இ-சிகரெட் விற்பனைக்கு தடை !! (உலக செய்தி)
உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டு இறக்குமதிக்கும், விற்பனைக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை தடைசெய்து ஆணை வெளியிட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிக்கோட்டின், நீர், கரைகின்ற மற்றும் சுவையூட்டும் பொருட்களை கலந்து நீராவியாக உள்ளிழுப்பதுதான் வேப்பிங் எனப்படுகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக கருதப்படும் இது, புகைப்பழக்கத்தை விட்டுவிட உதவலாம் என்கின்றனர். ஆனால், இதனால் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்பு இதுவரை முழுவதும் தெரியவில்லை.
இந்த வேப்பிங் கருவிக்கும் இந்த ஆணையில் தடைவிதிக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்தியாவில் 100 மில்லியன் புகைபிடிப்போர் உள்ளதால், இ-சிகரெட் நிறுவனங்களுக்கு பெரிய சந்தை உருவாகும் வாய்ப்பு நிலவுகிறது.
இ-சிகரெட்டுக்கு தடை விதித்திருப்பதால், இதனை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம். பாரம்பரிய புகையிலை பொருட்களுக்கு தடையில்லை.
அதாவது உற்பத்தி, தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, விற்பனை, விநியோகம் மற்றும் இ-சிகரெட் தொடர்பான விளம்பரம் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இத்தகைய வேப்பிங் புகைப்பிடிப்பை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தனி ஸ்டைலாக இளைஞர்கள் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
சீனாவுக்கு அடுத்தபடியாக புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. புகையிலை பயன்பாடு சார்ந்த நோய்களால் நாட்டில் ஆண்டுக்கு 9 லட்சம் பேருக்கும் மேல் இந்தியாவில் மரணம் அடைகின்றனர்.
வேப்பிங் கருவியான இ-சிகரெட்டை ஆதரிப்பவர்கள், புகைபழக்கத்தை மக்கள் நிறுத்த இது உதவுகிறது என்றும் இ-சிகரெட்டை தடை செய்வதன் மூலம் அது மீண்டும் அவர்களை புகைப்பழக்கத்தை நோக்கி தள்ளும் என்றும் வாதிடுகின்றனர்.
ஆனால் இ-சிகரெட் தடையை முன்மொழிந்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, இளம் வயதினர் மத்தியில் வேப்பங் ஒரு தொற்றுநோய் போல மாறிவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
ஜூல் போன்ற மிக பிரபல இ-சிகரெட் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு இந்திய சந்தை ஏதுவாக கருதப்பட்டாலும், அமெரிக்கா அல்லது பிரிட்டனில் இருப்பதுபோல இல்லாமல் இங்கு அந்த நிறுவனத்தால் வளரமுடியவில்லை.
புகை இல்லாத புகையிலை பொருட்கள் மற்றும் வேப்பிங் கருவிகளுக்காக கடந்த 2018-ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 10 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறது.
உலகெங்கும் தொடர்ந்து சிறிய அளவில், அதே சமயம் சீரான அளவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறியானது வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆனால், வேப்பிங் கருவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
2011-ஆம் ஆண்டில் வேப்பர்கள் எனப்படும் இந்த கருவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக இருந்த நிலையில், 2018-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மேலும் வரும் 2021-ஆம் ஆண்டில் இந்த இ-சிகரெட் கருவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கும் மேலாக அதிகரிக்கும் என்று ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இ-சிகரெட்கள் பயன்பாட்டினால் உருவாகும் உடல்நலன் சார்ந்த பிரச்சனைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்தாண்டில் 450க்கும் மேற்பட்டவர்கள் வேப்பிங் பயன்பட்டால் நுரையீரல் தொடரான நோய்களால் இறந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இ-சிகரெட் பயன்பாடு, விற்பனை உள்ளிட்ட தடையை புதன்கிழமை இந்தியா அறிவித்துள்ளது. சுவை மற்றும் மணத்துக்காக சேர்க்கப்படும் பொருட்கள் அடங்கிய இ-சிகரெட்டுகளுக்கு செவ்வாய்கிழமை நியூ யார்க் மாகாணம் தடை விதித்தது. இவ்வாறு தடை விதித்த இரண்டாவது அமெரிக்க மாகாணம் நியூ யார்க் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating