ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 4 Second

கருமை நிறத் தோற்றம்

நாம் ஆரோக்கியமாக இருந்தாலே நம் தோலும் ஆரோக்கியமாக இருக்கும். நம் தோல் ஆரோக்கியமாக இருந்தாலே நமது தோற்றத்தில் பளபளப்பும் பொலிவும் தானாக அதிகரிக்கத் துவங்கும். கோடை வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் சரும பாதுகாப்பு என்பது அனைவருக்கும் முக்கியமானது. தோலின் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத சிறிய செயல் கூட, சருமத்தில் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணக்கூடியது. நமது தோலின் ஆரோக்கியம் என்பது உடலின் வெளியே தெரியும் அகத்தோற்றம் மட்டுமல்ல.

உடலுக்கு வெளியே தெரியாத மறைவுப் பகுதிகளான நம் பின் கழுத்து, கை அக்குள், தொடை இடுக்கு, மார்பகத்தின் கீழ்ப் பகுதி போன்ற உடலின் மறைவுப் பகுதிகளையும் சேர்த்ததே. கருமை நிறத்தின் தாக்குதலுக்கு இலக்காகுவது பெரும்பாலும் இந்த மறைவுப் பகுதிகளே. இந்த இடங்களில் கருமை நிறம் ஏற்பட்டால் மறைவுப் பகுதிதானே என நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அப்படிச் செய்யலாமா? மறைவுப் பகுதிதான் என்றாலும் அதுவும் நம் உடம்போடு இணைந்த உறுப்புதானே?

அதைக் கண்டுகொள்ளாமல் விடுதல் சரியா? நமது வீடுகளில் சாதாரணமாக கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை மூலிகைகளைக் கொண்டே இவற்றை சரி செய்ய வழிமுறைகள் உள்ளன. தழும்பு போன்ற தோற்றமுடைய அந்தக் கருமை நிறம் எதனால் வருகிறது. மறைவுப் பகுதிகளில் இருக்கும் இந்த கருமை நிறங்களை எப்படி நீக்குவது? விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா.

கருமை நிறம் தோன்றக் காரணங்கள்

*கோடை காலத்தில் நமக்கு மிகமிக அதிகமாக வியர்க்கத் துவங்கும். வியர்ப்பதன் மூலம் நம் உடலில் தோன்றும் வேர்வை சுரப்பிகளின் நீரானது நம் உடலின் இடுக்குப் பகுதிகளில் அப்படியே நின்று அந்த இடத்தில் சிறிது சிறிதாகச் சேரத் துவங்கி, அந்த இடம் முழுவதும் அப்படியே கருப்பு நிறத்தை அடைந்து விடுகிறது.
*வியர்ப்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு இயற்கையாகவே உடல் எப்போதும் ஈரப்பதத்துடன் சொதசொதவென்ற நிலையிலேயே இருக்கும். அவர்களுக்கு எந்த நேரமும் வியர்த்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கைகளைத் தொட்டால் கூட ஈரமாகவே இருக்கும். இவர்களின் தோல்கள் கருமை நிறத்தால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகும். இவர்களின் பின் கழுத்துப் பகுதிகள் பெரும்பாலும் எப்போதும் கருப்பாகவே இருக்கும்.
*உடல் தேகம் ஒல்லியாக இருப்பவர்களைவிட குண்டாக இருப்பவர்களுக்குத்தான் அதிகமான கருமை நிறம் வரும். ஏனெனில் குண்டாக இருப்பவர்களின் உடல் சதை ஒன்றோடொன்று ஒட்டி காற்று நுழைய இடமின்றி அந்த இடமே அப்படியே கருமை நிறத்தை அடைந்து விடுகிறது.
*சிலருக்கு கைகளின் முட்டிப் பகுதி, கால்களின் முட்டிப் பகுதி கருப்பாகி அந்த இடம் மட்டும் தோல் தடிமனாகி சொரசொரப்பாகக் காணப்படும். முட்டிப் பகுதிகளை நாம் தரையில் அதிகமாக ஊன்றி பயன்படுத்துவதால் அவ்வாறு தோன்றுகிறது. முழங்கைகளை தரையில் வைத்து அழுத்துவது, முட்டி போட்டு நிற்பது போன்ற செயல்களால் அந்த இடத்தில் உள்ள தோல்களின் செல்கள் இறந்து, தோல் கருமை அடைகின்றது.
*உடலை நன்றாகத் தேய்த்துக் குளித்து, இறந்த செல்களை நீக்க முயற்சிக்காமல், கருமை நிறத்தைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விடுபவர்களின் தோலில் கருமை நிறம் நிரந்தரமாக அப்படியே தங்கிவிடும்.
*கழுத்தில் கனமாக அணிகலன்களை அணிந்திருப்பவர்களின் கழுத்து, நகையின் அழுத்தத்தால், அந்த இடத்தில் உள்ள தோலின் செல்கள் இறந்து கருமை நிறம் அடைகிறது.
*உடலுக்குத் தேவையான சத்து இல்லையென்றாலும், இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தாலும் கழுத்து
மற்றும் மற்ற பகுதிகளில் கருமை நிறம் தோன்றும்.

கருமை நிறத்தை நீக்கும் வழிகள்

*அளவுக்கு அதிகமான உடல் பருமன் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. நமது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையினை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*வெயிலின் தாக்கத்தால் உடலில் உள்ள நீர் வெளியேறி நீர்ச்சத்து குறையும்போது நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது ரத்த ஓட்டம் சீரடையத் துவங்குவதுடன், ஒரே இடத்தில் இருக்கும், தோலின் இறந்த செல்கள் தானாகவே நகரத் துவங்கும்.
*கோடை காலத்தில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் தவிர்த்து தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். காட்டன் உடைகளை பெரும்பாலும் பயன்படுத்துவதே தோலின் ஆரோக் கியத்திற்கு மிகவும் நல்லது.
*உடலை இறுக்கிப் பிடிக்கும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதும் எப்போதும் நல்லதல்ல. இரவில் தூங்கச் செல்லும்போது, தளர்வான ஆடைகளைப் பயன்படுத்துதலே சிறந்தது.
*முக்கியமாக பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிதல் கூடாது. உடைகளை இறுக்கமாக அணியும்போது பெண்கள் மார்பகங்களின் கீழ்ப்பகுதி கருப்பாகத் தோன்றத் துவங்கும்.
நாம் கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும். நமது வீடுகளில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இந்த கருமை நிறத்தை நீக்க முடியும்.

1.ஆலுவேரா ஜெல் (கற்றாழை)

ஆலுவேரா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கற்றாழை நம் தோல் ஆரோக்கியத்திற்கு மிகமிக உகந்தது. ஆலுவேரா இயற்கையாகவே நம் தோலுக்குத் தேவையான எண்ணெய்த் தன்மை மற்றும் ஈரத்தன்மையுடன் கூடிய மாயிஸ்ட் ரைசராக செயல்படுகிறது. நமது உடலில் உள்ள இறந்த செல்களை போக்கி தோலின் கருமை நிறத்தை சரி செய்யும் வல்லமை ஆலுவேராவிற்கு இயற்கையாகவே உள்ளது.

பயன்படுத்தும் முறை

ஆலுவேராவை செடியில் இருந்து எடுத்து அதன் தோலை நீக்கி, உள்ளிருக்கும் கொழகொழப்பான அதன் ஜெல்லை நன்றாகத் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு மிக்ஸியில் நன்றாக அடித்து பேஸ்டாக்கிக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் குறைவான அளவும், சூடான தேகத்தைக் கொண்டவர்கள் உடலுக்குத் தேவையான அளவும் எடுத்துக்கொண்டு உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கத் துவங்கும்.

2.எலுமிச்சை மற்றும் வெள்ளரி

எலுமிச்சை சாறு நம் தோலில் கருப்பு நிறமாகத் தோன்றும் பகுதிகளைச் சற்றே வெளிற செய்யும் தன்மை கொண்டது. இதில் அசிட்டிக் அமிலம் மற்றும் விட்டமின் சி உள்ளது. இதில் வெண்மை நிறம் தரும் தன்மை (bleaching agent) அதிகமாக இருப்பதுடன், தோலில் உள்ள செல்களைத் தூண்டி புதிய செல்களை உருவாக்கும் சிறப்பும் எலுமிச்சைக்கு உண்டு. வெள்ளரிக்காயும் நம் சருமத்திற்கு குளிர்ச்சித் தன்மையைத் தரவல்லது. நமது தோலை உடல் முழுவதும் ஒரே தன்மையுடையதாக மாற்றும்.

பயன்படுத்தும் முறை

எலுமிச்சையை சின்னச்சின்னதாக வட்ட வடிவத்தில் வெட்டி கருமை நிறம் உள்ள இடத்தில் தேய்த்து ஒரு 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். எலுமிச்சையை பயன்படுத்திய பிறகு குளியல் சோப்பினை பயன்படுத்தக் கூடாது. எலுமிச்சையுடன் தயிர் அல்லது வெள்ளரிக் காயை பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இத்துடன் இரண்டு துளி தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். அக்குள் மற்றும் கை கால்களில் வேக்ஸிங் செய்தவர்கள் வேக்ஸிங் செய்த இரண்டு நாட்கள் கழித்து எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்துவதே நல்லது.

3.பாதாம்

பாதாமைப் பொருத்தவரை முழு பாதாமாகவும் பயன்படுத்தலாம் அல்லது பாதாமை எண்ணெய் வடிவிலும் பயன்படுத்தலாம். பாதாமில் தோலின் கருமைத் தன்மையை மாற்ற தேவையான வைட்டமின் E, A மற்றும் கொழுப்பு அமிலம் (fatty acid) நிறைய உள்ளது.

பயன்படுத்தும் முறை

இரவில் ஐந்து அல்லது ஆறு பாதாமை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை பேஸ்ட் பதத்தில் நன்றாக அரைத்து கருமை நிறத்தின் மேல் தடவ வேண்டும். நமது உடல் அப்போது குளிர்ச்சித் தன்மையை அடையும். பத்து நிமிடம் கழித்து அந்த இடத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வந்தால் தோலின் கருமை நிறம் மறைய வாய்ப்பு உண்டு.

இனிவரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…நமது கண்ணிற்குக் கீழே கண்களைச் சுற்றி கருவளையம் விழுவது ஏன்? அதை எப்படி சரிசெய்வது? இதற்கான பதிலை அடுத்த இதழில் பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்!! (மகளிர் பக்கம்)
Next post ஆண்களே ஜாக்கிரதை!! (மருத்துவம்)