உணவுக்கலப்படத்தில் நம்பர் 1 ஆகிறதா தமிழகம்?! (மருத்துவம்)
சுகாதாரமாக சமைத்து, சுகாதாரமாக சாப்பிட்டால் எந்த நோயும் நெருங்காது என்பது சான்றோரின் வாக்கு. ஆனால், அதிர்ஷ்டவசமாக நாம் எடுத்துக்
ெகாள்ளும் உணவானது அரிசி முதல் அன்றாடம் பயன்படுத்தும் பல சின்னச்சின்ன உணவுப்பொருட்கள் வரை சொல்ல முடியாத அளவிற்கு தெரிந்தோ, தெரியாமலோ கலப்படமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
மாநில உணவு பாதுகாப்புத்துறை (Food safety department of the state) நடத்திய 2018-2019-ம் ஆண்டுக்கான ஆய்வில் உணவு கலப்படம் இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகம் என கூறியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையை மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை(Ministry of consumer affairs) வெளியி–்ட்டுள்ளது.
‘2016-2017 மற்றும் 2018-2019-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் விதிகள் மீறி விற்கப்பட்ட பொருட்கள் மற்றும் உணவகங்கள் என 8,100 பேர் தண்டனைக்குரியவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்’ என நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அதிகாரப்பூர்வமாக லோக் சபாவில் தெரிவித்துள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டும்…
இந்திய நுகர்வோர் அமைப்பு தொடர்பு அலுவலர் சோமசுந்தரத்திடம் இதுபற்றிக் கேட்டோம்…
‘‘சுகாதார நடவடிக்கைகளுக்காக 2011-ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு கொண்டு வரப்பட்டது. இது மத்தியில் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம் என்றும், மாநிலத்தில் மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்தகத்துறை என்ற பெயரிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 400 உணவுத்துறை அலுவலர்கள், இந்த அமைப்பில் பணியாற்றி வருகின்றனர்.
இதன்படி அங்கீகாரம் பெற்றுக் கொண்டுதான் உணவகங்களும் கடைகளும் நடத்த வேண்டும். அங்கீகாரம் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் நிறுவனத்தில் விதிமீறல்கள் அதாவது தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எளிதாக இருப்பதற்காக இந்த அங்கீகாரம் பெற வேண்டும்.
அதிகாரிகள் ஒவ்வொரு உணவகம் மற்றும் அங்காடி உரிய உரிமம் பெற்று நடத்துகிறதா என்று ஆய்வு செய்வர். உரிய அங்கீகாரம் பெற்று நடத்த வலியுறுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. சமைத்த உணவுப்பொருளை விற்கும் உணவகமாக இருந்தாலும் சரி… சமைக்காத உணவுப்பொருட்களை விற்கும் கடைகளாக இருந்தாலும் சரி… இந்த அரசு அங்கீகாரத்தைப் பெற வேண்டியது அவசியம்.
ஆனால், இந்த சட்டம் முழுமையாக அமலில் இல்லை. இன்று கலப்பட விவகாரம் இத்தனை பெரிய பிரச்னையாக உருவாகி இருப்பதற்கு இதுதான் அடிப்படை காரணம். தமிழ்நாடு மட்டும் அல்ல; மற்ற மாநிலங்களிலும் உரிமம் பெறாமலே பெரும்பாலான கடைகள்/உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது வெளிவந்திருக்கும் கலப்பட செய்தியை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுத்துறை அலுவலர்கள் ஒவ்வொரு பல சரக்கு கடைகள், உணவகம் மற்றும் துரித உணவக கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொருட்கள் நன்றாக உள்ளதா என்று பார்க்க வேண்டும், உணவகமாக இருந்தால் சமைத்த உணவை ஆய்வு செய்ய வேண்டும், உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமற்று, வழக்கத்திற்கு மாறாக இருந்தால் அபராதம் விதிக்கப்பட வேண்டும். சமைக்கும் நபர் நகம் வெட்டியுள்ளனரா, அடிப்பட்ட காயங்களுடன் உணவு சமைக்கப்படுகிறதா, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என உள்கட்டமைப்பு பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.
சாலையோர/ துரித உணவகங்களாக இருந்தால் சாப்பிட்ட தட்டை சரியாக கழுவுகின்றனரா, சமையல் செய்யும் இடம் மற்றும் உண்ணும் இடத்தில் ஈக்கள், கரப்பான் பூச்சி போன்ற சுகாதாரமற்ற நிலை உள்ளதா? சாப்பிட்ட இடத்திலேயே கை கழுவுகின்றனரா, குப்பை தொட்டியின் அருகாமையிலே உணவகம் நடத்தப்படுகிறதா என்பனவற்றை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல்கள் இருப்பின் அபராதமும் விதிக்க வேண்டும்.
அரசே தற்போது ‘கண்காணிப்பு மாதிரி’ என்ற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இவை எல்லாமே ஏற்கெனவே சட்டத்தில் இருக்கிற வழி
முறைகள்தான். இவற்றை முழுமையாக அமல்படுத்தினாலே போதும்.
2018-2019-ம் ஆண்டு தூய்மையற்ற நிலையிலிருந்த உணவகம், துரித உணவகம், போதிய இடங்கள் இல்லாமல் நடத்தப்பட்ட உணவகங்கள் என்று கண்டறியப்பட்டு 2,384 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில் 300 கடைகளுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் தரவுகள் கூறுகிறது. இதுவும் கவலைக்குரிய செய்தியாக இருக்கிறது’’ என்றவரிடம், நுகர்வோருக்குத் தேவையான விழிப்புணர்வு பற்றி சில முக்கியக் குறிப்புகளைத் தருகிறார்.
‘‘பொருட்களை வாங்கும்போது FSSI(Food saefty standard of india) உரிமம், பதிவு எண், உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர் மற்றும் முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர எடை, பயன்படுத்தக் கூடிய தேதி, காலாவதி தேதி, ஊட்டச்சத்து விபரம், எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது, சைவ அல்லது அசைவ குறியீடு, உணவு பொருட்களுக்கான கோட், பேட்ச் எண் ஆகியவை வாங்கக் கூடிய உணவு பொட்டலத்தில் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
சுகாதாரமான முறையில் அடைக்கப்பட்ட கேன்களில் தண்ணீர் விற்கப்படுகிறதா என்ற லேபிளையும் கவனிக்க வேண்டும். மாவட்டத்தில் எந்த இடத்தில் உணவு பொருட்கள் தரம் சரி இல்லை என்று தெரிகிறதோ உணவு பாதுகாப்புத்துறை ஆணையரகம் மற்றும் மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாங்கும் பொருட்களில் சந்தேகம் ஏற்பட்டாலும் புகார் தெரிவிக்கலாம்.
உணவகத்தில் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு, கடைகளில் வாங்கிய பொருட்களில் பூச்சி மற்றும் வண்டு இருந்தால் தரமற்ற
பொருட்கள் விநியோகம் செய்வது தெரிய வந்தாலும் அதனை படம் பிடித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை வாட்ஸ் அப் எண் 94440 42322-க்கும் தகவல் அனுப்பலாம். புகார் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சின்ன கடையாக இருந்தால் உணவு பாதுகாப்பு அலுவலரும் பெரிய நிறுவனமாக இருந்தால் நியமன அலுவலர் பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பர். அதிகாரிகளும் பதிவு செய்த புகாருக்கு ஆக்கப்பூர்வமான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுத்தால்தான் மீண்டும் தவறு நடக்காமல் தடுக்க முடியும். தமிழ்நாட்டை உணவில் கலப்படம் இல்லாமல் சுகாதாரமுள்ள முதன்மை
மாநிலமாகவும் கொண்டு வர முடியும். தெருக்களில் அல்லது உணவகங்களில் விற்கப்படும் டீ, சிக்கன் பக்கோடா, காலிஃபிளவர் பஜ்ஜி, பகோடா போன்ற எண்ணெய் பலகாரங்களில் அதிகமாக அங்கீகரிக்கப்படாத தரமற்ற கலர் ரசாயன பொடிகள் கலக்கின்றனர்.
அதை வாங்கி உட்கொள்ளும்போது நுகர்வோருக்கு உடல்ரீதியிலான பலவிதமான கெடுதல்கள் ஏற்படுகிறது. கல்லீரல், குடல் பாதிப்பு, புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. உப்பு ெவள்ளை நிறமாக பளிச்ெசன்று தோற்றம் தர கவர Anti caking agent மற்றும் Bleaching பயன்படுத்தப்படுகிறது. அதனால், இத்தகைய உணவுகளில் கவனம் தேவை.
தற்போது அனைத்தும் ரெடிமேட் பொருட்களாக இருக்க வேண்டும் என்று அவற்றையே நாடிச் செல்கின்றனர். ரசம் வைக்க, பாயாசம் வைக்கக் கூட ரெடிமேட் பொருட்களை நாடிச் செல்கின்றனர். இது பொதுமக்களின் தவறான அணுகுமுறை. கடையில் விற்கப்படும் மிளகாய் பொடியில் Sudan III என்ற வேதிப்பொருள் அதன் நிறத்தை தூக்கலாகக் காட்ட கலக்கப்படுகிறது. இதேபோல் மல்லிப்பொடியில் சல்பர் கலக்கப்படுகிறது. அது விஷத்திற்கு சமம். சிறிது நாளுக்கு முன் உப்பில் சயனைட் கலந்துள்ளதாக செய்திகள் பரவின. இப்படியாக நாம் வாங்கி நுகரும் பொருட்கள் அனைத்திலும் ரசாயனம் கலந்து விற்கப்படுகிறது.
எனவே, கூடுதல் விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத கடைகளில் பொருட்கள் வாங்குவதை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் தெருவுக்கு தெரு காளான்கள் போன்று முளைத்து வருகின்றன. பெரும்பாலானவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எனவே, வெளியிடங்களில் சாப்பிடுவதிலும் மிகுந்த கவனம் தேவை’’ என்று எச்சரிக்கிறார்.
விழிப்புணர்வு தேவைப்படுகிறது
மலேசியாவில் Road side vendors என்று ஏரியா பிரித்துள்ளனர். அவர்கள் சாப்பிட்ட பின் குடிக்க தண்ணீர் கைகழுவ தண்ணீர், சாப்பிட்ட தட்டை கழுவ தண்ணீர் என்று பிரித்து தனித்தனியே அமைத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க பிரித்தும் நடைமுறைப்படுத்துகின்றனர். அதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இந்தியாவில் இந்த மாதிரி நடைமுறையில்லை. இவை அமலுக்கு வந்தால் உணவுக் கலப்படம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் அமைந்துள்ள சாலையி–்ல் உள்ள உணவகங்கள் வியாபாரிகள் மற்றும் வந்து ெசல்வோருக்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமான உணவுகளை வழங்கும் மையமாகவும் அமைந்திருக்கிறது. இதனை Clean street food hub என்று சொல்கிறார்கள். உணவு எடுத்துக் கொள்ள சரியான வளாகம் (Eat right campus) என்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இத்தகைய முன்னேற்றம் இங்கும் வேண்டும்.
ஏற்கெனவே இ.பி.கோ 272 மற்றும் 273 சட்டப்பிரிவின்படி, உணவில் கலப்படம் செய்துள்ளது நிரூபணமானால் ஆயுள் தண்டனை வழங்க முடியும். ஆனாலும் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. சுகாதாரமற்ற உணவகம், உணவில் கலப்படம் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு உணவுத்துறை அதிகாரிகள் கழுகு கண் கொண்டு கண்காணிக்க வேண்டும். நுகர்வோருக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
அரசின் பதில் என்ன?!
தமிழகம் உணவுக்கலப்படத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பற்றி, தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம்… ‘உணவுப்பொருட்களில் கலப்படம் உள்ளதா என்று தெரிந்துகொள்ள மற்ற மாநிலத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகமான பொருட்கள் மாதிரியாக (Samples) எடுத்துக்கொள்ளப்பட்டது. சாம்பிள்ஸ் அதிக எண்ணிக்கையில் எடுக்கப்பட்டதை மீடியாக்கள் தவறாக புரிந்துகொண்டு கலப்படத்தில் இரண்டாம் இடம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, நிறைய மாதிரிகள் வைத்து ஆய்வு செய்யப்பட்டதில் அவைகளில் பெரும்பாலானவை உபயோகத்திற்கு உகந்தது அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எப்படி கலப்படம் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும். ஒரு சில மாநிலங்களில் சரியான தரவுகளைக் கூட எடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, ஒட்டுமொத்த ஆதாரங்கள் கிடைத்தால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்கிறார் பெயர் கூற விரும்பாத அந்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி.
Average Rating