குளிர்காலக் கொண்டாட்டம்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 42 Second

புதுமையான இடங்களுக்கோ, நாடுகளுக்கோ செல்லும்பொழுதெல்லாம், புதுவிதமான பழக்க வழக்கங்களைக் காணுவதும், வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதும் நமக்குப்புது அனுபவத்தை தருகின்றன.

பலமுறை மேற்குலகிற்குப் பயணம் சென்றிருந்தாலும், குளிர்கால அனுபவம் என்பது மறக்க முடியாத அனுபவம்! ‘ஐயோ, இப்படி ஒரு குளிரா!’ என்று இங்கு நாம் வியக்கும் தருணம், அங்கு வீடுகளும், வண்டிகளும் உறைந்த நிலையில் காணமுடிந்தது. ‘அண்டார்டிகா கண்டம்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

பனி உறைந்திருக்கும் அக்கண்டத்தில், மனிதர்கள் வாழ்க்கை நடத்துவதில்லை. அதேபோன்ற சீதோஷ்ண நிலை கொண்ட ‘மினியாபோலிஸில்’ – 550-யில் புதிய அனுபவம் பெற்றது ஒரு புதிய பாடத்தைக் கற்றளித்தது என்றே சொல்லலாம். இவற்றையெல்லாம் மக்கள் எப்படி எதிர்கொண்டு, தங்கள் வாழ்க்கை முறையை அதற்கேற்றபடி சந்தோஷமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியப்படும் விஷயம். பனி மழையில் சந்தோஷமென்றால், அதையே கொண்டாட்டமாக மாற்றி விட்டால், பனி என்ன? வெயில் என்ன? அவ்விடத்தின் குளிர்காலக் கொண்டாட்டங்களைப் பார்ப்போமா?

பலப்பல இடங்களைப் பார்ப்பதும், பல்வேறு விதமான மனிதர்களை சந்திப்பதும், பலவிதமான கலாச்சாரங்களைக் கண்டு பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வதும் சிலரின் பொழுதுபோக்கு மட்டுமில்லாது, அது ஒரு அனுபவக்கல்வி என்றுகூட சொல்லலாம். வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லாது, அதன்மூலம் சில பல கற்றலும் நம் அறிவுப்பசிக்கு உணவாகலாம்.

படிப்பு அறிவுடன், அனுபவ அறிவும் கிடைக்கிறது. கண்களுக்கு விருந்தாகும் இடங்களை ரசிக்கத் தெரிந்தால் போதும். அதன் ஒவ்வொரு நுணுக்கத்தையும் நம்மால் அனுபவிக்க முடியும், அத்துடன் மனிதர்களின் வாழும் முறை, பொழுது போக்குகள், மற்றவரிடம் அவர்கள்
நடந்துகொள்ளும் முறை, வாழ்வாதாரம் போன்றவற்றை தெரிந்துகொள்வதும் ஒரு சுகமான அனுபவம். ஏதோ, இடங்களைப் பார்த்தோம், பொழுது போக்கினோம் என்றில்லாமல் தெரியாதவர்களுக்கும் நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கும் தெரியப்படுத்துவது ஒரு கலை. சில பேருக்கு அதிசய விஷயங்களைக் கேட்டாலோ, படித்தாலோ புல்லரிக்கும்.

பலமுறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டாலும், பலப்பல இடங்களைக் கண்டுகளித்தாலும் இப்படி ஒரு குளிரைப் பார்த்ததேயில்லை. தொலைக்காட்சிகளிலும், படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பனியில் கழித்தது உண்மையில் கனவா, நிஜமா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீர் பனியை நிறைய படங்களில் பார்த்திருந்தாலும், இத்தகைய -51 டிகிரியில் நடந்து செல்வது எனக்கே ஒரு கனவுபோல்தான் தோன்றியது.

என் சகோதரன் ஒரு விஞ்ஞானி என்பதால், ‘அண்டார்டிகா’ கண்டம் சென்று வந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளான். மனிதர்களே இல்லாத, பனி மட்டுமே நிறைந்த கண்டம். ஆராய்ச்சி அனுபவங்கள் இவற்றை அறிந்தபின்னும் எனக்குள் ஏன் ஆச்சரியம் ஏற்பட்டது? இத்தகைய குளிர்காலப் பனியை, வீட்டை விட்டு தலைகாட்ட முடியாத அளவில் இருந்தும் அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவது என்பது இங்குள்ள மக்களின் மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது என்றே சொல்லலாம்.

துன்பத்திலும் இன்பம் காட்ட துடிப்பதுபோல, வாழ்வாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு அத்தகைய சீதோஷ்ண சூழலையும் விழாவாகக் கொண்டாடுவது என்பது இந்த ‘மினியாபோலிஸ்’ நகரம்தான் என்று நான் நினைக்கிறேன்.

இங்குள்ள ‘ஜீரோ’வுக்குக் கீழே வரும் சீதோஷ்ண நிலை குறித்து என் மகன் ஒவ்வொரு முறையும் படங்கள் மூலம் விளக்கியுள்ளான். ‘ஐயோ! இப்படி ஒரு பனியா!’ என்று ஆச்சரியப்பட்டிருந்தேன். எனக்கும் என் கணவருக்கும் இந்த குளிர்காலப் பிரயாணம் வாழ்க்கையின் முதல் ‘குளிர் பிரயாணம்’ என்றே சொல்லலாம். தவிர்க்க முடியாத ஒருசில காரணங்களுக்காக, இந்தியாவின் ‘டிசம்பர்’ மாதக் ‘குளிரை கூட்டுத்தொடர்’ என்பார்களே! அதுபோல் நாங்கள் குளிர்கால உல்லாசத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டோம். யாரிடமிருந்து என்று கேட்டால், ‘குட்டிக் குழந்தைகளிடமிருந்து’ என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.

பலமுறை கோடையை உல்லாசமாகவும், ஃ‘பால்’ (fall) என்று சொல்லக்கூடிய நிலையில் அனைத்தும் உதிர்ந்து பின், புதிய துளிர் வண்ணமயமாக காட்சித்தரும் தருணங்களையும் இதே ‘மினியாபோலிஸில்’ கண்டுகளித்து ஆனந்தமடைந்தோம். இது முதல் ‘குளிர்கால’ பிரயாணம் என்பதால், இந்தியாவிலிருந்தே மிகவும் தயாரான நிலையில், பனியை எதிர்கொள்ளத் தேவையான ஆடைகளைக் கொண்டு வந்திருந்தோம்.

என் சகோதரன் ‘அண்டார்டிகா’வில் பயன்படுத்திய பொருட்கள் இன்றைய நிலையில் எங்களுக்குப் பயன்பட்டன. ஆனாலும் இத்தகைய காலகட்டம் மூன்று நான்கு மாதங்களுக்கு, தினமும் குளிர்கால உடைகள் தேவைப்பட்டன. இந்தியாவிலேயே இந்தப் பனியைக் குறித்து பலர் பயமுறுத்தினார்கள். இருப்பினும், அவசியம் கருதி, சிறிது துணிச்சலுடன்தான் புறப்பட்டோம்.

‘பாரிஸ்’ வரை பயணித்து, பின் அங்கிருந்து ‘மினியாபோலிஸ்’ நேரே வந்தோம். ‘மினியாபோலிஸ்’ அடைந்து ‘கஸ்டம்ஸ்’ முடித்துவிட்டு பெட்டிகளையும் சேகரிக்கத் தொடங்கினோம். எங்களுடன் வந்து இறங்கிய அனைவரும் சென்று விட்டனர்.

நாங்கள் மட்டும் பெட்டிகளுக்காக மீண்டும் மீண்டும் அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். நான்கு பெட்டிகளில் ஒரு பெட்டி மட்டுமே கிடைத்தது. மூன்று பெட்டிகள் வந்து சேரவில்லை. அது ஒருபுறமிருக்க, எங்கள் மகனும் வந்தபாடில்லை.

நாங்கள் நின்ற இடத்திலிருந்து ‘ஃபோன்’ பேசவும் கூடாது. மீண்டும் மீண்டும் ‘குறுஞ்செய்தி’ அனுப்பிக்கொண்டிருந்தேன். அவனும் ‘இதோ வந்துவிட்டோம்’ என்று செய்தியை அனுப்பிக்கொண்டேயிருந்தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். ஒரு வழியாக மிக ‘லேட்டாக’ கேட்டின் அருகில் நிற்பதாக செய்தி வந்தது.

ஒரே ஒரு பெட்டியுடன் நாங்கள் முழித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அவன் பின்புறமாக ஓடிவந்து எங்களைத் தழுவினான். அப்பொழுது பெட்டி வராததுகூட எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டியது. பின் வராத பெட்டிகளுக்கு ‘கம்ப்ளெயிண்ட்’ எழுதித்தந்துவிட்டு புறப்பட்டோம்.

வரும்பொழுதே பனிப்புயலைக் கொண்டு வந்தீர்களா? என்று மகனும், மருமகளும் கேட்கும்பொழுதுதான் எங்களுக்குப் புரிந்தது, அந்த சமயம் வெளியில் ‘பனிப்புயல்’ பெய்து கொண்டிருந்தது என்பது. விமான நிலையத்திற்குள் இருந்ததால் வெளியே இருக்கும் பனியின் தாக்கம் எங்களுக்கு தெரியவில்லை. வெளியே வந்தால் ‘ஊ ஊ’ என்ற சப்தத்துடன் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. எங்கள் மகன் ‘லெதர்’ உடைகள் மூலம் எங்களின் தலை முதல் பாதம் வரை மூடச் செய்து பின்னர் வெளியே காருக்கு அழைத்துச்சென்றனர். சென்னையின் டிசம்பர் பனியை பார்த்து பழகிய எங்களுக்கு, அங்கு பொருட்கள் உறைந்து கிடப்பதைப் பார்த்து ரத்தமே உறைந்து விட்டது!

அண்டார்டிகா மனிதர்கள் இல்லாத இடம். மினியாபோலிஸ் கல்லூரிகள், மிகப்பெரிய மென்பொருள் அலுவலகங்கள் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த சமூகம் என அனைத்தும் சூழ்ந்த ஒரு குட்டி உலகம் என்றே சொல்லலாம். வருடத்தில் குறைந்தபட்சம் நான்கைந்து மாதங்களாவது உறைபனி, பனி மழை இங்கு சகஜம்.

ஒரு முறை ஏப்ரல் மாதம் இங்கு வந்த போது, பனிமழை பெய்துக் கொண்டு இருந்தது. அப்போது வீட்டு வாசல்களில் உறைந்திருக்கும் பனியை கண்ணாடி வழியாக பார்ப்பது வழக்கம். அப்பொழுது, என் மகன் டிசம்பர் – ஜனவரியில் பனியின் தாக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லுவான். இப்பொழுது தான் அந்த சீசனையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த சீசன் பொழுது, ஜன்னல் கதவுகளை யாருமே திறக்க மாட்டார்கள். சின்ன துவாரம் இருந்தாலும் அடைத்துவிடுவார்கள். அதன் வழியாக ‘ஜில்’ என்னும் குளிர்காற்று ‘சுளீர்’ என உள்ளே வந்து அடிக்கும். வீட்டின் உட்புறங்களில் வெப்பம் பரவுவதற்காக ‘ஹீட்டர்’ வசதி இருக்கும்.

அதனால் வெளியிலிருந்து வரும் குளிரை முழுவதும் தவிர்க்க வேண்டும். கார்களிலும், ‘ஹீட்டர்’ மற்றும் ‘ஏ.சி’ வசதி இருப்பதாலேயே, இவர்கள் வாழ்க்கை மிகச் சாதாரணமாக நடக்க சாத்தியமாகிறது என்றே நினைக்கிறேன். தூசி, குப்பை போன்றவை பெயருக்குக்கூட காணப்படுவதில்லை.

இதற்கிடையில் வந்து சேர்ந்த இரண்டு தினங்களில், எங்களின் மற்ற பெட்டிகளும் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தன. ‘மினியாபோலிஸில்’ அமைந்துள்ள வீடுகளைப் பார்க்கும்பொழுது, எனக்கு ‘கார்ட்டூன்’ படங்களில் காணப்படும் வீடுகள் போன்று தோன்றும். மிகப்பெரிய நாடு, வசதி வாய்ப்புகள் அதிகமுள்ள நாடு.

ஆனால் வீடுகள் ஏன் ஒன்றுபோல் பார்க்க சிறியதாகவும், குட்டி, குட்டி ஜன்னல்கள், சிறிய வாசற்கதவுகள், மேற்பாகம் கூரை வடிவம் என எனக்குள் பலமுறை வியந்ததுண்டு. பலமுறை வந்து பல அனுபவங்கள் கூடியபின்தான் மிகத்தெளிவாகப் புரிகிறது, அனைத்திலும் ஒரு காரணமுண்டு என.

இந்தியாவைப்போல் பெரிய பெரிய சிமெண்ட் கட்டடங்கள், இந்த தட்ப வெப்பத்திற்கு சரிவராது என்பதால், முழுக்க மரத்தினால் தான் இங்கு வீடுகளை அமைக்கிறார்கள். பனி சூழ்ந்து விடுவதால், கட்டடங்கள் பாதிக்காத விதத்தில் நிபுணத்துவம் பெற்றதாக வடிவமைக்கப்படுகிறது. எனவே பார்ப்பதற்கு சிறிய வீடு போன்று காணப்பட்டாலும், உள்ளே நுழைந்தால் மிகப்பெரியதாய் காணப்படும்.

விமானங்கள் பார்க்க சிறியதுபோன்று காணப்பட்டாலும், உள்ளே எவ்வளவு பேர் அமர்ந்து செல்ல முடிகிறது. அதுபோல் தான் இந்த வீடுகளும். தரைமட்டம், கீழ்தளம் (Basement), முதல் தளம் என மூன்றடுக்கு கொண்ட வீடுகள் இங்கு ஏராளம். வீட்டை விட இங்குள்ள தோட்டங்கள் பல மடங்கு பெரியவை. பனியில் அனைத்தும் உறைந்து போனாலும், வசந்த காலம் வரும்பொழுது எங்கு காணிணும் வண்ணமயம்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உழைப்பால் உயர்ந்தேன்!!! (மகளிர் பக்கம்)
Next post பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு !! (மருத்துவம்)