உயிர்த்திசுக்களை வலுவாக்குங்கள்! (மருத்துவம்)
எலும்புகள் என்பவை உயிர் உள்ள திசுக்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம் புதிய எலும்புத் திசுக்கள் உருவாவதுடன் எலும்புகளும் வலிமையடையும். அது மட்டுமல்ல தசைகளும் உறுதி அடையும். எடையை தாங்கக்கூடிய பயிற்சிகளை செய்யும்போது உங்கள் உடலின் மொத்த எடையையும் கால்கள் தாங்கி கொள்ளும். அதனால் கால்களும் வலுப்பெறும்.
எடையை தாங்கும் உடற்பயிற்சிகளுக்கு சில உதாரணங்கள்…வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், டென்னிஸ் மற்றும் ஹாக்கி விளையாடுவது, படிகளில் ஏறுவது, கயிறு தாண்டும் பயிற்சிகள் மற்றும் குதிக்கிற பயிற்சிகள், கூடைப்பந்து விளையாடுவது, நடனமாடுவது, வெயிட் லிஃப்டிங்.நீச்சலும் சைக்கிள் ஓட்டுதலும் உடல் எடையைத் தாங்கும் பயிற்சிகள் அல்ல. எனவே, அவை வலிமைக்கு நேரடியாக உதவாதவை. ஆனால், இந்த இரண்டு பயிற்சிகளை செய்வதன் மூலம் தசைகள் வலுப்பெறும்.
ஆரோக்கியமான தசைகளே ஆரோக்கியமான எலும்புகளுக்கு அஸ்திவாரம். அந்த வகையில் நீச்சலும் சைக்கிள் ஓட்டுதலும் மறைமுகமாக எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. தவிர இந்த இரண்டு பயிற்சிகளும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லவை. உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் இத்தகைய எடையை தாங்கும் பயிற்சிகள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம். எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கிற வயது அதுவே.
வாழ்க்கை முழுவதற்குமான எலும்புகளின் அடர்த்தியையும், ஆரோக்கியத்தையும் அந்த வயதிற்குள்ளாகவே அவர்கள் பெற்றுவிடுவார்கள். உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் அதை இன்னும் முழுமையாக பெற முடியும்.ஆறு முதல் 17 வயது வரையிலானவர்கள் தினமும் ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்காக செலவழிக்க வேண்டும்.
ஒரு மணி நேர பயிற்சியையும் ஒரே மூச்சில் செய்ய வேண்டுமென அவசியம் இல்லை. நாள் முழுவதும் சிறிது சிறிது நேரமாக பிரித்து கொண்டு மொத்தமாக 60 நிமிடங்கள் பயிற்சி செய்கிற மாதிரி திட்டமிட்டு கொள்ளலாம். குறிப்பாக எலும்புகளை பலப்படுத்தும் பயிற்சிகளை டீன் ஏஜில் இருப்பவர்களும் வாரத்துக்கு மூன்று முறையாவது அவசியம் செய்ய வேண்டும்.
மிகவும் சிறிய குழந்தைகளுக்கு உடற்பயிற்சி எல்லாம் அவசியம் இல்லை என்பதே பலரின் கருத்து. ஆனால் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் அது அவசியம். அந்த வயதில் குழந்தைகளை நிறைய விளையாடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.35 வயதுக்குப் பிறகு எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். இதை தவிர்க்க 35 பிளஸ் வயதில் இருப்பவர்கள் வாரத்திற்கு இருமுறையாவது தசைகளுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும்.
வேகமாக நடப்பது மிதமான வெயிட் லிஃப்டிங், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை சுமந்து செல்வது, Resistance band உபயோகித்து பயிற்சிகள் செய்வது, கடினமான தோட்ட வேலை போன்றவற்றை செய்யலாம்.ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்களும் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் எலும்புகள் மேலும் வலுவிழப்பதை தவிர்க்கலாம். ஆனால் இவர்கள் எலும்புகளின் தன்மையை அறிந்து மருத்துவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும்.
சிலருக்கு எலும்புகள் மிகவும் மென்மையாக இருக்கும் அல்லது அவர்களுக்கு கடந்த காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட அனுபவங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சிகள் செய்வதில் சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கும்.
பயிற்சிகள் செய்தால் எலும்புகள் உடைந்து விடுமோ, மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுமோ என்றெல்லாம் பயப்படுவார்கள். சரியான மருத்துவ ஆலோசனையின் பெயரில் முறையான பயிற்சிகளை செய்வதன் மூலம் அவர்களும் எதிர்காலத்தில் மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை தடுக்கலாம். தவிர இத்தகைய பயிற்சிகள் அவர்களின் உடலில் பேலன்ஸை ஏற்படுத்தும்.
எதிர்ப்பு சக்தியை கூட்டும். வலிகளை குறைக்கும்.உடற்பயிற்சிகள் செய்யும்போது கை, கால்கள் பிசகிவிடுமோ, விழுந்துவிடுவோமோ என்றெல்லாம் பயந்து உடல் இயக்கத்தையே குறைத்துக் கொள்வார்கள் பலரும். ஆனால், இது மெல்ல மெல்ல உடலின் பலத்தை குறைத்து எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதித்து எளிதில் ஃபிராக்ஸர் ஏற்பட வழிவகுத்துவிடும்.
குதிப்பது, ஓடுவது, டென்னிஸ், கோல்ஃப் போன்றவற்றை விளையாடுவது, இடுப்பை திருப்புவது போன்ற பயிற்சிகளை இவர்கள் தவிர்ப்பது நல்லது. அவற்றுக்குப் பதிலாக தாய்ச்சி, வாக்கிங், படிகளில் ஏறி இறங்குவது, ஏரோபிக்ஸ் போன்ற மிதமான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
Average Rating