வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 49 Second

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்…” இப்படி பெண் பெருமையை பற்றி சொல்லி வளர்க்கப்பட்டதால், சிறுவயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யாழினியின் மனதில் பற்றிக் கொண்டுள்ளது. அவரின் அந்த கனவு தான் அவரை தற்போது ஒரு ஆராய்ச்சியாளராக வடிவமெடுக்க வைத்துள்ளது. ஆராய்ச்சியாளர் ஆகவேண்டும் என்ற பெருங்கனவு குறித்து பகிர்ந்துகொள்கிறார் யாழினி.

‘‘மதிப்பெண் என்பது எண் மட்டுமே, கற்றல் என்பது வேறு என்று சொல்லும் தந்தை இருந்தாலும், எனக்கு சின்ன வயசில் இருந்தே படிப்பு மேல் தனி ஆர்வமுண்டு. அதனால் எப்போதும் வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திடுவேன். என் தந்தை தமிழ் மேல் அதீத பற்று கொண்டவர். அவரின் அந்த பற்று தான் என்னை பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படிக்க வைத்தார். அவர் படிக்க வைத்தார் என்பது மட்டுமில்லை, எனக்கும் தமிழ் மேல் ஆர்வம் இருந்த காரணத்தால் நானும் அவரின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

11ம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியில் கணினி அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். பத்து வருடம் முழுக்க தமிழில் மட்டுமே பாடங்களை படித்து வந்த எனக்கு இப்போது எல்லாமே ஆங்கிலம் என்ற போது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. 11ம் வகுப்பில் புதிதாக ஆங்கிலம் எல்லாம் ஆரம்பத்தில் இருந்து சொல்லித் தரமாட்டார்கள். அதனால் நானே என்னுடைய சொந்த ஆர்வத்தினால், ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் புரிந்து படிக்க ஆரம்பிச்சேன். என்னுடைய அந்த உழைப்பு தான் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற காரணமாக இருந்தது’’ என்றவர் கணினி துறையை விட்டு ஃபேஷன் டிசைனிங் துறையை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.

‘‘பள்ளியில் ஆர்வமாய் கணினி துறையை எடுத்து படிச்சேன். ஆனால் இரண்டு வருட படிப்புக்கு பிறகு எனக்கு கணினி துறையில் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவில்லை. அதற்கு காரணம் எனக்கு கலைகளின் மேல் தனி ஈடுபாடு உண்டு. படிப்பில் மட்டுமல்ல கலை சார்ந்த நிகழ்ச்சிகளில் பள்ளியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கேன். நான்காம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை நடனம், பாட்டு, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாட்டிய நாடகம்ன்னு நிறைய நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கேன். இது தான் என்னை வேற திசையில் சிந்திக்க தூண்டியுள்ளது. அதனால் நான் ஃபேஷன் டிசைனிங் துறையை தேர்வு செய்யலாம்ன்னு முடிவு செய்தேன்.

ஆனாலும் எனக்குள் ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தது. என் குழப்பத்தை என் பெற்றோர் புரிந்து கொண்டனர். அவர்கள் அதற்கான தீர்வு அளிக்க நினைத்தனர். என்னுடைய தடம் மாறாமல் இருக்க எனக்கு புரியவைத்தனர். அப்பொழுது புரிந்தது நான் என் கனவை விட்டு வேறு பாதையில் செல்லத் துணிந்துவிட்டேன் என்று. அதன் பிறகு தெளிவு பெற்று, கணினி துறையில் பொறியியல் படித்தேன். படிக்கும்போது நமது நாட்டு கல்வித் திட்டத்திற்கும் வெளிநாட்டு கல்வித் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்களை பற்றி நிறைய படித்து தெரிந்து கொண்டேன். அப்பொழுதே முடிவு செய்தேன். மேற்படிப்பை கண்டிப்பாக வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று.

பொறியியல் படிப்பின் 2 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன்’’ என்றவர் வாழ்வில் ஒரு பெரிய இடியை சந்தித்துள்ளார். ‘‘எனக்கு விருப்பமான படிப்பு… அடுத்த கட்டமாக மேற்படிப்பு வெளிநாட்டில் என்று ஒரு கனவோடு என் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் அதில் ஒரு பெரும் இடி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு எல்லாமே அப்பா தான். அவர் எனக்கு அப்பா மட்டும் இல்லை நல்ல தோழர், வழிகாட்டியும் கூட. என்னுடைய கல்லூரி மூன்றாம் ஆண்டில் எதிர்பாராத விதமாக என் தந்தையை இழக்க நேரிட்டது. அது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் வாழ்க்கை என்ற சக்கரம் உருண்டு கொண்டு தானே இருக்கும். அதனால் நானும் அம்மாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருக்க ஆரம்பித்தோம். அம்மாவின் கடமைகளும் அதிகரித்தது. இதனால் நான் வெளிநாட்டில் என் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவினை அவர்கள் மேல் திணிக்க விரும்பவில்லை. மேற்படிப்பு படிப்பதற்கான ஊக்கத்தொகை வழங்கும் பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க தொடங்கினேன். இதற்கிடையில் என்னுடைய கல்லூரி படிப்பும் முடிந்தது. கேம்பசிலும் தேர்வானேன்.

ஆனால் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவினால் கிடைத்த வேலைக்கு போகாமல் விட்டுவிட்டேன். இப்படியே ஆறு மாதம் கழிந்தது. வேலைக்கும் போகல, மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்க, படிச்சிட்டு வீட்டில் முடங்கி கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பிச்சாங்க. என்னால் அவர்களுக்கு பதில் அளிக்க முடியாமல் திண்டாடினேன். ஆனால் இவ்வளவு பிரச்னையிலும் என் தாய் எனக்கு பக்கபலமாக இருந்தார்’’ என்றவர் தன் கனவினை மூட்டைக் கட்டி வைத்து விட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.

‘‘வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற என் கனவு இதற்கு மேலும் பலிக்காது என்று தோன்றியது. எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை கோட்டை விட முடியாதுன்னு முடிவுக்கு வந்தேன். வாய்ப்பு வரும் வரை வேலைக்கு செல்ல முடிவு செய்தேன். அதற்கான நேர்முக தேர்வுகளில் கலந்து கொண்டேன். சில நிராகரிப்புகளுக்கு பின்னர், ஒரு சிறிய கம்பெனியில் வேலை கிடைத்தது. சம்பளம் குறைவு தான் என்றாலும் வேலை ஒன்று கிடைத்ததால், அதில் சேர்ந்தேன். இதற்கிடையில் என் நண்பன் மூலம் ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பது குறித்து கேள்விப்பட்டேன். அதற்கான நேர்காணலுக்கு சென்றேன்.

என்னதான் நண்பனின் ஆதரவு இருந்தாலும், திறமைக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு என்பது எனக்கு தெரியும். மேலும் அந்த நிறுவனமும்
திறமைசாலிகளை தான் தேர்வு செய்வார்கள் என்று நண்பன் மூலம் அறிந்தேன். ஆனால் தேர்வு கடினமாக இருக்கும் என்பதால், முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதிகம் சிந்திப்பதால் எந்த பயனும் இல்லையென அறிந்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். மொத்தம் 5 கட்ட தேர்வு நடைப்பெற்றது. இறுதி கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெற்றதாக கூறினார்கள்’’ என்றவர் பணிக்கு சேர்ந்த இரண்டே ஆண்டுகளில்
பதவி உயர்வு பெற்றுள்ளார்.

‘‘எனக்கு எப்போதும் ஒரு வேலை செய்தால் அதை திறம்பட செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். அந்த உழைப்பு தான் பணிக்கு சேர்ந்த இரண்டே ஆண்டுகளில் பணி நிரந்தரம் பெற்றது மட்டும் இல்லாமல், மூன்று முறை பதவி உயர்வும் பெற்றேன். நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்று எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால் என்னுடைய ஆழ்மனதில் வெளிநாட்டில் படிக்கச் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்து கொண்ேட இருந்தது. அப்பா எப்போதும் சொல்வார், ஒரு விஷயத்தை முயற்சிக்கும் வரை அதன் பலன் நமக்குத் தெரியாது. நம்பிக்கையை விட்டுவிடாமல் முயற்சி செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பார்.

உடனே ‘KGSP’, கொரிய அரசினால் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தேன். இந்திய தூதரகத்தின் பரிந்துரையின் வழியே ஏழு பேர் மற்றும் கொரிய பல்கலைக்கழகங்களின் வழியே ஏழு பேர் என மொத்தம் 14-15 மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் தேர்வு மூன்று சுற்றுகளாக நடக்கும். போட்டியும் கடுமையாக இருக்கும். உதவித்தொகை கிடைக்குதோ இல்லையோ… விண்ணப்பித்தோம் என்ற திருப்தியாவது இருக்கட்டும் என்று விண்ணப்பித்தேன். பல்கலைக்கழகத்திலிருந்து முதல் சுற்றில் தேர்ச்சி பெற்றதாக அழைப்பு வந்தது. மகிழ்ச்சியாக இருந்தாலும் மீதம் 2 சுற்று, அதிலும் தேர்ச்சி பெற வேண்டுமென்பதால் எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை.

4 மாதத்திற்கு பிறகு நான் அனைத்து சுற்றிலும் தேர்ச்சி பெற்று, மேற்படிப்புக்கான உதவித்தொகை உறுதி செய்யப்பட்டதாக இ-மெயில் வந்திருந்தது. அதை பார்த்ததும் எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை’’ என்றவர் கொரியா பயணிக்க ஆயுத்தமானார். ‘‘என்னுடைய படிப்பு செலவு மட்டும் இல்லாமல், விமான பயணச்சீட்டு, வாழ்க்கைச்செலவு என அனைத்துமே கொரிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். 2017 ஆகஸ்ட் மாதம் கொரியாவிற்கு பறந்தேன். KGSP விதியின்படி முதல் ஒரு வருடம் கட்டாயமாக கொரிய மொழியை முதல் மூன்று கட்டம் படித்து தேர்ச்சி பெற்றால் தான், முதுநிலைப் படிப்பிற்கான உதவித்தொகை வழங்கப்படும். கொரிய மொழியில் மொத்தமே ஆறு கட்டம் தான்.

மூன்று கட்டமும் தேர்ச்சி பெற்றேன். எனது முதுகலைப் படிப்பின் உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது மட்டுமல்லாமல் உதவித்தொகையையும் உயர்த்தி கொடுத்தார்கள். இப்பொழுது கொரியாவில் உள்ள ‘சுங்க்கியூன்க்வான் பல்கலைக்கழக’த்தில் (SKKU – Sungkyunkwan University) இயந்திரம் மற்றும் கணினிப்பொறியியல் முதலாமாண்டு வெற்றிகரமாக படித்து முடித்துவிட்டேன். 2020 ஜூன் மாதம் இதற்கான பட்டமும் பெற்றுவிடுவேன். மேலைநாட்டில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது.

என் படிப்பின் ஒரு பகுதியாக ஆராய்ச்சிப் பணியையும் மேற்கொண்டு வருவதனால் நான் எதிர்பார்க்காத ஆராய்ச்சியாளர் என்ற கனவும் நிறைவேறியுள்ளது. பட்டம் பெற்று பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதே என்னுடைய அடுத்த கனவு. அதிர்ஷ்டம் எப்போது தான் வரும். ஆனால் விடா முயற்சி எப்போதுமே நமக்கு ைகக்கொடுக்கும். என்னுடைய கனவும் என் விடாமுயற்சியால் தான் சாத்தியமானது. முயற்சி எடுத்தால் எதுவும் சாத்தியம் தான்’’ என்றார் யாழினி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுழலும் ‘தூஸ்ரா’வும் கவிழும் தன்மானமும்!! (கட்டுரை)
Next post கொட்டற மழையிலும் அடை சாப்பிடலாம்! (மகளிர் பக்கம்)