நான் கட்டியக்காரி – தியேட்டர் ஆர்டிஸ்ட் ரோகிணி!! (மகளிர் பக்கம்)
நமது கலைகளில் மிக முக்கியமான கலை தெருக்கூத்து. அரசியலில் தொடங்கி, கல்வி, ஆரோக்கியம், மூடநம்பிக்கை, சமூகநீதி என பல்வேறு விசயங்களை சாமானியர்களிடம் கொண்டு சேர்க்கப் பயன்படும் எளிய மனிதர்களின் கலை வடிவம் இந்த தெருக்கூத்து. நம் இந்தியாவுக்கே சுதந்திரம் வாங்கித் தரும் அளவுக்கு சக்திவாய்ந்த ஊடகமாகவும் இது செயல்பட்டிருக்கிறது.
பல்வேறு சிறப்புக்களுடன் அழிவின் விளிம்பில் இருக்கும் தெருக்கூத்து கலையையும், அதன் கலைஞர்களையும் மையமாக வைத்து சென்னையில் இயங்கும் “ஃ நாடகக் கம்பெனியும்”, கோவையில் செயல்படும் “உடல்வெளி ஃபவுண்டேஷனும்” இணைந்து மிகச் சமீபத்தில் “அடவு” எனும் நாடகத்தை சென்னை மற்றும் கோவையில் அரங்கேற்றினர். அதில் கட்டியக்காரியாக நடித்து பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷத்தை அள்ளினார் ரோகிணி. தெருக்கூத்துக் கலையின் மீதான அவரது ஆர்வம் மற்றும் கட்டியக்காரியாக அவரின் நடிப்பு குறித்து பேசியபோது…
‘‘ஒரு கலைஞன் எவ்வளவு தகுதியானவன் என்பதன் சான்றுதான் மேடை நாடகங்கள். நான் 7 வருடமா மேடை நாடகங்கள்(theatre play) பண்றேன். தெருக்கூத்தும், தியேட்டர் நடிப்பும் எனக்கு போதை மாதிரி. ஏதாவது ஒரு விதத்தில் இவற்றோடு தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறேன். இல்லையென்றால் நான் சோர்ந்து போகிறேன். இதுவரைக்கும் 100 விதமான பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், இன்னும் திருப்தி வரவில்லை. தியேட்டரில் கற்றுக்கொள்ள கடல் அளவு விசயங்கள் உள்ளது.
அப்போது நான் கோவை பி.எஸ்ஜி கல்லூரியில் சைக்கலாஜி மாணவி. கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக வீதி நாடகம் ஒன்றை நடத்த இருந்தார்கள். அதில் விருப்பம் உள்ளவர்களை இணையச் சொல்லிக் கேட்டார்கள். நானும் எனது பெயரைக் கொடுத்துவிட்டேனே தவிர, அதுவரைக்கும் நான் நடித்ததே இல்லை.
எனக்கும் நடிப்பு வரும் என்றே எனக்குத் தெரியாது. குரல் தேர்வுக்காக முதலில் என்னை அழைத்தார்கள். ஒரே படபடப்பும் பயமுமாக இருக்க, பாதியில் திரும்பிவிடலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் நொடியில் கற்பனையாக நானே உருவாக்கி வெளிப்படுத்திய என் நடிப்பை பார்த்து எல்லோர் கண்களிலும் கண்ணீர்.
அப்போது கிடைத்த கைதட்டல்தான் எனக்கும் நடிப்பு வரும் என்பதை எனக்கே உணர்த்தியது. அதன் பிறகே நடிப்பும், தியேட்டரும் என்னுடைய பேஷன்(passion) ஆனது. கல்லூரி மாணவியாக இருந்தபோதே நிறைய வீதி நாடகங்களில் நடித்தேன். கோவையைச் சுற்றியுள்ள மலைவாழ் மக்களின் வாழ்விடங்களுக்குச் சென்று விவசாயத்தை மேம்படுத்தவும், இயற்கையை பாதுகாக்கவும், உடல் உறுப்பு தானத்திற்காகவும் நிறைய வீதி நாடகங்களை நிகழ்த்தினோம்.
சென்னை சென்று நடிப்பில் மெறுகேற்றி சிறந்த தியேட்டர் ஆர்டிஸ்டாக மாற வேண்டும் என்பதே அப்போதைய என் ஆசை. தொடர்ந்து மேல்படிப்பிற்காக சென்னை பல்கலைக் கழகத்தில் இணைந்தேன். சென்னை பழகிய பிறகு வீதி நாடகங்களை நடத்துகிறவர்களைத் தேடத் தொடங்கினேன். அப்போது முகநூலில் நண்பரின் பதிவு ஒன்று கண்களில் பட்டது. அவரைத் தொடர்பு கொண்டேன். எளிய மக்களின் வாழ்விடங்களான குடிசை மற்றும் சேரி பகுதிகளுக்கே சென்று வீதி நாடகங்களை போடுகிறோம்.
இதில் பெண்கள் கிடையாது. ஆண்கள் மட்டுமே என பதில் வந்தது. இருந்தாலும் விடாப்பிடியாக நானும் கலந்து கொள்கிறேன் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். நான் சற்று குண்டாக இருப்பதால் மக்கள் கிண்டல் செய்வார்கள் என்றெல்லாம் ஆரம்பத்தில் சொன்னார்கள். பரவாயில்லை என்று அதற்கும் ஒத்துக்கொண்டு குழுவில் இணைந்தேன்.
என்னுடைய முதல் வீதி நாடகம், நீலம் அமைப்பிற்காக சென்னை ஐ.சி.எஃப் காலனி பகுதிகளில் நடந்தது. சாலையோரத்து குடிசைவாழ் மக்களின் வாழ்விடங்களுக்கே சென்று தெருக்களில் இறங்கி நடித்தோம். நான் கோயம்புத்தூரில் இருந்து வந்தவள் என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சம் இருந்தது. போகப்போக அதுவும் பழகிவிட்டது.
தொடர்ந்து நிறைய வீதி நாடகங்களில் நடித்தேன். கண்ணகி நகர், வியாசர்பாடி போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று தெருக்களில் இறங்கி நடித்தேன். குழுவில் நான் மட்டுமே பெண் என்பதால் குடிசை பகுதி பெண்களும் எனது சக நண்பர்களும் பாதுகாப்பாக இருந்தார்கள். என் நடிப்பை பார்த்த அனைவரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். தொடர்ந்து எம்.எஸ்.டபிள்யூ கல்லூரி, லயோலா கல்லூரி வளாகங்களில் நடத்திய நாடகங்களில் கிடைத்த கைதட்டல்கள் என் நடிப்பிற்கு மேலும் ஊக்கம் தந்தன.
நெடுஞ்சாலைகளில் நீண்ட தொலைவு, கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்காக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகத்தை மணலியில் அவர்களுக்கு மத்தியில் நடத்தினோம். அப்போதும் என் சக நண்பர்களே பாதுகாப்பு அரணாக எனக்கு இருந்தார்கள்.
படிப்பிற்காக வீட்டில் பணத்தை எதிர்பார்க்க முடியாத நிலையில், வீதி நாடகம் மூலம் வரும் பணமே என் மேல்படிப்பிற்கு உதவியது. அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை. அம்மா தொடக்கப் பள்ளி ஒன்றில் ஹிந்தி ஆசிரியர். கூடவே சர்க்கரை நோயாளி. தற்போது அவர்கள் இருவருக்கும் உதவியாக கோயம்புத்தூரில் இருக்க வேண்டிய நிலை.
அங்கிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கிறேன். தியேட்டர் நண்பர்களின் தொடர்பு இல்லையெனில் நான் முடங்கி விடுகிறேன். பாண்டிச்சேரியில் இயங்கும் ‘இந்தியாநோஸ்ட்ரம்’ தியேட்டர் எனக்கு ரொம்ப பிடித்த இடம். என்னுடைய கனவு லட்சியம் எல்லாமே அங்கு தியேட்டர் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதே. அங்கே எனக்கு நிறைய நண்பர்களும் உண்டு. வார இறுதி நாட்களில் நாடகங்களைப் பார்க்க சென்னை மியூசியம் தியேட்டருக்கு வந்துவிடுகிறேன்.
‘அடவு நாடக’த்தின் இயக்குநர் வெற்றிச்செல்வன் ஏற்கனவே நீலம் அமைப்பின் வீதி நாடகங்களில் என் நடிப்பை பார்த்திருக்கிறார். அப்போதிருந்தே அவரின் நட்பு வட்டத்தில்தான் நான் இருந்தேன். ‘அடவு நாடக’த்துக்கான பணி தொடங்கியதும் என்னை அதில் கட்டியக்காரியாக நடிக்க வைக்க
முடிவானது. கட்டியக்காரி வேஷம் என்பது நாடகத்தில் ஒரு புது யுத்தி. பொதுவாக நாடகத்தில் கட்டியக்காரன் உண்டு. அவர்தான் கதை முழுவதையும் கொண்டு செல்லும் கோமாளி.
சுருக்கமாக கதை சொல்லி. நாடகத்தில் இடம்பெறும் பாத்திரங்களை கிண்டலடிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. பார்வையாளர்களை கதைக்குள் கொண்டுவருவதுடன், நாடகத்தை வழிநடத்தி, நாடகம் சொல்லவரும் கருத்தை பார்வையாளர்களுக்கு கடத்துபவர். நடிப்பில் பல்வேறு திறமை கொண்ட ஒருவர்தான் கட்டியக்காரனாக வர முடியும்.
ஆனால் கட்டியக்காரியாக யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு கட்டியக்காரி கதாபாத்திரம் தேடி வந்தது. உடையலங்காரம் செய்து கட்டியக்காரியாக நான் மாறினேன். நாடக விருது பெற்ற நண்பர் ஃபிலிக்ஸோடு இணைந்து கட்டியக்காரன், கட்டியக்காரியா நடித்தோம்.
குண்டான என் உடல்வாகு கட்டியக்காரி வேடத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. கட்டியக்காரி பாத்திரத்தை அனைவரும் ரசித்தார்கள். பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டல்களை அள்ளினேன். கோவை ‘உடல்வெளி தியேட்டர்’ இயக்குநர் தரணி சார் குரூப்பிலும் நான் இருக்கிறேன். ‘அடவு’ நாடகம் மீண்டும் கோவையில் நடந்தபோது எங்கள் நடிப்பைப் பார்த்து மலைவாழ் மக்கள் பலர் சாமி வந்து ஆடினார்கள். சிலர் உணர்ச்சி பெருக்கால் கால்களில் விழுந்தார்கள்…’’ படபடவென பேசி முடித்தார் ரோகிணி.
உணர்வோடு வாழ்வதே ஒரு சாதனை தான். தினமும் அதையே வாழ்க்கையாகக் கொண்ட தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை ஒரு தவம். அவர்களிடத்தில் அத்தனை உழைப்பு, அவ்வளவு மெனக்கெடல் இருக்கிறது. கர்ணன் வேஷம் போடுகிறவன் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாதுதான். ‘அடவு’ நாடகம் தெருக்கூத்து மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்கள் வாழ்க்கையைப் பற்றியது.
Average Rating