கணவரை மீண்டும் ஏற்கலாமா? (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 57 Second

என்ன செய்வது தோழி?

அன்புத் தோழி,

வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்துதான் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. காரணம் கல்யாணத்துக்கு முன்பு பெற்றோர் வீட்டில் மட்டுமல்ல கல்யாணத்துக்கு பிறகு கணவர் வீட்டிலும் கஷ்டம் என்றால் என்ன என்பதை நான் உணர்ந்ததில்லை. அப்படி வாழ்க்கை இனித்தது. அவரது வீடு கூட்டுக் குடும்பம். மூத்தார் பிள்ளை, மச்சினன் பிள்ளை என்று பேதம் எங்கள் வீட்டில் கிடையாது.

எனது பிள்ளைகள் என்னுடன் கொஞ்சி குலாவுவதை விட அவர்களது ஆயா, தாத்தா, பெரியம்மா, சித்தி, பெரியப்பா, சித்தப்பாக்களிடம்தான் அதிகமாக கொஞ்சி குலாவுவார்கள். உரிமையாக இருப்பார்கள். அதேபோல் அவர்கள் பிள்ளைகளும் என்னிடம் அதே உரிமையுடன் இருப்பார்கள். அவர்கள் என்ன வாங்கினாலும் எனக்கு அதே விலையில் அதே தரத்தில் வாங்கித் தருவார்கள் .

மாமனார் ஓய்வு பெற்றவர். என்னைத் தவிர என் மாமியார், மற்ற மருமகள்கள் என எல்லோரும் வேலைக்கு செல்பவர்கள். ஆனால் வீட்டு வேலையை எல்லோரும் பகிர்ந்துதான் பார்த்துக் கொள்வோம். பட்டப்படிப்பு படித்திருந்தாலும் எனக்கு வேலைக்கு செல்வதில் ஆர்வம் இருந்ததில்லை.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என் வீட்டில் எல்லாரும் என்னிடம் எத்தனை அன்பாக இருப்பார்கள் என்பதை விளக்கத்தான். என் கணவரிடமும் அன்புக்கு பஞ்சம் இருந்ததில்லை.

இப்படி இன்பமாக போய்க்கொண்டிருந்த எனக்கு அந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது. என் கணவருக்கும் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள். அதை நான் நம்பவில்லை. ஆனால் தொடர்ந்து வந்த தகவல்கள் என்னை அசைத்துக் கொண்டிருந்தன. கணவரை பிரிந்து வாழும் அந்தப் பெண்ணை என் வீட்டுக்காரர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கிடைத்த தகவல் என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் அதிர வைத்தது.

என் மாமனார், மாமியார் என குடும்பத்தினர் அவரை அழைத்து கேட்ட போது, ‘அப்படியெல்லாம் ஏதுமில்லை’ என்றார். ஆனால் அன்றிரவே என்னிடம் ‘விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு’ என்று மிரட்டினார். நான் மறுத்தேன். அழுதேன். கெஞ்சினேன். பிரச்னைதான் மிஞ்சியது. அன்று முதல் எல்லா இரவுகளும் தூங்கா இரவுகளாகின.

வீட்டில் விஷயம் தெரிந்தது. பெரியவர்கள், அவருக்கு அன்பாகவும், அதட்டியும் பலமுறை புத்தி சொல்லி பார்த்தார்கள். அவர்களை
மட்டுமல்ல குழந்தைகளையும் அவர் கண்டுக் கொள்ளவில்லை. அவர் முடிவில் உறுதியாக இருந்தார். என்னை அடிக்கவும் ஆரம்பித்தார்.ஒருகட்டத்தில் ‘நீங்கள் யாரையாவது கல்யாணம் பண்ணிக்குங்க. நா எதுவும் கேட்க மாட்டேன். விவாகரத்து மட்டும் வேணாம். ஏன்னா நா சந்தோஷமா இருப்பதாக என் அப்பா, அம்மா நெனச்சிட்டு இருக்காங்க. அதை கெடுக்க வேணாம்’ என்றேன்.

அதன்பிறகு விவாகரத்து கேட்டு அவர் என்னை மிரட்டுவதில்லை. வீட்டுக்கு வருவதும் குறைந்தது. ஒருகட்டத்தில் அது நின்றும் போனது. அந்த நேரத்தில் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மாமியார் குடும்பமே பெரும் ஆதரவாக இருந்தது. பெரியக்கா(அவரின் அண்ணி) எனக்கு ஒரு வேலை வாங்கித் தந்தார். கடந்த ஓராண்டாக வேலைக்கு சென்று வருகிறேன். வேலை சூழலும், சுற்றத்தாரின் அன்பும் என் கவலையை குறைக்கத்தான் செய்கிறது.

இப்போது மீண்டும் பிரச்னை. என்னையும், பிள்ளைகளையும் அலட்சியம் செய்து விட்டு சென்ற என் கணவர் என்னிடம் ‘மீண்டும் சேர்ந்து வாழலாம்’ என்கிறார். காரணம் அவர் காதலித்த, திருமணம் செய்ய இருந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறாராம். அதை அவர் சொல்லவில்லை.

ஆனால் அதை மறைத்து,‘உன் அன்பை புரிந்து கொண்டேன், தவறு செய்து விட்டேன். உனக்கும், பிள்ளைகளுக்கும் துரோகம் செய்து விட்டேன். இனி ஒழுங்காக இருப்பேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்’ என்கிறார். அவரால் கல்லாக இறுகிப்போன என் மனம், அவரது கெஞ்சலால் இளக மறுக்கிறது. என்னால் தனித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையை என் வேலையும், இந்த ஓராண்டும் தந்திருக்கின்றன.

ஆனால் என் மாமியார் வீட்டில், ‘அவன் பண்ணினது தப்புதான். மன்னிச்சுடுமா… ஏதோ புத்தி கெட்டு பண்ணிட்டான். பசங்களுக்காக பாருமா’ என்கிறார்கள். என் கணவர் கைவிட்ட நிலையில், எனக்கு பெரிய ஆதரவாக இருந்தவர்கள் அவர்கள்தான். அவர்கள் சொல்வதை கேட்கலாமா என்று சில நேரங்களில் தோன்றுகிறது. ஆனால் அவரால் நான் பட்ட வேதனைகளும், வலிகளும் அவரை ஏற்க மறுக்கிறது. என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறேன்.வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்ததுதான் என்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் எப்போதும் துன்பம்? என்ன செய்வது நான்?
இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்களின் தன்னம்பிக்கை, பொறுமை இரண்டும் பாராட்டுக்குரியது. ஒரு பிரச்னையில் இருந்து வெளியில் வந்து இருக்கிறீர்கள். மேலும் குழந்தைகளுக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் முன்னேற வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற முயற்சிகள் போற்றுதலுக்குரியது. வேலையும், காலமும் உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் கணவரின் குடும்பம் உங்களுக்கு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறது. மகன் என்ன தவறு செய்தாலும் ஆதரிக்கும் பெற்றோர்கள் மத்தியில் உங்கள் மாமியார் குடும்பம் வித்தியாசமானதுதான்.

அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்கள். அதனால்தான் அவர்கள் சொல்வதை கேட்காவிட்டால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அவர் மீதான நம்பிக்கை ஒருமுறை போய்விட்டது. அதனால் மீண்டும் அவரை எப்படி நம்புவது என்றும் நீங்கள் யோசிக்கிறீர்கள். கணவன்-மனைவி என்ற உறவின் ஆணி வேரே நம்பிக்கைதான்.

அது ஆட்டம் கண்ட பிறகு உறவு குறித்த கேள்வி எழுவது இயல்பு.அதே நேரத்தில் நீங்களாகவே ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னால், உங்கள் குடும்பத்தினர் சொல்வதை அதிகம் ஆராயாமல் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். நீங்களும், உங்கள் கணவரும் தனியாக பேச வேண்டும். அவரையும் பேச வைக்க வேண்டும். அப்போது உங்கள் பயம், பிரச்னை, சந்தேகங்கள் என்ன என்பது குறித்தும், அவரின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் மனம் விட்டு பேசி தீர்வு காணலாம்.

அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் சேர்க்க வேண்டாம். அவர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்ல நேரிடலாம். நீங்கள் இரண்டு பேர் மட்டும்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மன நல ஆலோசகர்களை(Marital Therapist) அணுகி பேசுவது நல்லது. அவர்கள் ஒரு சார்பு இல்லாமல் நீங்கள் இருவரும் சொல்லும் பிரச்னைகளின் அடிப்படையில் தீர்வு சொல்வார்கள்.

நீங்கள் சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா என்பதை உங்கள் கடிதத்தை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது. அவர் ‘சேர்ந்து வாழ விரும்புகிறேன்’ என்று வருகிறார். அது தவறில்லை. அதற்காக உடனடியாக போய் வாழுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் பேசுங்கள்… அதுவும் மனம் விட்டு பேசுங்கள் அல்லது மண நல ஆலோசகரை (Marital Therapist) நாடுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக… ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல…

என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004

மணம் வீசும் மலர்களுக்கும் மருத்துவ குணமுண்டு

* இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும்.

* காய்ந்த ஆவாரம்பூவை நீரில் கொதிக்க வைத்து பால், சர்க்கரை கலந்து காபியாக பருகி வர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும்.

* அகத்திப்பூவை பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

* நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட மலச் சிக்கல் ஏற்படாது.

* மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

* தாழம்பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது.

* செம்பருத்திப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

* ரோஜாப்பூவின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரும். பாலில் ரோஜா இதழ்களை சேர்த்து பருகினால் நெஞ்சு சளி நீங்கும். ரத்த விருத்தியடையும்.

* வேப்பம்பூ சிறந்த கிருமி நாசினி. உடல் சூட்டை தணிக்கும்.

* முருங்கைப்பூ ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.

* மல்லிகைப்பூ கண் பார்வையை கூர்மையாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

* கருஞ்செம்பை பூவை, நல்லெண்ணையுடன் காய்ச்சி குளித்து வந்தால் தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி நீங்கும்.

* குங்குமப்பூவை கர்ப்பிணிகள் பாலில் சேர்த்து காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீருக்கடியில் கிடைத்த 10 மர்மமான பொருட்கள்! (வீடியோ)
Next post லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!! (அவ்வப்போது கிளாமர்)