இனப் பிரச்சினை: எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்!! (கட்டுரை)
கடந்த நான்காண்டு காலங்களில், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததையிட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறைகூறியிருக்கிறார்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கக்கூடிய வகையில் அரசமைப்பை மாற்றியமைக்காது, நான்காண்டுகளை வீணடித்தாகவும் அரசாங்கத்தை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த வாரம், யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, முற்றிலும் தவறான குற்றச்சாட்டல்ல; அதேவேளை, முற்றிலும் நியாயமான குற்றச்சாட்டுமல்ல.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பொன்று நிறைவேற்றிக் கொள்ளப்படுமென, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தனர். ஆயினும், அது நிறைவேறவில்லை; அது உண்மைதான்.
ஆனால், அரசாங்கம் அது தொடர்பாக எதுவுமே செய்யவில்லை என்று கூறமுடியாது. அதற்காக அரசாங்கம், சகல அரசியல் கட்சிகளதும் இணக்கத்தில், நாடாளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரகடனப்படுத்தியது.
அதன் பின்னர், அந்தச் சபையின்கீழ், சகல அரசியல் கட்சிகளதும் இணக்கத்திலும் சகல கட்சிகளினதும் பங்களிப்பிலும், ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டன. பல்வேறு துறைகள் விடயத்தில், அரசமைப்புச் சபைக்கு ஆலோசனைகளைப் பரிந்துரை செய்வதற்கே அக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அக்குழுக்களில், ஆரம்பத்தில் அங்கம் வகித்த மஹிந்த அணியினர், படிப்படியாகத் தமக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கவே, பல்வேறு காரணங்களைக் கூறி, அவற்றிலிருந்து விலகிக் கொண்டனர்.
எனவே, அக்குழுக்களில் இறுதியில், ஐ.தே.க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே செயற்பட்டு வந்தனர்.
இந்த குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளைப் பரிசீலித்து, புதிய நகல் அரசமைப்பொன்றை வரைவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ‘வழிநடத்தல் குழு’வொன்றும் நியமிக்கபட்டு இருந்தது.
அக்குழு, புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்படுவதற்காகச் சில ஆலோசனைகளுடன், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கைக்கு, தமிழ், சிங்கள தீவிரவாதக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதன் பின்னர், அரசமைப்பு வரைவுப் பணி, மாயமாய் மறைந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு ஆரம்பத்தில் (பெப்ரவரி மாதம்) நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை அடுத்து, ஐ.தே.க தமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளப் பெருமுயற்சி எடுக்க வேண்டியேற்பட்டதால், சிலவேளை அக்கட்சித் தலைவர்கள் அதனை மறந்துவிட்டிருக்கலாம்; அல்லது கைவிட்டிருக்கலாம்.
எனவே, புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்ள, ஐ.தே.க நடவடிக்கை எடுக்கவில்லை என்றோ முழு மூச்சுடன் செயற்பட்டது என்றோ கூறமுடியாது.
அதேவேளை, ஐ.தே.கவைக் குறைகூறும் ஜனாதிபதியோ, அவரது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, அந்த விடயத்தில் எந்த முயற்சியையும் எடுத்ததாகக் கூறமுடியாது. மாறாக, அவரது கட்சித் தலைவர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோடு சேர்ந்து, அந்த முயற்சியை விமர்சித்தும் எதிர்த்தும் வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இனப் பிரச்சினை விடயத்தில், ஓரிரு கட்சிகளைத் தவிர்ந்த தெற்கை அடித்தளமாகக் கொண்ட சகல அரசியல் கட்சிகளும், இவ்வாறுதான் நடந்து கொள்கின்றன. குறிப்பாக, பிரதான கட்சிகளாக நீண்ட காலமிருந்த, இருக்கும் ஐ.தே.க, ஸ்ரீ ல.சு.க, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள், தேர்தல் காலத்தில், தமக்குத் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது என்ற நிலைமை இருந்தால், தமது போட்டியாளர் நாட்டைத் தமிழர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க முயற்சிப்பதாகப் பிரசாரம் செய்வார்கள். அல்லது, தமிழர்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகப் பிரசாரம் செய்வார்கள்.
போட்டி கடினமானதாக இருந்தால், தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகச் சற்று அடக்கி வாசிப்பார்கள். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக, ஐ.தே.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மஹிந்தவின் மேடைகளில் கூறித் திரிந்தார். அதற்காகவே, பின்னர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இப்போது, சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதித் தேர்தல் சற்று கடினமான போட்டியாகவே தெரிகிறது. எனவே, ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் தமிழ், முஸ்லிம் மக்களைக் கவரும் வகையில், பல வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். கடந்த ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சிறிய தமிழ்க் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, அதற்கு மற்றோர் உதாரணமாகும்.
பொதுஜன பெரமுன அரசாங்கமொன்றின் கீழ், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படும் என்றும் தாம் 2012ஆம் ஆண்டு முன்வைத்த 13 பிளஸ் திட்டத்தை அமுலாக்குவதாகவும், அந்தச் சந்திப்பின் போது மஹிந்த வாக்குறுதியளித்து இருந்தார். இது சாத்தியமா?
அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரில் அரச படைகள் வெற்றியீட்டியதை அடுத்து, தென் பகுதிகளில் மஹிந்த பெற்ற மாபெரும் ஆதரவையும் வரவேற்பையும் கவனத்திற்கொள்ளும் போது, அவர் நினைத்திருந்தால் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, எந்தத் திட்டத்தையும் அமுலாக்கி இருக்கலாம். பொலிஸ் அதிகாரம் மட்டுமல்ல, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கி இருக்கலாம்.
ஆனால், அவற்றை வழங்குவது ஒருபுறமிருக்க, இருக்கும் அதிகாரங்களுடன் இயங்குவதற்காக வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவாவது அவரது அரசாங்கம் விரும்பவில்லை.
இறுதியில், இந்தியாவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையும் தலையிட்டதை அடுத்தே, 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அந்தத் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைத்துவிட்டுத் தேர்தலை நடத்தவும், மஹிந்தவின் அரசாங்கம் முயற்சி செய்தது.
வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து, மாகாண ஆளுநராக ஓர் இராணுவ அதிகாரிக்குப் பதிலாக, சாதாரண அதிகாரியை நியமிக்குமாறு தமிழ்த் தலைவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதனை மிக இலகுவாக, எவ்வித நிர்வாகச் சிக்கலுமின்றி செய்யக்கூடியதாக இருந்தும், மஹிந்த அதை ஏற்கவில்லை.
அதேபோல், மாகாண முதலமைச்சருடன் மோதிக்கொண்டு இருந்த வடமாகாண பிரதம செயலாளருக்குப் பதிலாக மற்றொருவரை நியமிக்குமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பலமுறை கோரிக்கை விடுத்தும், மஹிந்த அரசாங்கம் அதையும் நிறைவேற்றவில்லை. இவ்விரு கோரிக்கைகளும், 2015ஆம் ஆண்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தே நிறைவேற்றப்பட்டன.
அவ்வாறானவர்கள், இப்போது பொலிஸ் அதிகாரம் வழங்குவோம், 13 பிளஸ் வழங்குவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளிக்கிறார்கள். அவர்களால் அவ்வாறு செய்ய முடியாமல் இல்லை; ஆனால், மக்கள் எவ்வாறு அதை நம்புவது?
அடுத்து, இரண்டு ஆண்டுகளில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் வகையில் அரசமைப்பு மாற்றி அமைக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார். அவரது நோக்கம், நேர்மையாக இருக்கலாம். ஆனால், அடுத்த தேசிய மட்டத் தேர்தல்களில் தாம் பதவிக்கு வருவோம் என்ற உத்தரவாதமோ குறிப்பாக, பதவிக்கு வந்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வருவோம் என்ற உத்தரவாதமோ இல்லாமல் அவர் இந்த வாக்குறுதியை வழங்குகிறாரா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போதைய நிலையில், இது சாத்தியம் இல்லை என்பது அவருக்கும் தெரியும்; தமிழ் மக்களுக்கும் தெரியும். அவ்வாறிருக்க, ஏன் அவ்வாறான வாக்குறுதிகளை வழங்க வேண்டும்? எனவே, இந்த விடயத்தில் எல்லோரும் ஒன்று தான்.
சஜித்தும் இனப் பிரச்சினையும்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு பற்றிய பிரச்சினை, உச்ச கட்டத்தை அடைந்து இருக்கிறது.
கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவையே வேட்பாளராக நிறுத்த வேண்டுமென எண்ணுவோரின் எண்ணிக்கை, நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே போவதாகத் தெரிகிறது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்கிரம போன்றோர்களும், சஜித்தின் பக்கம் திரும்பியதே அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இப்போது,
ஐ.தே.கவுக்குள் இரண்டு பிரிவுகள் இருப்பது, தெளிவாகவே தெரிகிறது. கட்சியின் செயற்குழு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு. நிறைவேற்றுக் குழு ஆகிய முக்கிய 3 குழுக்களும், ரணில் ஆதரவாளர்கள் என்றும் சஜித் ஆதரவாளர்கள் என்றும் பிரிந்துவிட்டன. அவற்றில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது. ஏனைய குழுக்களின் நிலைமை வெளியே தெரிவதில்லை.
ரணில் தலைமையிலான கட்சி, சஜித்தைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளாது என்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்த சஜித் ஆதரவாளர்கள், தாமாகவே சஜித்தை வேட்பாளராகப் பிரகடனப்படுத்தி, பிரசாரப் பணிகளை ஆரம்பித்தார்கள்.
அதன்படி, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஏற்பாட்டில், பதுளையில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அது, கட்சி ஆதரவாளர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதேபோன்ற மற்றொரு கூட்டம், குருநாகலில் நடைபெற இருக்கிறது.
எனினும், ரணில் பிரிவு, சஜித்தை வேட்பாளராக நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவிப்பதாகத் தெரியவில்லை. ரவி கருணாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்றோர், வெளிப்படையாகவே சஜித்தை மிக மோசமான முறையில் விமர்சித்து வருகிறார்கள். அவர்கள், மற்றொருவரை வேட்பாளராக நிறுத்துவதில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு, இந்த விடயத்தில் மிக விரைவில் முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் நடைபெற இருக்கிறது. அதாவது, சுமார் இரண்டரை மாதங்களில் அத்தேர்தல் நடைபெறும்.
வழமையாகத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக, சுமார் ஒரு மாதம் வழங்கப்படும். அதாவது, ஒக்டோபர் மாத நடுப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படலாம். அந்த வகையில், இந்த மாதத்துக்குள் ஐ.தே.க தமது நிலைப்பாட்டைக் கட்சி பிளவுபடாத வகையில் எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், ஏற்கெனவே சஜித் பிரிவு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைப் பார்ககும் போது, கட்சி அவரைத் தவிர்ந்த மற்றொருவரை வேட்பாளராகத் தெரிவுசெய்தால், அவரது பிரிவு தனியாக இயங்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
இனப் பிரச்சினை விடயத்தில், இந்த இரு பிரிவுகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறமுடியாது. ரணில் விக்கிரமசிங்க, ஆரம்பக் காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் போலவே, ஆளும் கட்சியில் இருக்கும்போது பிரச்சினையைத் தீர்க்க ஆர்வம் காட்டியும், எதிர்க்கட்சியில் இருக்கும் போது, தீர்வைக் குழப்பும் வகையில் இனவாதத்தைத் தூண்டியும் வந்துள்ளார்.
ஆனால், 2000ஆம் ஆண்டு இறுதியில், நோர்வேயும் அமெரிக்காவும் இந்த விடயத்தில் தலையிட்டதை அடுத்து, இன்றுவரை அவர் இனவாதத்தைத் தூண்டவில்லை. மாறாக அவர், புலிகளுடன் சமஷ்டித் தீர்வொன்றைப் பற்றிய உடன்பாடொன்றை 2002ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஏற்படுத்திக் கொண்டார்.
போரால் ஏற்பட்ட களைப்பினாலோ அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க, சமஷ்டித் தீர்வை ஏற்பவர் என்பதாலோ, அந்த உடன்பாட்டுக்கு எதிராக எவரும் அன்று ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ஆனால், புலிகளின் நோக்கம் வேறொன்றாக இருந்த காரணத்தால், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
அண்மைக் காலத்தில், ரணில் பிரதமராக, இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் நோக்கத்துடன் அரசமைப்பை மாற்றியமைக்க முற்பட்டார். அது முடியாமல் போய்விட்டது.
சஜித், இந்த விடயத்தில் எவ்வாறான கொள்கை கொண்டவர் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, புலிகளுடன் அரசியல் இணக்கம் காண்பதில் இருந்த ஆர்வம் காரணமாக, அப்போது இலங்கையில் இருந்த இந்தியப் படைகளுக்கு எதிராகப் போராடுவதற்காகவெனப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன.
சஜித்தின் தந்தையும் ஆரம்பத்தில் அதிகாரப் பரவலாக்கலைக் கடுமையாக எதிர்த்தவர்; இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் எதிர்த்தவர். வேறு வழியியன்றியே, அவர் புலிகளுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தார். எனவே, தந்தையைப் பின்பற்றுவதாக அடிக்கடி கூறிவரும் சஜித் ஜனாதிபதியானால், அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில், எந்த நிலைப்பாட்டை எடுப்பார் என்பது தெளிவில்லை.
Average Rating