மௌனமாய் கொல்லும் அதீத மன அழுத்தம்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 43 Second

‘‘மன அழுத்தம் பற்றி நம் எல்லோருமே நன்கு அறிவோம். அதீத மன அழுத்தம் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?! இன்றைய நவீன உலகம் தொழில்ரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் எந்த அளவு முன்னேற்றமடைந்து வருகிறதோ, அந்த அளவுக்கு மனதளவில் சிதைந்துகொண்டும் வருகிறது. அதன் எதிரொலிகளில் ஒன்றுதான் அதீத மன அழுத்தம்.

இதை தொடர் மனத்தளர்ச்சி சீர்குலைவு (Persistent Depressive Disorder) அல்லது Dysthymia என்றும் அழைப்போம்’’ என்று சொல்லும் மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்த், அதீத செயல்பாட்டு மன அழுத்தம் பற்றியும், யாருக்கெல்லாம் இந்த சீர்குலைவு ஏற்படும் என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்…

‘‘ஒருவருக்கு இந்த Persistent Depressive Disorder சீர்குலைவு இருப்பதை அடையாளம் காண்பது கடினம் என்பதால், இந்தச் சீர்குலைவு இருக்கும் நபரின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாது. மேலும் அவருக்கு இல்லை என்றும் உறுதியாக சொல்ல முடியாது. காரணம்… இவர்கள் இயல்பாகவே இருப்பார்கள்.

வேலைக்கு செல்வது, கேளிக்கை விஷயங்களில் ஈடுபடுவது, விருந்து விழாக்களில் கல்ந்து கொள்வது என மற்றவர்களைப்போல இயல்பாகவும், முடிந்தவரை அன்றாட நடவடிக்கைகளை சுமூகமாக மேற்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இப்பிரச்னை இருப்பவர்கள், இதற்காக தங்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதின் அவசியத்தையும் உணராதவர்களாக இருப்பார்கள்.’’

வழக்கமான மன அழுத்தத்துக்கும் அதீத மன அழுத்தத்துக்கும் என்ன வித்தியாசம்?

‘‘பொதுவாக வரக்கூடிய மன அழுத்தத்தை Major Depression என்று சொல்வோம். 2 வாரங்கள் வரை இருக்கும். திடீரென்று அழுவார்கள் அல்லது எரிச்சலடைவார்கள். இது வெளிப்படையாகத் தெரியும். தற்காலிகமாக இருந்துவிட்டு குறைந்துவிடும். ஆனால், Dysthymia என்கிற அதீத மன அழுத்தம் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து 2 வருடங்கள் வரை நீடிக்கும்.

இது நாட்பட்ட மன அழுத்தம் உள்ள நிலையாகக் குறிப்பிடலாம். 2 வருடங்கள் தொடர்ந்து அறிகுறிகள் இருந்து, மிதமான மன அழுத்தம் இருந்தால் மட்டுமே இதை Dysthymia என்று குறிப்பிடுவோம். எல்லா வயதுக் குழுவினருக்கும் வரலாம். மற்ற மன அழுத்தக் கோளாறு உள்ளவர்களால், பள்ளி, அலுவலகம் செல்ல முடியாது, அப்படியே சென்றாலும் கவனம் செலுத்த முடியாது. வீட்டை நிர்வகிக்கும் பெண்களால் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

மிகவும் குறைவான ஆற்றல் இருப்பதாக உணர்வார்கள். ஆனால், Dysthymia உள்ளவர்கள் இயல்பாக எல்லா வேலையும் செய்வார்கள். ஆனால், வெளியே சொல்லாத மன அழுத்தத்தில் இருப்பார்கள்.’’

இதன் அறிகுறிகள் என்ன?

‘‘அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற மன அழுத்த பிரச்னை அறிகுறிகள் போலவே எந்த ஒரு வேலையைச் செய்வதற்கும் தூண்டுதல் வேண்டும். அதிகம் சாப்பிடுவார்கள் அல்லது பசி உணர்வே இல்லாமல் உணவை மறப்பார்கள். தூக்கமும் அப்படித்தான். ஒன்று அதிகம் தூங்கிக்கொண்டே இருப்பார்கள், இல்லையென்றால் தூங்கவே மாட்டார்கள். எதிலும் ஆர்வமில்லாமல், தனக்கு எதுவுமே நல்லது நடக்காது என்ற எதிர்மறை எண்ணங்களால் சோர்வாக இருப்பார்கள்.

மற்றவர்களைப்பற்றியும் தவறாக சித்தரித்துக் கொள்வார்கள். எப்போதும் சந்தோஷம் இல்லாமல், சோகமாக இருப்பார்கள். திடீரென்று, அதிக மகிழ்ச்சியோடும் வளைய வருவார்கள். எதிரில் இருப்பவர்களுக்கு, தான் நன்றாக இருப்பதுபோலவும் காண்பித்துக் கொள்வதால் மற்றவர்களுக்கும் இவர்களுடைய பாதிப்பு தெரியாது. இவர்களுடைய குணமே அப்படித்தான் என்கிற மாதிரி நினைத்துக் கொள்வார்கள்.

தனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை அவர்களும் அறிந்திருக்க மாட்டார்கள். நீண்ட நாட்களாக இருப்பதால் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிகிச்சைக்கும் வர மாட்டார்கள். மருத்துவர்களுக்கே கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். உலகத்தில் இருக்கும் சந்தோஷத்தை அனுபவிக்காமல் அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.’’

எந்த காரணங்களால் இப்பிரச்னை ஏற்படுகிறது?

‘‘Dysthymia-விற்கான காரணங்கள் என்று பார்த்தால், மூளை நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாக இருக்கலாம். சிலருக்கு நெருங்கிய உறவினரின் இறப்பு, பொருள் இழப்பு, விவாகரத்து போன்ற நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம். நீண்ட நாட்களாக இருந்து, கவனிக்காமல் விட்டுவிட்டால் Major Depression-க்கு கொண்டுவிட்டுவிடும்.

சிலருக்கு Major Depression-ம், Dysthymia- இரண்டும் ஒரே நேரத்தில்கூட இருக்கலாம். இதற்கு டபுள் டிப்ரஷன் என்று பெயர். தொடர்ந்து 2 வாரங்கள் மிக மோசமான மன அழுத்தம் ஏற்பட்டு Major Depression நிலை, அடுத்து இரண்டு வாரங்களுக்கு Dysthymia என இரண்டும் மாறி மாறி வரும்.’’

சிகிச்சைகள் பற்றிச் சொல்லுங்கள்…

‘‘பேச்சு சிகிச்சை(Talk Therapy), உளவியல் சிகிச்சை(Psycho Therapy) மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavioural Therapy) போன்றவை அளிக்கப்படும். இவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வைக்கும் Goal Setting நடவடிக்கைகள் கொடுத்து பயிற்சி அளிக்கலாம். கூடவே மன அழுத்த எதிர்ப்பு(Anti Depressants) மருந்துகளும் கொடுக்கும்போது நல்ல பலன்
கிடைக்கும்.

Dysthymia-விலேயும் கூட தீவிர நிலையும் இருக்கிறது. 2 வருட காலங்களுக்கு இது இருந்தாலும், நடுநடுவே தீவிர மன அழுத்த நிலைக்கு சென்றுவிடுவார்கள். அலுவலக வேலைகளில் கூட இவர்களை உந்திக் கொண்டே இருந்தால்தான் செய்வார்கள். ஆர்வமில்லாமல் இயந்திரத்தனமாக வேலை செய்வார்கள்.

அதனால், அவர்களுடைய சுபாவமே அப்படித்தான் என்று கணித்து விட்டுவிடுவோம். குடும்பத்தை பராமரிக்கும் பெண்கள் தங்களுக்காக சமைத்து சாப்பிடாமல், குடும்பத்தினருக்காக செய்வார்கள். இது பெண்களுக்கே உண்டான இயல்பு என்றும் விட்டுவிடுவார்கள். பொதுவாகவே பெண்கள் வேண்டாத கவலைகள் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால், பெண்கள்தான் இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள்.

இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோமானால், ஒருவேளை தங்களுக்கு Dysthymia இருக்குமோ என்று சிகிச்சை எடுத்துக் கொள்ள முன் வருவார்கள்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ரகசிய திருமணம் செய்துக் கொண்ட நடிகை !! (சினிமா செய்தி)