கிரிக்கெட் எங்களுக்கான களம்!! (மகளிர் பக்கம்)
ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் சீரிஸ், முடிந்துவிட்டு இப்போது உலகக்கோப்பை போட்டியும் துவங்கிவிட்டது. கிரிக்கெட் என்றாலே அது ஆண்களுக்கான விளையாட்டு என்று பச்சை குத்தி வச்சுட்டோம். ஆனால் கிரிக்கெட் போட்டியில் பெண்களும் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
பெண்களுக்கான கிரிக்கெட் குழு இருக்கிறதா என்பதே பலருக்கு தெரியாது. ஆண்களுக்கு சரிநிகரா இவர்களுக்கான போட்டியும் நடைபெற்று வருகிறது. அதில் இந்தாண்டு எல்லாருடைய மனதிலும் இடம் பெற்று இருக்கும் பெயர் ஸ்மிருத்தி மந்தனா…
ஸ்மிருத்தி மும்பையை சேர்ந்தவர். பிறந்தது அங்கு தான் என்றாலும், அவரின் தந்தையின் வேலைக் காரணமாக சங்கிலி மாவட்டத்திற்கு குடும்பத்துடன் தன்னுடைய இரண்டாவது வயதில் குடிபெயர்ந்தார் ஸ்மிருத்தி. இவரின் தந்தையும் கிரிக்கெட் வீரர். சங்கிலி மாவட்டத்தின் கிரிக்கெட் குழுவில் இருந்த இவரின் தந்தை பல போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். ஆனால் அவரின் கிரிக்கெட் பயணம் அந்த மாவட்டத்திற்குள்ளே முடிந்துவிட்டது.
தன்னால் நிறைவேற்ற முடியாத பயணத்தை அவரின் வாரிசுள் முடிக்க வேண்டும் என்று நினைத்தார் ஸ்மிருத்தியின் தந்தை. அவரின் எண்ணம் போல் ஸ்மிருத்தியின் சகோதரர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்திற்காக ஸ்மிருத்தியின் அண்ணன் போட்டியிட்டார். அதில் அவரின் ஆட்ட திறமையை பார்த்து ஈர்க்கப்பட்ட ஸ்மிருத்தி தானும் கிரிக்கெட் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். அப்பாவோ தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதால் தன் மகளின் விருப்பத்திற்கு தடை விதிக்கவில்லை.
ஸ்மிருத்தி கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்து களம் இறங்கினார்.‘‘விடியற்காலை ஐந்து மணிக்கே பயிற்சிக்கு போகணும். பயிற்சி முடிச்சிட்டு அப்படியே பள்ளிக்கு போயிடுவேன். அதன் பிறகு மாலையிலும் பயிற்சி இருக்கும். சில சமயம் பள்ளி சீக்கிரம் விட்டுவிட்டால் நேராக பயிற்சி முடிச்சிட்டு வீட்டுக்கு போய் டி.வி பார்க்க ஆரம்பிச்சிடுவேன். பயிற்சி இருப்பதால் டி.வி பார்க்கவே நேரம் இருக்காது’’ என்றார் ஸ்மிருத்தி சிரித்துக் கொண்டே.
தன் 15 வயதில் பயிற்சிக்காக மும்பை அல்லது பெங்களூருக்கு செல்ல முடியாத காரணத்தால் தன் மாவட்டத்திலேயே பயிற்சி எடுக்க ஆரம்பிச்சார். இதற்காக தன்னுடைய சேமிப்பு பணத்தில் சிமென்ட்டில் ஒரு பிட்ச்சை அமைத்தார். அங்குதான் பயிற்சியும் மேற்கொண்டார். ஒன்பது வயதில் இருந்தே அண்டர் 15 பிரிவில் மாநிலத்திற்கான போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தார் ஸ்மிருத்தி.
11 வயதில் அண்டர் 19 பிரிவில் இணைந்தார். 2013ம் ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்களை குவித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 2016ல் நடைபெற்ற வுமன்ஸ் சாலஞ்சர் டிராபி போட்டியில் 192 ரன்கள் எடுத்து அந்த ஆட்டத்தின்நாயகியாக திகழ்ந்தார்.
2014ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியிலும் ஸ்மிருத்தி தேர்வானார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 50 ரன்கள் எடுத்தார். 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்ற ஒரு நாள் போட்டியில் 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். பிறகு வுமன்ஸ் பிக் பேஸ் லீக் போட்டிற்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தினால் அவரால் அந்த லீக்கை தொடர்ந்து விளையாட முடியவில்லை.
ஒரு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் தன் கால் தடயத்தை பதிய ஆரம்பித்தார் ஸ்மிருத்தி. 2017ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி வாகை சூட முக்கிய காரணமாக இருந்தார். அந்த போட்டியில் ‘பிளேயர் ஆப் த மேட்ச்’ என்ற பட்டம் பெற்றார்.
பெண்களுக்கான சர்வதேச டி20 போட்டி இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் 24 பந்துகளில் அதிக வேகமாக 50 ரன்களை குவித்தார். இதனை தொடர்ந்து இங்கிலாந்துடன் நடைபெற்ற பெண்களின் சர்வதேச மூன்று டி20 போட்டியின் கேப்டனாக ஸ்மிருத்தி நியமிக்கப்பட்டார். 22 வயதில் சர்வதேச அளவில் ஒரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் இளம் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்று இருக்கும் ஸ்மிருத்திக்கு இந்தாண்டின் சியட் சர்வதேச விருதில், ‘சிறந்த சர்வதேச விளையாட்டு வீராங்கனை’ என்ற பட்டத்தை அளித்து கவுரவித்துள்ளது.
ஆண்களுக்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியினை கோலாகலமாக கொண்டாடுவது போல் பெண்களின் கிரிக்கெட் போட்டியினையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்ய வேண்டும். இது பெண்களுக்கு ஊக்கம் அளிப்பது மட்டுமில்லாமல், பெண்களின் கிரிக்கெட் குழுவிற்கும் ஒரு அங்கீகாரம் ஏற்படும்.
Average Rating