கொட்டற மழையிலும் அடை சாப்பிடலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 56 Second

‘‘வாங்க சார்… என்ன சாப்பிடறீங்க… அடை, பணியாரம் இருக்கு’’… புன்சிரிப்போட வரவேற்கிறார் பூங்கோதை. இவரை மயிலாப்பூர் தெப்பக்குளத் திற்கு எதிரே தினமும் மாலை பார்க்கலாம். சின்ன வண்டிக் கடைதான். ஆனால் சூடாக சுவையான அடை மற்றும் பணியாரங்கள் தான் இவரின் ஸ்பெஷல். அதுவும் சாதாரணஅடை இல்லை. ஆரோக்கியமான கேழ்வரகு மற்றும் கம்பு அடை இவரின் வண்டிக்கடையில் கிடைக்கும். அது மட்டும் இல்லை இனிப்பு மற்றும் கார பணியாரமும் இவரின் கடையில் ஃபேமஸ்.

இவரின் ஸ்பெஷாலிட்டியே வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்பதான், அடையோ அல்லது பணியாரமோ எதுவாக இருந்தாலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சூடாக பரிமாறுகிறார். ‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மயிலாப்பூர் தான். சின்ன வயசில் இருந்தே இந்த ஏரியாவில் வளர்ந்ததால் எனக்கு ஒவ்வொரு தெருவும் அத்துப்படி. எங்க வீட்டில் எல்லாருக்கும் பரம்பரை வியாபாரம் காய்கறி கடை தான். அம்மாவும் காய்கறி கடை தான் வச்சு இருந்தாங்க. நான் சின்ன வயசா இருக்கும் போதே அப்பா இறந்துட்டார்.

அதனால அம்மாவின் காய்கறி கடைதான் எங்க வீட்டின் மொத்த வருமானம் என்றாச்சு. நானும் அம்மாவுடன் கடையில் என்னால் முடிந்த சின்னச் சின்ன வேலையை செய்வேன். காலை ஐந்து மணிக்கு அம்மாவோடு காய் வாங்க போவேன். அப்புறம் கடையில் அவங்களுக்கு கூடமாட உதவி செய்திட்டு பள்ளிக்கு போவேன். பள்ளிப்படிப்பையும் என்னால் தொடர்ந்து படிக்க முடியல. எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதன் பிறகு அம்மாவுடன் கடையில் இருந்து பார்த்துக் கொள்வேன்.

அப்படித்தான் கடை எப்படி நடத்தணும், வாடிக்கையாளரிடம் எப்படி பேசணும், பொருட்களை எப்படி வாங்கணும்ன்னு எல்லாம் கத்துக் கொண்டேன். இதற்கிடையில் எனக்கு கல்யாணமும் ஆச்சு. என் கணவர் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். பிளம்பர் வேலை என்றாலும், அதில் நிரந்தர வருமானம் இருக்காது. வேலைக்கு ஏற்ப தான் வருமானம். அதனால் குடும்பத்தை நகர்த்த மிகவும் கஷ்டமா இருந்தது. இது இப்படி இருக்க நான் கருவுற்றேன். அழகான ஒரு மகனும் பிறந்தான்’’ என்றவர் அதன் பிறகு பல பிரச்னைகளை எதிர்த்து போராடியுள்ளார்.

‘‘என் மகன் பிறந்த போது மற்ற குழந்தைகள் போல் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அவன் வளர வளர அவனுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டது. அதாவது அவன் காது மடலுக்கு மேல் கட்டி போல் தோன்ற ஆரம்பிச்சது. அதன் தாக்கம் அவன் உடல் ரீதியாகவும் பல பிரச்னைகள் கொண்டு வந்தது. நானும் போகாத ஹாஸ்பிடல் இல்லை பார்க்காத டாக்டர் இல்லை. யாருக்கும் இது எதனால் வருதுன்னு தெரியல. அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்ன்னு சொல்லிட்டாங்க.

அம்மாவை தொடர்ந்து நானும் காய்கறி கடை போட ஆரம்பிச்சேன். காரணம் என் கணவரின் வருமானத்தை கொண்டு என்னால் வீட்டு செலவு மற்றும் என் குழந்தையின் மருத்துவ செலவு எல்லாம் பார்க்க முடியல. என்னால் முடிந்த வரை வருமானம் ஈட்ட நினைச்சேன். அப்பதான் என் கடைக்கு அருகே ஒரு பாட்டியம்மா கடை போட்டு இருந்தாங்க. அவங்க சொல்லி காஞ்சி காமகோடி மருத்துவமனைக்கு என் மகனை அழைத்து சென்றேன். அவங்க தான் அறுவை சிகிச்சை செய்தாங்க. கிட்டதட்ட மூணு கிலோ எடையில் இருந்தது அந்த கட்டி. உடனே அது என்னென்னு லேப்பில் டெஸ்ட் செய்து பார்த்தாங்க. பார்த்திட்டு இது இப்படியே இருக்காது.

வேறு இடத்தில் வளர்வதற்கான வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. ஒவ்வொரு தடவை அந்த கட்டி வளரும் நானும் அறுவை சிகிச்சை செய்து எடுப்பேன். இப்பக்கூட கழுத்து பக்கம் வளர்ந்து வருது. இந்த வருடம் அறுவை சிகிச்சை செய்யணும். இப்ப என் மகனுக்கு 15 வயதாகிறது. மெக்கானிக் குறித்து ஒரு வருடம் டிப்ளமா படிக்கிறான். ஆனால் அந்த வயதுக்கான வளர்ச்சி அவனுக்கு இல்லை. எனக்கு அவன் படிச்சிட்டு அவனுக்கான ஒரு வேலை மற்றும் அவனை பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தா போதும்’’ என்றவர் காய்கறி கடை மட்டும் இல்லாமல் பூக்கடை, பொரி கடலை கடை என சீசனுக்கு ஏற்ப கடை வைப்பது வழக்கமாம்.

‘‘இப்பதான் அடை கடை ஆரம்பிச்சு நாலு வருஷமாச்சு. அம்மா நல்லா சமைப்பாங்க. அவங்களின் கைப்பக்குவம் தான் எனக்கும் இருக்குன்னு நினைக்கிறேன். அம்மா வீட்டில் கேழ்வரகு, கம்பு அடை மற்றும் பணியாரம் எல்லாம் செய்வாங்க. அதை பார்த்து தான் நான் கத்துக்கிட்டேன். இந்த கடை போடுவதற்கு முன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தேன். அங்க காபி டீ போடுவது தான் என்னோட வேலை. காலையில் கம்பெனிக்கு போயிடுவேன். அவங்க பிரேக் நேரத்தில் எல்லாருக்கும் காபி, டீ போட்டு தரணும். அப்புறம் முதலாளியை பார்க்க யாராவது வருவாங்க. அவங்க காபி கேட்டா போட்டு தருவேன்.

ஏழு வருஷம் இங்க வேலைப் பார்த்தேன். இது ஒரு பக்கம் இருந்தாலும், வரலட்சுமி நோன்பு அப்போ மட்டும் பூக்கடை போடுவேன். அதே போல் பிள்ளையார் சதுர்த்தி மற்றும் ஆயுத பூஜையின் போது பொறி பொட்டுக்கடலை கடை போடுவேன். அந்த ஒரு நாள் தான். மற்ற நாட்கள் எல்லாம் இதை போட மாட்டேன். இந்த சமயத்தில் தான் ஏன் சாப்பாடு சம்பந்தமா தனியா ஒரு கடையை நாமே நடத்தக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படித்தான் இந்த அடைக் கடையை ஆரம்பிச்சேன். மயிலாப்பூரில் சமோசா, பானிபூரி, வடைன்னு எல்லா கடையும் இருக்கு. ஆனா இது போன்ற கடை இல்லைன்னு கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்ன்னு ஆரம்பிச்சேன்.

கேழ்வரகு, கம்பு மற்றும் பருப்படை தவிர வாழைப்பூ வடை, இனிப்பு மற்றும் கார பணியாரமும் கிடைக்கும். மாலை நாலரை மணிக்கு தான் கடையை ஆரம்பிப்பேன். இரவு பத்து மணி வரை ஓடும்’’ என்றவர் தனி ஒரு பெண்ணா கடையை நடத்துவது அவ்வளவு சுலபமில்லை என்றார்.
‘‘என்னதான் பெண் சுதந்திரம்னு பேசினாலும், தெருவில் தள்ளுவண்டியில் கடை போட்டாலும் தப்பான கண்ணோட்டத்தில் தான் வராங்க. அதை எல்லாம் பார்த்தா நான் என் குடும்பத்தை பார்க்க முடியாது. எல்லாவற்றையும் சமாளிச்சு தான் ஆகணும். அதுக்கான தைரியம் எனக்கு கடவுள் கொடுத்து இருக்கார்.

வருமானம் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் மாறுபடும். சில நாள் 2000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். சில நாள் 1000 ரூபாய் தான் வரும். நான் முதன் முதலில் கடைப் போட்ட போது 200 ரூபாய் தான் விற்பனையாச்சு. ஒரு நாளைக்கு கேழ்வரகு அடைக்கான மாவு மட்டுமே பத்து கிலோ அரைக்கிறேன். கம்பு அவ்வளவா போகாது. பணியாரம் விரும்பி சாப்பிடுறாங்க. சிலர் தனிப்பட்டு ஆர்டர் தருவாங்க. அதுவும் செய்து தரேன். மழைக் காலத்தில் வியாபாரம் கொஞ்சம் அடிபடும். கொட்டற மழைனாலும் தார்பாய் போட்டு கடை வச்சிடுவேன்.

கடை இருக்கும்ன்னு சிலர் நம்பி வருவாங்க’’ என்றவர் கஷ்டத்திலும் தன் அண்ணன் மகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.‘‘ஒரு விபத்தில் என் அண்ணன், அண்ணி இரண்டு பேருமே இறந்துட்டாங்க. அவங்க மகளை நான் தான் எடுத்து வளர்க்கிறேன். அப்ப அவளுக்கு ஐந்து வயசு. இப்ப ஆறாம் வகுப்பு படிக்கிறா. கொஞ்சம் கொஞ்சமா கடன் வாங்கித்தான் இந்த தள்ளுவண்டியை வாங்கினேன். இப்ப ஓரளவுக்கு என் குடும்பத்துக்கு என்னால் சப்போர்ட் செய்ய முடியுது. இப்ப நிரந்தரமா ஒரு கடை போடணும். பலர் முழு நேர கடை வைக்க சொல்லி கேட்கிறாங்க. அதுக்கான இடம் பார்த்திட்டு இருக்கேன். இடம் அமையல. வாடகை அதிகமா இருக்கு. முதல்ல காசை தயார் செய்திட்டு தான் அதில் இறங்கணும்’’ என்றார் கேழ்வரகு அடையை சூடான கல்லில் தட்டியபடி பூங்கோதை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)
Next post நடுவானில் எரிபொருள் காலியான விமானம்!! (வீடியோ)