ஒளிர்கின்றது சிவப்புச் சமிக்ஞை; ஆனால், அவன் செல்கின்றான்!! (கட்டுரை)

Read Time:13 Minute, 14 Second

அண்மையில் யாழ். பஸ் நிலையத்திலிருந்து யாழ். ரயில் நிலையம் நோக்கி, மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளையில் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வேம்படிச் சந்தியைக் கடக்கின்ற வேளையில், பச்சை நிற வீதிச் சமிக்ஞைக்காகப் பயணிகள் காத்திருக்கின்றார்கள். இந்நிலையில் வீதிச் சமிக்ஞையைச் சற்றும் பொருட்படுத்தாது (சிவப்பு நிறம் ஒளிர்கின்ற வேளையில்) ஓர் இளைஞன், மோட்டார் வண்டியில் வேகமாக பயணிக்கின்றான்.

இதனை அவ்விடத்தில் காத்திருத்த பலரும் பார்க்கின்றனர்; பலவிதமாகக் கதைக்கின்றார்கள்; பலவிதமாகச் சிந்தித்திருப்பார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல அனைத்துத் தமிழ் இளைஞர்களும் வழி தவறிச் செல்கின்றார்கள் என எண்ணுவதா? அல்லது ஒருவர் அவ்வாறு செய்தபடியால், ஏனையவர்கள் மீது பழி சுமத்தலாமா? ஆனால் இவற்றை, எனது பார்வையில் பின்வருமாறு உங்களிடம் கொண்டு வருகின்றேன். ஒரு பெண் கர்ப்பமுற்றிருக்கும் பத்து மாதக் காலப் பகுதிகளிலும் அவளைச் சுற்றி அமைதியான சூழல் இருக்க வேண்டும்; ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்; உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என ஏனையோர் அவளுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை, உற்சாகம், புதிய சிந்தனைகளைத் தருகின்ற வகையில் உரையாட வேண்டும்; உறவாட வேண்டும். இசையை இரசிக்க வேண்டும். இவ்வாறிருந்தால் கர்ப்பிணிப் பெண் ஆரோக்கியமான பிள்ளையை அகிலத்துக்கு வழங்குவார் என்பது அறிவியல் நிரூபித்த உண்மை.

ஆனால், எங்கள் மண்ணில் போர் நடைபெற்ற காலங்களில், எங்கள் அன்னையர்கள் தாய்மையுற்றிருந்த காலங்களில், நாளை என்ன நடக்குமோ? நாளை நாம் உயிருடன் இருப்போமோ என வாழ்ந்தார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கக் கடையில் கூப்பன் அட்டையை அடுக்கி, கோதுமை மாவைப் பெற்று, ரொட்டி சுட்டுச் சாப்பிட்டு வயிற்றை நிறைத்தார்கள். பல முறைகளில் பல்வேறு வடிவங்களில் இடப்பெயர்வைச் சந்தித்து இடர்பட்டார்கள்.

கர்பபிணிகள் ஏனையோருடன் இனிமையாக உறவாடவும் ஏனையோர் அன்னையர்களுடன் இனிமையாக உரையாடவும் வேண்டிய இனிய பொழுதுகளைப் போர் மேகங்கள் க(கு)லைத்து விட்டன; துரத்தி விட்டன. இசையை இனிதாக இரசிக்க வேண்டிய செவிகளுக்குள் குண்டுகளினது ஓசைகளும் சாவுகளது ஓலங்களுமே ஆசையின்றியும் அனுமதியின்றியும் புகுந்தன.

இவ்வாறாக தாய்மைக் காலப்பகுதியும் அதன் பின்னரான தாய் – சேய் கவனிப்புக் காலப்பகுதியும் பயமும், பதற்றமும், கேள்விக் குறியுடனான காலப்பகுதியாகவே கடந்து விட்டன. இது வெறும் ஒன்று இரண்டு ஆண்டுகள் அல்ல. அண்ணளவாக நாற்பது ஆண்டுகள்; நான்கு தாசாப்தங்கள்.

ஏன் இதனை விட 2009க்குப் பின்னரான போர் ஓய்ந்த பத்து ஆண்டுகள் கூட, சோகமும், விரக்தியும், கவலைகளும் வாட்டுகின்ற காலங்களாகவே எம்மைக் கடந்து செல்கின்றன. இத்துடன் இருந்தால் போதுமா? இனி என்ன நடக்கப் போகின்றது? அதனை எவ்வாறு எதிர்கொள்வது என வினாக்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

போர் பல குடும்பங்களின் அப்பாக்களைக் காணாமல் செய்து விட்டது; கொலை செய்து விட்டது; மாற்றுத் திறனாளியாக்கி விட்டது; சிறையில் தள்ளி விட்டது. இந்நிலையில் அப்பாவின் அன்பான கண்டிப்பு; தொடர்ச்சியான மேற்பார்வை அற்று வளர்ந்த பிள்ளைகள் பலர் உள்ளனர்.

இதேபோல போர் பல குடும்பங்களின் அம்மாக்களைக் காணாமல் செய்து விட்டது; கொலை செய்து விட்டது; மாற்றுத் திறனாளியாக்கி விட்டது; சிறையில் தள்ளி விட்டது. இந்நிலையில் அம்மாவின் அரவணைப்பு, அன்பு, பா(நே)சம் அற்று வளர்ந்த பிள்ளைகள் பலர் உள்ளனர்.

குடும்பம் என்பது தனித்துவமான கட்டமைப்புகளைக் கொண்ட ஓர் அலகு ஆகும். ஒருவருக்கு ஒருவர் ஒத்துணர்வுடன் செயற்படுவதற்கான ஒரு பண்பான படைப்பாகும். தமிழர் சமூதாயத்தில் குடும்பம் ஒரு கோவிலாகவே போற்றப்பட்டது; போற்றப்படுகின்றது. இந்நிலையில் போர் பல குடும்பத்துத் தனித்துவங்களைச் சிதைத்தது.

இது தனித்து இயங்க வேண்டிய நிலைக்குள் பலரைத் தள்ளியது. இதனால் தனிநபர், அங்கத்தவர்கள் தொடர்பில் தவறானதும் பிழையானதுமான முடிவுகளை எடுக்க வழி வகுத்துக் கொடுத்தது.

பிள்ளைகள் முழு ஆளுமையுடன் கூடிய நற்பிரஜைகளாக மி(ஒ)ளிர்வதற்கு இளம் பராயத்தில் அவர்கள் கடந்து வரும் வளர்ச்சிப் படிகளும் விருத்தி நிலைகளும் முழுமையாகத் தாக்கம் செலுத்துகின்றன. இதனை உளநல மருத்துவ உலகம் நிரூபித்து உள்ளது. அத்துடன் பொதுவாகவே போர்கள் பெண்களையும் சிறுவர்களையுமே அதிகமாக ஆட்டிப்படைக்கின்றது.

ஆகவே, இத்தனை துயரங்களையும் தாண்டி, பல கரடுமுரடான பாதைகளைக் கடந்து, போருக்குள் பிள்ளைகளைப் பிரசவித்து, மீண்டும் அதே போருக்குள் பிள்ளைகளை வளர்ப்பது என்பது சவாலானதே. ஆரோக்கியமாகப் பிள்ளைகளைப் பெற்று ஆரோக்கியமாக (உடல், உளம், சமூகம், ஆன்மீகம் ஆகிய தளங்களில் உள்ள உச்சநிலை) வளர்த்தல் கடினமானதே. இந்நிலையில் போரால் சிதைந்த மனநிலையுடன் (உளநலம்) உள்ள அன்றைய சிறுவர்கள் (இன்றைய இளைஞர்கள்) கணிசமான அளவில், எமது பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்கள் காரண காரியமின்றி எதிர்மறை உணர்வுகளை வெளிக்காட்டுவதை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

பிரச்சினைகள், முரண்பாடுகள் என்பன அனைவருக்குமே ஏற்படுகின்றன; அவை பொதுவானவை. இந்நிலையில், ஆரோக்கியமான உள நலத்தைக் கொண்டவர்கள் அதனைச் சிறப்பாகக் கையாள்வார்கள். ஆரோக்கியமற்ற உளநலத்தைக் கொண்டவர் பிரச்சினைகள், முரண்பாடுகள் என்பனவற்றை மேலும் சிக்கலுக்குள் கொண்டு செல்வார்கள்.

தாங்கிக்கொள்ள முடியாத அளவு துக்கம் ஏற்படும் போது, அது உடல், உள ரீதியில் பல பாதிப்புகளைத் தோற்றுவிக்கின்றது. உடல், உள உளைச்சலானது ஒருவருக்குத் தெரியாமலேயே அவருக்குள் ஏற்படுகின்றது என ஜோன் பொவ்லி என்ற உள மருத்துவ நிபுணர் தெரிவித்து உள்ளார்.

இதனை விடத் தற்போது அதிகரித்த கணினி, இணையத்தளப் பாவனை உடல், உள, சமூக, கலாசார, ஆன்மீகத் தளங்களில் பல பிரச்சினைகளைத் தினசரி உருவாக்கி வருகின்றன. ஒரு நாளில் பல மணி நேரங்களாக, இணையப் பயன்பாட்டோடு செலவிடுகின்றவர்கள் தவறான பல தகவல்களைப் பெறுகின்றனர். பலர் ஆரோக்கியமற்ற கணினி விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள், மூளையின் இயல்பான விருத்தியைப் பாதிப்பதோடு மனிதர்களிடையிலான ஆளிடைத் தொடர்புகளிலும் பல எதிர்மறைத் தாக்கங்களைத் தோற்றுவிக்கின்றன.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவு, ஒரு நாள் மனிதத் தொடர்புகளை மேவிச் சென்று விடும் என்ற அச்சம் உருவாகின்றது. அப்போது முட்டாள்களின் கூட்டம் ஒன்றே இங்கு வாழும் என அல்பேட் ஐன்ஸ்டீன் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி உள்ளார்.

இந்நிலையில், போரால் சிதைந்த தமிழர் வாழ்வியலுக்குள் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் புகுந்து, அன்றாடம் வேண்டாத பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் அதையும் முட்டி மோதி, எப்படியாவது வாழ்வின் சிகரத்தை எட்டி விட வேண்டும் என்ற பற்றும் பிடிப்பும் நம் இளைஞர்களிடம் நிறையவே உள்ளது. இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் எண்ணிலடங்காதவை. இந்தச் சவால்களை முறியடிக்கச் சிந்தனையில் தெளிவு கொள்ள வேண்டும்.

மனிதனுடைய சிந்தனையின் பிறப்பிடமே அவ(ளு)னுடைய மனமே. போர்க் காலங்களில் அர்ச்சுணனுக்கு ஏற்பட்ட மனக்குழப்பங்களையும் சந்தேகங்களையும் தெளிய வைப்பதற்காகச் சொல்லப்பட்டதே பகவத் கீதை ஆகும். அவ்வாறாக போர்க் காலக் கொடுமைகளால் எங்கள் இளைஞர்களுக்கு ஏற்பட்ட மனக்குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கப் பல பகவத்கீதைகள் தோற்றம் பெற வேண்டும்; அவை பகிரப்பட வேண்டும்.

விளை நிலங்களை மண்ணால் நிரவி, கட்டடங்களைக் கட்டி, எங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடைந்து வருகின்றது என எண்ணும் மாய அபிவிருத்தி தேவை இல்லை. மாறாக மனித வாழ்வுக்கு மகுடமாக விளங்கும் மானிட அபிவிருத்தியே இக்கணத்தின் தேவைப்பாடு ஆகும். ஆகவே இன்றைய இளைஞர்கள் படுமோசம். எங்களது காலங்களில் நாங்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக வாழ்ந்தோம். இன்று அப்படி இல்லையே என இன்றைய இளைஞர்களது தவறுகளுக்கும் பிழைகளுக்கும் உடனடியாக குற்றச்சாட்டுக்களை அவர்களை நோக்கி நீட்டக் கூடாது. அவர்களை நோக்கி எங்கள் சுட்டு விரல்கள் நீளக் கூடாது.

இந்நிலையில் இன்றைய நிலையில் இவ்வாறாக சற்றுத் தடுமாறுகின்ற இளைஞர்களைத் தடம் மாறாது சரியான வழித்தடத்தில் நகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு எம் அணைவருக்கும் உரியது.

இவ்வாறு இளைஞர்களை முகவரி இல்லாமல் செய்ய பல முனைகளிலும் அவர்களுக்கு எதிராக பனிப்போர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதனைத் தடுத்து அவர்களுக்கு சரியான முதல் வரி இட வேண்டியது எங்களது கடமை.

ஆயிரம் கிலோ மீற்றரைக் கொண்ட பயனங்களைக் கூட ஒற்றை முதல் அடியுடனேயே ஆரம்பிக்கின்றோம். இந்நிலையில் ஆயிரங் காலத்து பயரான எங்கள் இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்ற முதல் அடியை எடுத்து வைப்போம். நம்பிக்கையுடன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவது எதற்காக? (வீடியோ)
Next post லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!! (அவ்வப்போது கிளாமர்)