ச்சும்மா அதிருதுல்ல! (மகளிர் பக்கம்)
கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பி ரம்யா ஹரிதாஸ். சமீபத்தில் இவர் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.கேரள வரலாற்றில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற இரண்டாவது பட்டியலினத்து பெண் ரம்யா. இவரது தந்தை ஹரிதாஸ் தினசரி கூலித் தொழிலாளி. தாய் ராதா தையல் தொழில் செய்து கொண்டே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.
சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியின் மீது ரம்யாவுக்கு பற்று இருந்தது. கூடவே சமூக சேவகியாகவும் வலம் வந்தார். துவக்கத்தில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களுக்காகப் போராடத் தொடங்கினார். தன்னால் முடிந்த உதவிகளை அம்மக்களுக்கு செய்து வந்தார். விளைவு கேரள மாநிலம் குன்னமங்கலம் பஞ்சாயத்து பிரசிடென்ட் பதவி அவரைத் தேடி வந்தது.
ரம்யா இசைக்கல்லூரியில் படித்தவர் என்பதால் செல்லும் இடங்களில் எல்லாம் பாடல்களைப் பாடி மக்களை பெரிதும் கவர்ந்தார்.தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
இவரது நடவடிக்கைகள் ராகுல்காந்தியின் கவனத்தை ஈர்த்தது. ரம்யாவை டெல்லிக்கு வரவழைத்து பாராட்டினார் ராகுல். இந்நிலையில் மக்களவை தேர்தலில் கேரளாவின் ஆலத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ரம்யாவுக்கு வழங்கப்பட்டது. இந்த தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையாகும்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் இங்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் வெற்றி பெறும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆலத்தூர் தொகுதி வரலாற்றில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை 1.55 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரம்யா வெற்றி பெற்றார்.
“நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறேன். மக்களின் தேவை என்ன என்பது தெளிவாக எனக்குத் தெரியும். ஒருவேளை எம்.பி ஆனால் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்காக செயல்படுவேன்” எனச் சொல்லியதுடன், விமர்சனங்களைக் கடந்து, மக்களைத் தெருத்தெருவாக சென்று சந்தித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது, ரம்யா மிகவும் எளிமையாக நடந்து கொண்டது, பிரசாரத்தில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வாக்காளர்களைக் கவர்ந்தது என மக்கள் மனதில் தொடர்ந்து இடம்பெறத் தொடங்கினார்.
எம்.பி. ஆன பிறகும் ரம்யா தனது எளிமையைக் கைவிடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட ஒரு வயலில் மற்ற பெண்களோடு இணைந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டார்.
வயலில் இறங்கி டிராக்டரும் ஓட்டினார். இந்தக் காட்சிகளை வீடியோவாகவும் பதிவு செய்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். நிமிடத்தில் இவரின் பதிவு வைரலானது. பலரும் ரம்யா ஹரிதாசிற்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், இதுபோல் மண்ணில் இறங்கி வேலை பார்க்கும் மக்கள் பிரதிநிதிகள்தான் வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மஹுவா மொய்த்ரா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.
தன்னுடைய கன்னிப் பேச்சால் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா சமூக வலைத்தளங்களில் சட்டென வைரலானார்.அரசியலுக்கு வந்த துவக்கத்தில், நான் எதை விரும்புகிறேன் என்பது எனக்குத் தெரியும் என தனது கருத்தை ஆணித்தரமாக பத்திரிகை பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார்.
தொலைக்காட்சி நேரலையில் பங்கேற்றவர், தொகுப்பாளர் தனது கருத்தைக் கூறப் போதிய நேரம் தரவில்லை என்று, தனது விரலை தொகுப்பாளரை நோக்கி நீட்டி சர்ச்சையில் சிக்கினார். சில்ஷர் விமான நிலையத்தில் நடந்த போராட்டத்தில், தன்னைத் தடுக்க முயன்ற பெண் போலீஸை தடுத்து, காயப்படுத்தி வீடியோவில் வைரல் ஆனார். தற்போது மக்களவையில் பி.ஜே.பியின் கொள்கைகளை எதிர்த்து உரையாடிப் பிரபலமாகி இருக்கிறார் மஹுவா. மஹுவா மொய்த்ரா பிறந்தது அஸ்ஸாமில். வளர்ந்தது கொல்கத்தாவில்.
பொருளாதாரம் மற்றும் கணிதம் படித்தவர் அமெரிக்காவில் இன்வெஸ்மென்ட் பேங்கராக கைநிறைய சம்பளத்தில் பணியில் இருந்து இருக்கிறார். தனது முப்பதாவது வயதில் தான் பார்த்த வங்கி வேலையை விடுத்து அரசியலில் நுழைய முயற்சித்து குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வர, அவர்களை மீறி அமெரிக்க வேலையை துறந்து இந்தியா வந்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், பிறகு திரிணாமுல் காங்கிரஸில் தன்னை இணைத்து அக்கட்சியின் எம்.எல்.ஏ ஆனார். மக்களோடு மக்களாகத் தொகுதிப் பணிகளை முன்னெடுத்தார்.
விளைவு கிருஷ்ணாநகர் தொகுதியில் 63,218 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புதிய எம்.பிக்களை கொண்ட நாடாளுமன்றத்தின் மழைக்கால முதல் கூட்டத் தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா புயலெனக் கிளம்பி தனது உரை மூலம் பாஜகவின் கொள்கைகளை அனல் பறக்கச் சாடினார். பலத்த கூச்சல்களுக்கிடையே பேசத் துவங்கியவர் பா.ஜ.க-வை கடுமையாக துவசம் செய்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
“அரசியலமைப்பை ஆதரிக்கும் பக்கமா அல்லது அதை சவக்குழிக்குள் புதைக்கும் பக்கமா… வரலாற்றின் எந்தப் பக்கத்தில் இருக்க விரும்புகிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும். இந்த நாடு எல்லாப் பகுதிகளிலும் சிதைந்திருக்கிறது. கண்களை அகலத் திறந்தால் மட்டுமே உண்மையைக் காண முடியும்’’ என்றவர், இங்கு வெறுப்பு அரசியல் கும்பல் நடத்தும் குற்றங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளது, மனித உரிமைகளை அவமதித்தல், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், ஊடகங்களை கட்டுப்படுத்துதல் ஆகிய அத்தனை அறிகுறிகளும் இந்தியாவில் காணப்படுகிறது எனவும் எச்சரித்துள்ளார்.
அமைச்சர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றதையே காட்ட முடியாதபோது, ஏழை மக்கள் இந்த நாட்டைச் சார்ந்தவர்கள், தான் என்பதற்கான சரியான சான்றிதழை காட்ட வேண்டுமென வற்புறுத்தப்படுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பா.ஜ.க எம்.பிக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிய நிலையில், “இந்த அறையில் தொழில்முறை ஹேக்கர்களுக்கு இடமில்லை. சபையை ஒழுங்காக நடத்தவிடுங்கள்” எனவும் பதிலடி கொடுத்தார்.
Average Rating