பெண்கள் மட்டுமே இயக்கும் பக்கம் என்ற ஒரே காரணத்தால் பல சிக்கல்களை சந்தித்து, தினம் ஒரு சண்டை சச்சரவை தாண்டிதான் இந்த பக்கத்தை இயக்கி வருகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் ’கருத்து கண்ணம்மா’ போலவே இயங்கும் போலி முகநூல் பக்கங்கள் வேற. கருத்து கண்ணம்மா என்ற பெயரில் இயங்கும் பல போலி பக்கங்களாலும் இவர்கள் பல தொல்லைகளை சந்தித்து வருகிறார்கள்.

‘‘ஆகஸ்ட் 2015ல், இந்த பக்கத்தை முதன் முதலில் ஆரம்பித்ததுமே, ‘‘யாரைக் கேட்டு இத ஆரம்பிச்ச? உன் அம்மா, அப்பாக்கு இது தெரியுமா?” என்று பல கேள்விகள் வந்ததாக சொல்கிறார், ஹேமா. “இப்படிப்பட்ட கேள்விகள் சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் இதை விளையாட்டாக கேட்கவில்லை, உண்மையிலேயே பெற்றோர்கள் அனுமதித்தார்களா என்று அவர்கள் கேட்டது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படித்து வேலைக்கு செல்லும் இரண்டு பெண்கள், முகநூலில் ஒரு பக்கம் ஆரம்பிப்பதில் கூடப் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கவேண்டுமா? ஆண்கள் இயக்கும் பெண்ணிய முகநூல் பக்கங்களுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் இல்லை, ஆனால் பெண்கள் முகநூல் பக்கத்தை இயக்க கூட அனுமதி மறுக்கப்
படுகிறது” என்றார் ஹேமா.

“எங்கள் பக்கத்தை விரும்பாத நெட்டிசன்கள், மோசமான சொற்களை கொண்டு விமர்சிப்பார்கள். அவர்கள் கேட்கும் திமிரான கேள்விகளுக்கு நாங்களும் திமிராக பதில் கொடுப்போம். ஒரு பெண்ணிற்கு இவ்வளவு திமிர், கோபம் இருந்தால் எங்களுக்கு எப்படி இருக்கும் என்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி முடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். கற்பு, ஆடை சுதந்திரம், ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பது பற்றிய இடுகைகளுக்குத்தான் அதிகமான கொந்தளிப்புகளும், சர்ச்சைகளும் எழும்.

பெண்கள் விண்வெளிக்கு செல்லும் காலத்தில், வீட்டில் சமைப்பதும், சுத்தம் செய்வதும் தான் ஒரு பெண்ணின் வேலை எனத் திட்டவட்டமாக இன்றும் நம்புகிறார்கள் என்று நினைக்கும் போது சிரிப்பாகத்தான் இருக்கிறது” என்கிறார் வாசுகி. இவர்களுக்கு வரும் மிரட்டல்கள் பற்றி கேட்ட போது, ‘‘பெண்கள் தினமும் சந்திக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளிலிருந்து தொடங்கி, உலகத்தில் பெண்களின் போராட்டங்கள் வரை மீம்ஸ்கள் மூலம் பதிவிடுவோம் சாதி மதம் கலாச்சாரம் என்று பல பெயர்களில் பெண்களை அடிமைப்படுத்துவதை கண்டித்து எங்கள் கருத்துகளை வெளியிடுவோம்.

பல ஆண்களுக்கு இது பிடிப்பதில்லை. அதனால் கொலை மிரட்டல்களும், பாலியல் அச்சுறுத்தல்களும் கொடுக்கும் அளவிற்கு கருத்து கண்ணம்மா மீது தீராப்பகை கொண்டுள்ளனர். நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களை வெறுப்பவர்களும் கிடையாது’’ என்று பதிலளித்தார் கலைவாணி. ‘‘கணவனின் சம்பாத்தியத்தில் மனைவி அழகு நிலையம் மற்றும் ஷாப்பிங் செய்வது குறித்து கேலி செய்து பதிவிடுவதை ரசிக்கிறார்கள். அதே சமயம் வேலைக்கு போகும் மனைவிக்கு சமையலில் உதவவேண்டும் என்றால் கொதிக்கிறார்கள்.

அப்பாவின் செல்ல மகளுக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியலையே என்று சிரிப்பவர்கள், அம்மாவின் செல்ல பிள்ளைக்கு சட்டையை கழட்டி துவைக்கும் வாளியில் கூட போட முடியாதா என்றால் முறைக்கிறார்கள்” என்று சிரிக்கின்றனர் நம் அட்மின்கள். “கருத்து கண்ணம்மா பக்கத்தில் நானும் ஒரு அட்மின்தான் என்ற உண்மை என் மனைவியை தவிர வேறு யாருக்கும் தெரியாது. என்னை ஒரு பெண்ணாக நினைத்து, பலரும் என் இடுகைகளுக்கு குறுகிய கண்ணோட்டத்தோடு அணுகிய போதுதான், ஆண்கள் தினமும் சுலபமாக கடந்துபோகும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் இவ்வளவு போராட வேண்டியுள்ளதே என்ற உண்மை புரிந்தது’’ எனக் கூறி வருந்தினார், வெங்கடேஷ்.

இப்படி தொடர் விமர்சனங்களையும், மிரட்டல்களையும் கண்டு வெறுத்து உடைந்து போனதுண்டா என்று கேட்டதற்கு, ‘‘ஒரு லட்சம் மக்களை ஒரே நாளில் இழந்தது பெரிய வருத்தமாக இருந்தது. ஆனால், நண்பர்கள் கொடுத்த ஊக்கமும், இன்பாக்ஸில் எங்களிடம் பேசும் தோழர்களும்தான் எங்களுக்கு பக்கபலமாய் நின்றனர். சமையல் குறிப்பு, அழகு குறிப்புக்கு எங்கள் பக்கத்தில் இடமே இல்லை. அவைகள் தவறென கூறவில்லை அதற்கு பல பக்கங்கள் இருக்கிறது. நாங்கள் வேறு. பல பெண்கள், வீட்டில் தங்கள் கணவருக்கு தெரியாமல் முகநூலில் இருக்கின்றனர். சிலர் எங்கள் பக்கங்களில் ‘லைக்’ எதுவும் போடாமல், அமைதியாய் இருந்து தங்கள் கருத்துகளை இன்பாக்சில் சொல்லுவார்கள்.

சிலர் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கேட்பார்கள். எங்களுக்கு தெரிந்ததை சொல்லி, முடிந்தவரையில் அவர்களுக்கு ஆதரவு தருவோம். பல பெண்கள், அவர்களுடைய கருத்துக்களை கேட்க கணவரும், குடும்பமும் தயாராய் இல்லையே என்ற ஆதங்கத்தில் எங்களிடம் வந்து பேசுவார்கள். நாங்கள் நால்வருமே எங்களுக்கு பிடித்த வேலையில் பிஸியாகத்தான் இருக்கிறோம். இருந்தாலும் தொடர்ந்து கருத்து கண்ணம்மா பக்கத்தை இயக்க காரணம் எங்கள் பக்கத்தை பின்தொடரும் எங்கள் பெண் தோழிகள்தான்.

பலசமயம் அவர்களின் கருத்துகளைத்தான் எங்கள் இடுகைகளாக பதிவேற்றம் செய்வோம். எங்களுடைய பக்கம் இல்லாமல் போனால், அவர்கள் யாரிடம் தங்கள் கவலைகளை பகிர முடியும். அவர்கள் துவண்டு போகும்பொழுது யார் ஊக்கப்படுத்துவார்கள் என்ற காரணத்தினாலே தொடர்ந்து எத்தனை முறை முடக்கினாலும் புதிதாக ஒரு பக்கத்தை ஆரம்பிக்கிறோம்” என்கிறார்கள்.

தங்கள் பக்கத்தில் இணைய இயலாத பெண்களுக்கு, சில ஒருமித்த கருத்துக்களை நால்வரும் முன்வைத்தனர். ‘‘கல்வி தான் உங்களின் பக்கபலம். காதல் தவறில்லை. ஆனால் கல்வியை தவறவிட கூடாது. உங்களின் சொந்த வருமானம் தான் உங்களின் வலிமையான ஆயுதம். அச்சம், மடம், நாணம், அடக்கம், பொறுமை போன்ற மாயச்சொற்களுக்கு மயங்காதீர்கள். அச்சம் கொண்டால் எதிரிகளை எப்படி சந்திப்பது? ஏன் ஒரு பெண் மடமையுடன் இருக்க வேண்டும்? சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் ஜெனிலியாவை போல் நிஜத்தில் வாழ்ந்தால் பைத்தியம் என்பார்கள்.

நாணம் உள்ளவள் தான் பெண் என்ற ஏமாற்று வார்த்தைகளை நம்பாதீர்கள். இவை அனைத்தும் பெண்ணை அடிமையாக, கோழையாக வைத்திருக்க யாரோ சொல்லிவிட்டு போனது. சாதி, மதம் பெண்ணை என்றுமே அடிமையாகத்தான் பார்க்கும். அதை விட்டு வெளியே வாருங்கள். புனிதமானவள் என்பார்கள், கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். தெய்வம் என்பார்கள், பூட்டியே வைப்பார்கள். மூடநம்பிக்கைகள் உங்கள் மூளையை செயலிழக்கச் செய்யும்’’ என்றவர்கள் பெண்கள் தங்களின் லட்சிய கனவை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

‘‘இன்றைய பெண்கள் குழந்தையை வீட்டிலிருந்தபடியே கவனிக்காமல் வேலைக்கு செல்வது குற்றவுணர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர். உங்கள் கணவர் இதைக் குற்ற உணர்வே இல்லாமல் செய்யும் பொழுது நீங்கள் மட்டும் ஏன் அப்படி உணர வேண்டும்? குடும்பமும், சமுதாயமும் பெண்களை அந்த அளவிற்கு மூளைச்சலவைச் செய்து வைத்திருக்கிறது. திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு நிகழ்வு, வாழ்நாள் சாதனையல்ல. அதேபோல், குழந்தைப்பேறு ஒரு இயற்கையான நிகழ்வே தவிர வாழ்க்கையின் முடிவல்ல.

ஒரு ஆண் திருமணம், குழந்தையை தாண்டி தனக்கான லட்சிய கனவு நோக்கி பயணிக்கிறானோ அதே கனவு, லட்சியமும் பெண்ணிற்கு இருந்தால் அதை தவறாக நினைக்கிறார்கள்.நாங்கள் ஆண்களை போல மாற விரும்பவில்லை. மனிதம் வேண்டும் என்கிறோம். சமமாக நடத்துங்கள் என்கிறோம். ஆண்களை வெறுக்கவில்லை ஆணாதிக்கவாதிகளை சுட்டிக்காட்டுகிறோம். வரதட்சணை, பெண் கருக்கொலை, பாலியல் வன்கொடுமை, கட்டாய திருமணங்கள், குடும்ப வன்முறை போன்ற பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளையும் பாகுபாட்டையும் தான் இந்த பக்கம் விவாதிக்கிறது.

மீம்ஸ்கள், கட்டுரைகளை தாண்டி இப்பக்கத்தின் அட்மின்களின் கதைகளும் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும். பெண்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் இவர்களும் எப்படி தாண்டி வந்துள்ளனர் என்ற உண்மையை முன்வைக்கும் போது, மற்ற பெண்களும் தைரியமாக பிரச்னைகளை எதிர்கொள்ள முன்வருவார்கள். இப்படி பலதரப்பட்ட பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாய் நிற்க கருத்து கண்ணம்மா ஒரு பலமான பாலமாக இருந்து வருகிறது’’ என்றனர் கருத்து கண்ணம்மாவின் அட்மின்கள்.

பெண்ணிய அநீதிக்கும், ஆண் ஆதிக்கத்திற்கு எதிராக, சமத்துவ சமுதாயத்தை வேண்டி எழுப்பப்படும் ஒவ்வொரு சிறிய குரலும் இங்கு மிக முக்கியமானது. கருத்து கண்ணம்மாவை இயக்கிவரும் தோழர்களும் அப்படித்தான் தங்களால் முயன்ற வழியில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எச்சரிக்கும் நாசா ! அதிர்ச்சியில் இஸ்ரோ ! (வீடியோ)
Next post பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? (அவ்வப்போது கிளாமர்)