மழைக்கால நோய்களை தடுப்போம்!! (மருத்துவம்)
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நடப்பாண்டில் கோடை மழை மட்டுமின்றி பருவமழையும் பொய்ததது. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பொழிந்தது. தற்போது கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வெயிலால் வாடிய உடல், மனது, மழையை கண்டு மகிழ்ந்தாலும், கூடவே இலவச இணைப்பாக வரும் நோய்களை கண்டு மக்கள் அச்சமடைகின்றனர். அச்சப்படவே தேவையில்லை. தடுப்பு நடவடிக்கைகளை தாராளமாக மேற்கொள்ளலாம். பெரும்பாலும் மழையில் நனையும் குழந்தைகள், முதியவருக்கு சளி, இருமல் தொந்தரவு அதிகம் ஏற்படும். சிலருக்கு வைரஸ் காய்ச்சல் தொந்தரவாலும், சளித்தொல்லை இருக்கும். மழைக்காலங்களில் வெளியிடங்களில் சுகாதாரமற்ற குடிநீர், பிரிட்ஜில் வைத்த தண்ணீர், குளிர்பானங்கள் அருந்துவதை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
இதுபோன்ற நேரங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துக்கடைகளில் கிடைக்கும் ஆவி பிடிக்கும் மாத்திரையை வாங்கி, நல்ல கொதிநீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். மூச்சுப்பயிற்சியிலும் ஈடுபடலாம். அடுத்த பெரிய தொந்தரவு கொசு…. மழைக்காலங்களில் வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள கொட்டாங்கச்சி, டயர், பாத்திரங்களில் சேரும் மழைநீரில் டெங்குவை உருவாக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் உருவாகின்றன. மற்றபடி கழிவுநீருடன் கலந்து வரும் மழை நீரால், மற்ற வகை கொசுக்கள் பரவுகின்றன. நன்னீரில் உருவாகும் கொசுக்கள் டெங்கு, மற்ற கொசுக்கள் மலேரியா உள்ளிட்ட காய்ச்சலை பரப்புகின்றன. முக்கியமாக, மலேரியா காய்ச்சல் ‘அனோபீலஸ்’ என்ற பெண் கொசு மூலம் உருவாகிறது. இந்த வகை கொசு நம்மை கடித்து, மற்றவரை கடித்தால் அவருக்கும் மலேரியா காய்ச்சல் பரவும்.
டெங்குவை பரப்பும் கொசுக்களே சிக்குன்குனியா காய்ச்சலையும் ஏற்படுத்துகிறது. மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால் காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். சுகாதாரமற்ற உணவுப்பண்டங்களை உண்பதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே, நன்கு காய்ச்சி ஆறிய குடிநீரை பருக வேண்டும். மழைக்காலத்தில் முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் 2 முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். தண்ணீர் ரொம்பவும் சூடாக இருக்கக்கூடாது. காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் தொந்தரவுகள் இருப்பவர்களை தவிர, அனைவரும் கண்டிப்பாகக் குளிக்க வேண்டும். மழை மற்றும் குளிர்காலத்தில் எளிதில் ஜீரணமாகாது. எனவே, காரம், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
எளிதில் ஜீரணமாகும் இட்லி, இடியாப்பம் போன்றவைகளை உண்ணலாம். காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பழங்களில் கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற வைட்டமின் ‘சி’ உள்ள பழங்களை உட்கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கூடுமானவரை மிதமான சூட்டுடனே சாப்பிடுவது நல்லது. மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் எடுக்கா விட்டாலும் கூட, குறைந்தது 2 லிட்டர் தண்ணீரையாவது ெரகுலராக குடிக்க வேண்டும். முக்கியமாக, வீட்டை சுற்றிலும் குப்பைகள், மழை நீர் சேகரமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடைகளை தினமும், போர்வைகளை 2 வாரத்திற்கு ஒருமுறை துவைத்து காய வைத்து பயன்படுத்த வேண்டும்.
Average Rating