ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: இன்னோர் அரசமைப்பு நெருக்கடியாக மாறுமா? (கட்டுரை)
இந்த வருடம் முடிவடைவதற்குள், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ‘ஆட்சியில் இருக்கும், ஜனாதிபதியின் பதவிக் காலம், முடிவடைவதற்கு முன்னரான, இரண்டு மாதத்துக்கும் ஒரு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும்’ என்பதே சட்டம்.
ஜனாதிபதித் தேர்தலே, அடுத்ததாக வரும் என்று இருந்த போதிலும், எப்போதும் சர்ச்சைகளை உருவாக்கி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபைத் தேர்தலை, அதற்கு முன்னர் நடத்த விரும்புவதாகத் தெரிகிறது.
அவர் இதற்கு முன்னரும், ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்குச் சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மற்றொரு தேர்தலை நடத்த, அவருக்குத் தேவை ஏற்பட்டுள்ளது.
அண்மையில், ஒரு விசித்திரமான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். அவரது சார்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவே, அதை அறிவித்தார். அதன் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலொன்றை நடத்த, மக்களிடம் ஆணையைக் கோரி, சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த, ஜனாதிபதி திட்டமிட்டு இருந்தார் என்பதாகும். அதை எவரும் விரும்பாததால், அத்திட்டம் கைவிடப்பட்டது போலும்.
அதன் பின்னர் தான், அவர் மாகாண சபைத் தேர்தலை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்.
2017ஆம் ஆண்டு, கலப்பு முறையில் தேர்தலை நடத்தும் வண்ணம், மாகாண சபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டது. எனவே, மாகாண சபைகளின் தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டியேற்பட்டது. அப்பணி ,இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான குழுவொன்றிடம் வழங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. அக்காரியம் பூர்த்தியடையாத காரணத்தால், கடந்த வருடம் நடத்தப்படவிருந்த மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவில்லை.
எனவே, பழைய விகிதாசார முறைப் படி, தேர்தலை நடத்த முடியுமா என, உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்டு, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், அத்தேர்தல்களை நடத்துவதே மைத்திரியின் புதிய திட்டம் எனத் தெரிகிறது. ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் விவசாய அமைச்சருமான மஹிந்த அமரவீர, கடந்த வாரம் தெரிவித்த கருத்துகளின் மூலம், இது தெளிவாகிறது.
ஆனால், இதன் மூலம், ஜனாதிபதி என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பது தெளிவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் எதிர்நோக்கியிருக்கும் சிக்கல் நிலையைப் பாவித்து, அதன் மூலம் தான் பயன் பெற, ஜனாதிபதி ஏதோ ஒரு வகையில் இதைப் பாவிக்கப் போகிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.
எனினும், சட்டப்படி ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 09ஆம் திகதிக்கும் டிசெம்பர் 09ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட வேண்டும். அதை ஒத்திப் போடுவதாக இருந்தால், அக்கருத்து அரசமைப்புத் திருத்தமாக, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.
சிலவேளை, அதற்காகச் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அதையும் செய்தேயாக வேண்டும். அவற்றுக்குத் தற்போதைய நிலையில் இடமேயில்லை.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை, எந்தவொரு பிரதான கட்சியும் அதற்கான தமது திட்டத்தை, இன்னமும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. ஐ.தே.க தமது வேட்பாளர் யார் என்பதை, இன்னமும் தீர்மானிக்கவில்லை. ஆனால், அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு, இப்போது கட்சிக்குள் ஆதரவு வேகமாக அதிகரித்து வருகிறது.
அவருக்கும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நீண்ட காலமாகத் தலைமைத்துவம் தொடர்பாகப் பனிப் போரொன்று நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐ.தே.கவுக்குத் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்று, ஐ.தே.க விரோதிகள் உருவாக்கிய கருத்து, தற்போது ஐ.தே.கவுக்கு உள்ளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, இதுவரை ரணிலின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாஷிம் போன்றவர்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இதேவேளை, சஜித் ஒரு தேசியத் தலைவராக முடியுமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அவர் எப்போதும், தேசிய ரீதியலான பொருளாதாரப் பிரச்சினைகள், இனப்பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினைகள் போன்றவற்றின் போது ஒதுங்கியே நின்றுள்ளார்; அல்லது முக்கிய பங்காற்றியதில்லை. தேசிய ரீதியில், தம்மை வளர்த்துக் கொண்ட வேறு தலைவர் ஒருவர், ஐ.தே.கவில் இருப்பதாகவும் தெரியவில்லை.
பொதுஜன பெரமுனவுக்குள்ளும் தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு பெருகியுள்ளது. அவர், கடந்த வருடம் முதல் ‘எலிய’, ‘வியத் மக’ போன்ற பெயர்களில் கருத்தரங்குகளை நடத்தி, தாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு வரப் போகிறோம் என்ற செய்தியைச் சூசகமாகக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பரப்பிவிட்டுள்ளார்.
தனது மகன் நாமலுக்கான சந்தர்ப்பம், பறிபோய்விடும் என்ற அச்சத்தால், மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா போட்டியிடுவதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. ஆயினும், தற்போது கோட்டாவை ஒதுக்கித் தள்ள முடியாத அளவுக்கு, தமது நிலையை அவர் பலப்படுத்திக் கொண்டுள்ளார்.
இருந்த போதிலும், மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் கோட்டாவைப் பகிரங்கமாக அங்கிகரிக்கவில்லை. மஹிந்த தீர்மானிப்பவரே, வேட்பாளர் எனப் பொதுஜன பெரமுனவின் சகல தலைவர்களும் கூறி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருதய சத்திர சிகிச்சை செய்துவிட்டு, கடந்த வாரம் நாடு திரும்பிய போது, கோட்டாவுக்கு வரவேற்பு ஏற்பாடு எதுவும் செய்யப்பட்டு இருக்கவில்லை. இந்த நிலையிலேயே, ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, பொதுஜன பெரமுன தமது வேட்பாளரின் பெயரை வெளியிடவிருக்கிறது.
இவர்களுக்குப் புறம்பாக, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் களத்தில் குதிக்கவிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அவர் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ இப்போது நாட்டில் பெரும் ஆதரவு இல்லாத போதிலும், அவர் தாமும் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது.
ஏனைய சில கட்சிகளும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தலாம். குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணி தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது. தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனச் சிலர், அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தனர். ஆனால், இவர்களால் தேர்தலில் சில தாக்கங்களை ஏற்படுத்த முடியுமேயல்லாது, வெற்றி பெறப் போவதில்லை. எந்தக் கட்சியில் எவர் போட்டியிட்டாலும், அவர்கள் விடயத்தில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. அவற்றில் ஒன்று, இதற்கு முன்னர் எழாத ஒன்றாகும். அதாவது, எந்தவொரு வேட்பாளரேனும் செல்லுபடியான வாக்குகளில், 50 சதவீத வாக்குகளைப் பெற முடியுமா என்பதே அதுவாகும். இரண்டாவது, எந்த வேட்பாளரிடம் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருக்கிறது என்பதாகும்.
சட்டப்படி, ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளுக்கு மேல், ஒரு வாக்கையேனும் பெற வேண்டும். அவர் ஏனைய வேட்பாளர்களை விட, கூடுதலான வாக்குகளைப் பெற்றால் மட்டும் போதுமானதாகாது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், பொதுஜன பெரமுனவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனினும், அக்கட்சியும் அத்தேர்தல்களின் போது செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதம் பெறவில்லை.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற, அந்தத் தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கம் தேர்தல்களைக் கருத்தில் கொண்டே, சில ஜனரஞ்சகத் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, ‘கம்பெரலிய’ திட்டத்தின் மூலம், ஏற்கெனவே சுயதொழிலில் ஈடுபடுவோர், தொழிலாளர்கள், விவசாயிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றவர்கள், மாணவர்கள், மீனவர்கள் போன்ற 80,000க்கும் மேற்பட்டவர்கள், வட்டியில்லா அல்லது மிகவும் குறைந்த வட்டியில் கடன் பெற்றிருக்கிறார்கள். அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியக்காரர்களுக்கான ஊதிய அதிகரிப்புப் போன்றவையும் அமுலாக்கப்பட்டன. எனவே, சிலவேளை ஐ.தே.கவின் வாக்கு வங்கி, இவற்றால் சற்றேனும் பெருகியிருக்கலாம்.
அவ்வாறாயின், பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு, 50 சதவீத வாக்குகளைப் பெறுவது மேலும் கடினமாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே, ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய தேர்தல்களில் ஒருவர், ஒரு கட்சிக்கு மட்டுமே வாக்கையோ அல்லது விருப்பு வாக்கையோ அளிக்க முடியும். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர், தாம் விரும்பும் வேட்பாளருக்கு முதலாவது விருப்பு வாக்கையும் மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கையும் மற்றொரு வேட்பாளருக்கு மூன்றாவது விருப்புவாக்கையும் வழங்க முடியும். இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை வழங்காமல் இருக்கவும் முடியும்.
முதற்சுற்றுக் கணக்கெடுப்பின் போது, எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்காவிட்டால், இரண்டாவது விருப்பு வாக்குகளும் எண்ணப்படும். அந்த இரண்டு சுற்று கணக்கெடுப்பின் படியும், எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், மூன்றாவது விருப்பு வாக்குகளும் கணக்கெடுக்கப்படும். அதிலும் எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், என்ன செய்வது என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறாயின், அது ஓர் அரசமைப்பு நெருக்கடியாகிவிடும்.
வழமையாக ஜனாதிபதித் தேர்தல்களின் போது, எவரும் இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை வழங்குவதில்லை. தமது வெற்றியின் மீது, மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும் என்பதால், எந்தவொரு வேட்பாளரும் அவற்றை, வாக்குச் சீட்டில் குறிப்பிடுமாறு கூறுவதில்லை; கூறுவதாக இருந்தாலும், அதை மாற்றுக் கட்சிக்காரர்களிடம் தான் கூற வேண்டும். இந்தப் பிரச்சினையால் இம்முறை தேர்தல் குழப்பத்தில் முடியும் வாய்ப்பும் இருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தல்: சிறுபான்மையினர் என்ன செய்ய போகிறார்கள்?
தமிழ், முஸ்லிம் கட்சிகளைத் தவிர்ந்த, நாட்டில் ஏனைய சகல அரசியல் கட்சிகளும் இந்நாள்களில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பற்றியே கவனம் செலுத்தி வருகின்றன.
ஒருசில கட்சிகளைத் தவிர்ந்த, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், ஏற்கெனவே முடிவு எடுத்தவர்களைப் போல், ‘தேர்தல் வரட்டும்; வந்தால் பார்த்துக் கொள்ளலாம்’ என்பதைப் போல் இருக்கிறார்கள்.
உண்மையிலேயே, பெரும்பாலான தமிழ், முஸ்லிம் கட்சிகள், ஜனாதிபதித் தேர்தலின் போதான, தமது நிலைப்பாட்டை முடிவு செய்துவிட்டன என்றே தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அனேகமாக ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரிக்கும். பெரும்பான்மையான முஸ்லிம்கள், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான, பொதுஜன பெரமுனவை ஆதரிக்க விரும்பாததால், முஸ்லிம் கட்சிகளும் ஐ.தே.கவையே ஆதரிக்கக்கூடும்.
பொதுஜன பெரமுனவுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாகத் தெரிவதால், சில முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அப்பக்கம் சாய விரும்பலாம். ஏற்கெனவே, உலமா காங்கிரஸ், மஹிந்த அணியில் சேர்ந்துவிட்டது. ஆனால், சாதாரண முஸ்லிம் மக்கள், 2015ஆம் ஆண்டைப் போலவே அவ்வணியை விரும்பவில்லை.
வெற்றி வாய்ப்பு என்ற காரணி இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, மிக மோசமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருபவர்கள், பொதுஜன பெரமுனவினர், அவர்களைச் சார்ந்த ஊடகங்கள் என்பதால், முஸ்லிம் பொது மக்கள், மஹிந்த அணியை விரும்பப் போவதில்லை.
எனவே, வெற்றி வாய்ப்பு என்ற காரணியால், சில முஸ்லிம் தலைவர்கள் மஹிந்த அணியின் பக்கம் சாய விரும்பினாலும், அது, அடுத்து வரும் பொதுத் தேர்தலின் போது, அவர்களைப் பாதிக்கலாம். எனவே, அவர்கள் தமது தற்போதைய நிலைப்பாட்டை மாற்றுவதாக இருந்தால், இரண்டு முறை சிந்திக்க வேண்டியிருக்கும்.
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, மலையகக் கட்சிகள் இதில் மாறுபடலாம். தமிழ் மக்கள் கூட்டணி, சிலவேளை தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம். ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்யப் போகிறதோ, அதற்கு மாறு செய்வதையே, அவர்கள் விரும்புவர். ஆனால், அதற்காக அவர்கள், மஹிந்த அணியை ஆதரிக்கவும் முடியாது.
மலையகக் கட்சிகளிடையிலான போட்டா போட்டியின் காரணமாக, அக்கட்சிகள் பிரிந்து செயற்படலாம். 2015ஆம் ஆண்டு, பெரும்பாலான மலையக மக்கள், ஐ.தே.கவை ஆதரித்த போதிலும், வெற்றி வாய்ப்பு என்ற காரணியின் காரணமாக, சில மலையகக் கட்சிகள் மஹிந்த அணியின் பக்கம் சாயலாம்.
தோட்டத் தொழிலாளருக்கான 50 ரூபாய் சம்பள அதிகரிப்பு, உடனடியாகக் கிடைக்காவிட்டால், சில மலையகத் தலைவர்கள் அதைக் கட்சித் தாவலுக்குப் பாவிக்கலாம்.
கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களின் போது, சிறுபான்மை மக்கள், பொதுவாக மஹிந்த அணியை எதிர்த்த நிலையிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அவ்வணியை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொண்டாலும், பொதுவாகத் தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள், ஐ.தே.க தலைமையிலான ஒரு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையுமே விரும்புவார்கள். ஐ.தே.க அந்த அளவுக்குச் சிறுபான்மை மக்களுக்குச் சேவை செய்திருக்கிறது என்பது இதன் அர்த்தமல்ல. மாற்று அணியாக இருக்கும், மஹிந்த அணியின் இனவாதத்தின் காரணமாகவே, அவர்கள் ஐ.தே.கவை ஆதரிக்கிறார்கள்.
நாட்டில் தொடர்ந்து இருக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு, எந்தவொரு கட்சியிடமும் தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. கோட்டாவின் ‘எலிய’ கருத்தரங்குகளின் போது, அவர் முன்வைக்கும் திட்டங்கள், அவர் கனவுலகில் சஞ்சரிக்கிறார் என்பதையே காட்டுகிறது. ஜனநாயகம், ஊழலற்ற ஆட்சி, பொருளாதார அபிவிருத்தி என்றெல்லாம் அவர் பேசுகிறார். ஆனால், அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் இவை இருக்கவில்லை.
ஐ.தே.கவும் ஸ்ரீ ல.சு.கவும் தமது பலவீனத்தைத் தற்போது காட்டிக் கொண்டு இருக்கின்றன. எனவே, தமது பிரச்சினைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பொருளாதாரம், ஜனநாயகம், நல்லாட்சி போன்றவற்றைக் கருத்தில் கொண்டாவது, வாக்களிக்கச் சிறுபான்மை மக்களுக்கு, இம் முறை ஒரு வேட்பாளர் இல்லை.
Average Rating