தமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா? (கட்டுரை)
ஜனாதிபதித் தேர்தலுக்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன; சில அறிவிக்கவில்லை. சில பிற கட்சிகளின், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுகின்றன. தேர்தலைச் சுற்றி, மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பேசுபொருளாகியுள்ளது.
தமிழர்கள், வாக்களித்தும் புறக்கணித்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், தமிழர்களின் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் வண்ணம், மாற்றங்கள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை, நாம் இப்போது கேட்டாக வேண்டும்.
‘சமாதானப் புறா’ சந்திரிக்கா அம்மையார் முதற்கொண்டு, ‘நல்லாட்சி’யின் நாயகன் சிரிசேன வரை, எமது தேர்தல் தெரிவுகள், எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாமறிவோம்.
இந்தப் பின்புலத்திலேயே, இன்னொரு ஜனாதிபதித் தேர்தலைத் தமிழர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
ஜனநாயகத்தின் அடிப்படை, தேர்தல்கள் என்று சொல்லப்பட்டாலும் தேர்தல்களே, ஜனநாயக மறுப்பை நியாயப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைவதை, இலங்கையில் கண்டுள்ளோம்.
ஜனநாயகத் தேர்தல்களின் வழி தெரிவானோரே, ஜனநாயக மறுப்பாளர்களாகவும் ஏதேச்சாதிகாரத்ததைப் பயன்படுத்துவோராகவும் இருக்கிறார்கள்.
இதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வலுச்சேர்க்கிறது. அவ்வாறானதொரு நபரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், சாதிக்கப்போவது என்ன என்பதைப் பற்றி, யாரும் பேசக் காணோம்.
இன்று, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலும் அந்நியக் கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கின்றது. இதைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் குறித்த உரையாடல்கள், எங்கும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில், வேட்பாளர்களின் நிலைப்பாடுகள், நழுவல் போக்குடையவையாகவே உள்ளன. இலங்கையின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான இனப்பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டாத, தீர்வை முன்வைக்காத வேட்பாளர்களுக்கு
இடையிலான தேர்தலால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்?
இப்போது, இலங்கையர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது கவனம் குவியா வண்ணம், பார்த்துக் கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் கவனத்தைத் திருப்பி, வாக்காளர்களை இலக்கு வைத்துப் பேரினவாத, குறுந்தேசிய உணர்வுகளைக் கிளறும் பொறுப்பற்ற கதைகள் பெருகுகின்றன. நாடாளுமன்ற அரசியல்வாதிகளின் நம்பகம் வீழ்கையில், அதிகாரத்தின் மீதும் பதவியின் மீதும் சொத்துகளின் மீதும் கொண்ட ஆவலால் உந்தப்படும் அரசியல்வாதிகளின் பச்சையான சந்தர்ப்பவாதம் காரணமாக, அவர்கள் மீது மக்களின் வெறுப்புக் கூட்டியுள்ளது.
இத்தகையதோர் அரசியல் குழப்பச் சூழலில், உண்மையாகவே மக்களை நோக்கிய சாத்தியமானதோர் அரசியல் மாற்று இருப்பின், அது வலியதொரு வெகுசன இயக்கத்தின் தோற்றத்துக்கும் மக்களின் நலனுக்கான அடிப்படை அரசியல் மாற்றத்துக்கும் வழிகோலும். ஆனால் அதற்கான வாய்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
அனைத்துத் தேசிய இனங்களினதும் சமத்துவத்தினதும் அதிகாரப் பரவலாக்கலினதும் சுயநிர்ணய உரிமையினதும் அடிப்படையில், தேசிய இனப்பிரச்சினையை விளிப்பதும், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்பதுமான ஓர் அயற்கொள்கையைக் கடைப்பிடிப்பதுமான ஒரு தேர்தல் கொள்கைப் பிரகடனத்துடன் ஒரு வேட்பாளரை அடையாளம் காண முடியுமா என்பதே, இத்தேர்தலின் பெரிய சவால். அவ்வாறான ஒரு வேட்பாளரைத் தெரியும் வரை அமைதி காப்பது நலம்.
குறித்தவொரு வேட்பாளருக்குத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருவோரிடம், தமிழ் மக்கள் கேட்க வேண்டிய சில கேள்விகள் என்ன? அவற்றுக்கான பதில்களைப் பெற்ற பின்னர், தேர்தல் குறித்தும் வக்களிப்பது குறித்தும் சிந்திக்க வியலும்.
1. இலங்கை இனப்பிரச்சினை குறித்து, வேட்பாளரின் நிலைப்பாடு என்ன?
2. இலங்கையின் தேசிய இனங்கள் அனைத்துக்குமான சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கத் தயாரா?
இவ்விரண்டு கேள்விகளுடனும் தொடங்கலாம். இலங்கையில் ஏனைய சிறுபான்மையினரின் உரிமைகள் வழங்கப்படும் வரை, தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்போவதில்லை. எனவே, இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையினரினதும் உரிமைகளுக்கான உத்தரவாதம் அளிக்கப்படும் வரை, தமிழ் மக்களுக்கு எதிர்காலம் கேள்விக்குறியே என்பதை நினைவில் வைத்திருப்பது நலம்.
தேர்தல்கள் அதிகாரத்துக்கான ஆவலின் விளைவால் உந்தப்படுபவை. அவை, மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை; இனியும் அவ்வாறு இருக்கப்போவதில்லை.
Average Rating