அன்னையர் தினத்தில் ஓர் அரிய ஆரம்பம்…!! (மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 21 Second

‘மகளிர் மட்டும் க்ராஸரிஸ் பிரைவேட் லிமிெடட்’ என்ற பெயரில், பெண்களுக்காக பெண்களே நடத்தும் ஒரு அற்புத முயற்சி. நகரத்துப் பெண்களுக்கு ஏதோ ஒரு கம்பெனியில், எப்படியோ தங்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்திடும். ஆனால், கிராமத்துப் பெண்கள், விவசாயக் கூலி அல்லது கட்டிட வேலைக்கு சித்தாள், இல்லைஎன்றால் அருகிலிருக்கும் தொழிற்சாலைகளில் ஏதோ ஒரு கூலி வேலை.

தன் கணவனின் குடிக்குப்போக மீதம் வரும் வருமானம் போதாமல், தானும் வேலைக்கு போனால்தான் குடும்பத்தை காப்பாத்த முடியும் என்ற இவர்களின் நிலை பரிதாபம்தான். சரி, நன்றாக சமைப்பது, தைப்பது, கைவினைப்பொருட்கள் செய்வது இப்படி ஏதாவதொரு திறமை இருந்தாலும், அந்தத் திறமையை வெளிக்காட்டிக்கொள்ளவும் தெரியாது, தான் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்தி, விற்று பணம் சம்பாதிக்கவும் தெரியாது. இப்படி ஏகப்பட்ட சவால்களை சந்திக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்வில் ஔியூட்ட வந்துள்ளது ‘மகளிர் மட்டும் க்ராஸரிஸ் நிறுவனம்’

கடந்த மூன்றரை வருடங்களாக மதுரையில் உள்ள செக்காவூரணி கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. அன்னையர் தினமான மே 12 முதல் தமிழகமெங்கும் கால்பதிக்க உள்ளது. உண்மையிலேயே மாறுபட்ட கோணத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வில் ஒரு புது வாழ்விற்கான விதையை விதைத்து, தன் செயலிலும் வித்தியாசத்தை புகுத்தியுள்ளது.

பெண்களின் முன்னேற்றத்துக்காக இப்படியொரு ‘மாத்தியோசி’ தத்துவத்தை கையில் எடுத்துள்ள ‘மகளிர் மட்டும்’ செயல்பாடுகளை கேள்விப்பட்டு, அதன் நிர்வாக இயக்குனர் முருகானந்தம் அவர்களை சந்தித்தோம். உற்சாகமாய் வரவேற்றவர் தன்னுடைய நிறுவனத்தின் செயல்பாட்டினை பற்றி பேசத் துவங்கினார்.

உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற வித்தியாசமான சிந்தனைக்கான விதை எப்படி உருவானது?

என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேருவதற்காக இன்டர்வியூ கடிதம் வந்தது. அந்த கடிதத்தை பார்த்த போது தான் நாம் ஏன் மற்றவர்களிடம் வேலை செய்ய வேண்டும். நாமே ஒரு தொழிலை துவங்கினால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து என் தம்பி சதீஷிடம் பேசிய போது, அவனும் என்னுடன் முழுமனதாக இறங்கினான். மளிகைத் தொழிலை இருவரும் சேர்ந்து கையில் எடுத்தோம். மளிகைப் பொருட்களை பேக்செய்யும் தொழிலை ஆரம்பிச்சோம்.

இதற்கான மிஷின்களை வாங்கி பேக்கிங் போட ஆரம்பித்தோம். பேக்கிங் போடும் தொழில் என்பதால் சிலருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முடிந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் என் மனதில் பட்டது. தனிநபராகவோ, மிஷினை நம்பி வேலை செய்யும் போது, அந்த வளர்ச்சி தனிநபரை சார்ந்து மட்டுமே இருக்கும். அதை கொஞ்சம் மாறுபட்டு செய்யும் போது, நம்மால் ஒரு 100 பேர் முன்னேற முடியும் என்று தோன்றியது.

பொதுவாக நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்கள் அவர்களின் அடுத்த தலைமுறைக்காக சொத்து சேர்ப்பது வழக்கம். அது தவறில்லை. ஆனால் பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்க்க நினைப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கிரிமினல் குற்றம். நீ வாழும்போதே உணவே இல்லாமல் சக மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, பிறக்கவே பிறக்காத உன் சந்ததிக்காக சொத்து சேர்த்து வைப்பதை இந்தத் தலைமுறைக்கு செய்யும் துரோகமாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஏழ்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவிலிருந்து வரும் பெண்களின் வாழ்விலும், வாழ்வாதாரங்களிலும் முன்னேற வேண்டும் என்பதை என் அடிப்படைக் குறிக்கோளாக மாற்றினேன். எங்களின் நிறுவனம் வழியாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்களின் ஏழ்மையை நீக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிச்சேன்.

நான் மேனேஜிங் டைரக்டராகவும், என் தம்பி சதீஷ் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டராகவும் இணைந்து இந்த நிறுவனத்தை செயல்படுத்தி அதற்கு ஒரு முழு வடிவத்தை அமைத்தோம். தற்போது டைரக்டராக இருக்கும் என் மனைவி ராதிகா தான் ‘மகளிர் மட்டும்’ நிறுவனத்தை முழுமையாக நிர்வகித்து வருகிறார்.

அவருடன் இணைந்து மற்ற பெண்களும் பங்கெடுத்து வருகின்றனர். என்னுடைய இந்த புராஜக்டை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் போது 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பாக மட்டுமல்லாமல், தனி நபர் தொழிலாகவும் அமைக்க இருப்பதால், எங்களுடன் இணைந்து செயல்படும் அனைத்து பெண்களுமே முதலாளிகள் தான்.

பெண்களுக்கான திட்டமாக முன்னெடுத்த காரணம் என்ன?

என் அம்மாதான் இதற்கு இன்ஸ்பிரேஷேன். அப்பா இறந்த பிறகு, என்னையும், என் தம்பியையும் அவர் மிகவும் கஷ்டப்பட்டுதான் படிக்க வைத்தார். நாங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆண் துணை இல்லாமல் அம்மா தன் வாழ்க்கையை எங்களுக்காக முழுமையாக அர்ப்பணித்தார். அவர் கஷ்டப்பட்ட ஒவ்வொரு தருணத்தையும் நாங்க பார்த்து வளர்ந்து இருக்கோம்.

கிராமத்தில் பெண்கள் அந்தி சாய்ந்த பிறகு வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வெளியூருக்கும் போக அனுமதிக்கமாட்டாங்க. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மாமியார் பிரச்னை, குடிகார கணவன், போதிய வருமானம் இல்லாத கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவை தாய்மார்கள் என பல விதமான கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதைத் தான் ‘மகளிர் மட்டும்’ செயல்படுத்தி வருகிறது.

மளிகைப் பொருட்களை தேர்வு செய்த நோக்கம்?

ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசியம் மற்றும் அன்றாட தேவை என்று பார்த்தால் சாப்பாடு தான் பிரதானமாக இருக்கும். அந்த சாப்பாட்டிற்காக மளிகைப் பொருட்களை நாம் அன்றாடம் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம். தேவையும் அதிகம் என்பதோடு, ஒரு வருடம் வரையிலும் பாதுகாத்து வைக்க முடியும். மேலும் தரமான பொருள் என்றால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 மளிகைப் பொருட்கள் விற்பனையாகும். அதனாலேயே இந்த தொழிலை துவங்கினோம்.

இதற்கான கரு மூன்று வருடங்களுக்கு முன்பே உருவாகிவிட்டது. 2016ல் ‘மகளிர் மட்டும்’ என்ற பெயரில் பதிவு செய்ததிலிருந்து, கடந்த மூன்றரை வருடங்களாக இதற்கான ஆய்வுகளையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும் செய்து வருகிறோம். ஒவ்வொரு பொருளும் எந்த மாநிலத்தில் விளைகிறது, எங்கு தரமாக, மலிவு விலையில் கிடைக்கிறது, எப்படி விற்பனை செய்வது என்று முழுவதுமாக ஒரு ரிப்போர்ட் தயார் செய்து, அதற்கான வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்து இப்போது ஓபன் மார்க்கெட்டில் நுழைந்துள்ளோம். ஆரம்பத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தி வந்த எங்கள் திட்டத்தை அன்னையர் தினத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த இருக்கிறோம்.

பலசரக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து எங்கள் குடோனில் சேமித்து வைத்துவிடுவோம். பிறகு, பேக்கிங் யூனிட்டுகளுக்கு சப்ளை செய்வோம். பேக்கிங் யூனிட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது, தலையை கவர் செய்து கொள்வது, கைகளில் க்ளவுஸ் அணிந்து கொள்வது, எப்படி பாதுகாப்பது என அவர்களுக்கு ட்ரெயினிங் மற்றும் வீட்டில் அதற்கான தனி அறையை தயார் செய்து கொடுப்பதோடு, FSAIல் பதிவு செய்தும் கொடுத்து விடுவோம். பேக்கிங் செய்து ரெடியாக வைத்திருக்கும் பொருட்களை ஒவ்வொரு நாளும் காலை 7½ மணிக்குள் கலக்ட் செய்து சென்ட்ரலைஸ்டு குடோனுக்கு கொண்டு வந்துவிடுவோம். ஆர்டர்களுக்கு ஏற்ப பேக் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்துவிடுவோம்.

கொள்முதல், விற்பனை மற்றும் குடோன் என எல்லாவற்றுக்கும் தனித்தனி குழுக்களை அமைத்திருக்கிறோம். ஏற்கனவே, அரசாங்கம் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நபார்டு திட்டங்களை வைத்திருந்தாலும், அவர்கள் அந்தந்த பகுதிகளில் விளையும் பொருட்களை அந்தப் பகுதியிலேயே விற்பதால் சரியான விலை கிடைக்காமல் தோல்வியடைந்து விடுகிறது. ஆனால், நாங்கள் ஒரு இடத்தில் விளையும் பொருளை வாங்கி வேறு இடத்திற்கு சென்று சேர்க்கிறோம்.

எதிர்காலத்தில், இந்த நபார்டு திட்டத்தில் இணைந்து செயல்பட இருக்கிறோம். அப்போது, விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்; இடைத்தரகர்கள் இல்லாததால், நுகர்வோருக்கும் மலிவான விலையில் பொருள் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். இந்த இடையில் கைமாறும் வேலையை குறைப்பதுதான் எங்கள் நோக்கம். கமிஷனைக் குறைத்தாலே விலைவாசி தானாக குறையும்.

சந்தித்த சவால்கள்…

இந்த விஷயத்தை பெண்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதே பெரும் சவாலாக இருந்தது. எந்த அளவிற்கு சாத்தியம் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. உணவு சம்பந்தப்பட்ட துறை என்பதால் லட்சம், கோடிக்கணக்கில் செலவாகிறது. தொழில் நுட்பத்தை புகுத்த லட்சக்கணக்கில் செலவு செய்து சாஃப்ட்வேர் தயாரிக்க வேண்டியிருக்கிறது.

கிராமப்புறத்தில் உள்ள சந்தையில் தொழில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகள், மக்கள் தொகை, அவர்களின் வாங்கும் திறன் எல்லாவற்றையும் கணக்கிட்டு அதற்கு ஏற்றபடி பெண்களுக்கு வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஒருவருக்ேக அதிக வாய்ப்பை தராமல் ஒருவர் அதிகபட்சம் 15 ஆயிரம் வரை வருமானம் பார்க்கும் வகையில் வாய்ப்பை பகிர்ந்து
அளிக்கிறோம்.

இந்த தடைகளையெல்லாம் கடந்து, இப்போது பெண்களும் தாங்கள் முதலாளியாக இருக்கும் சந்தோஷத்தின் ருசியை வெற்றிகரமாக கொடுத்துவிட்டோம். அதற்கான கல்வியையும் கொடுத்திருக்கிறோம். இந்த வெற்றியின் அடுத்த கட்டமாக அரசாங்க உதவியை நாட இருக்கிறோம்.

பெண்களுக்கு வியாபாரக்கடனையும் பெற்றுத் தருவோம். அடுத்த 5 வருடங்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் தயார் செய்து வைத்துவிட்டோம். இன்று நகரத்தில் இருக்கும் பெண்களுக்கு தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஆன்லைன் மார்க்கட்டிங், முகநூல் வழியாக விற்பனை என அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால், கிராமப்புற பெண்களுக்கு இதைப்பற்றிய கல்வியும் இல்லை, சந்தைப்படுத்தும் வாய்ப்புகளும் இல்லை. அதற்கான வழிமுறையை நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம்.

அடுத்து, பொருளை உற்பத்தி செய்யும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தடை அதை சந்தைப்படுத்துவது. அந்தப் பொருளுக்கென்று தனி பிராண்ட் உருவாக்க வேண்டும், கவர் பிரிண்ட் செய்ய வேண்டும். அந்தப் பெயரை மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டும். விளம்பரத்திற்கு லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டியுள்ளது.

ஒரு 5 ஆயிரம், 6 ஆயிரம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் பெண் இவ்வளவு பெரிய செலவை எப்படி சமாளிப்பாள்? இந்த சிக்கலை போக்கவே, தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருப்பவராக இருந்தாலும், தயாரிக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் ‘மகளிர் மட்டும்’ பெயரில் ஒரு என்.ஓ.சி வாங்கினால் மட்டும் போதும். ‘மகளிர் மட்டும்’ என்ற பெயர் அச்சடிக்கப்பட்ட சைஸ் வாரியான கவரில் ரீபேக் செய்து, லேபிளில் குறிப்பிட்ட பொருளின் தயாரிப்பாளர் பெயரையும் அச்சடித்து, சந்தைப் படுத்தித் தருகிறோம்.

‘மகளிர் மட்டும்’ என்ற பெயரில் சந்தைப்படுத்தும் வேலையை மட்டுமே நாங்க செய்கிறோம். ஊறுகாயோ, வத்தலோ, ஜாமோ எது வேண்டுமானாலும், கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவரின் தயாரிப்பை எங்கள் மொபைல் மார்க்ெகட் மூலம் சென்னையில் விற்க முடியும். எங்க பிராண்டின் கீழ் விற்கும்போது விளம்பரம், போக்குவரத்து, பிராண்ட் நேம், பேக்கிங் என அனைத்தும் குறைக்கப்படுவதால், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் பொருள் கிடைக்கும். இதுதான் ‘மகளிர் மட்டும்’ திட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய நன்மை.

எதிர்காலத் திட்டம்

இப்போது மளிகையை கையில் எடுத்துள்ள நாங்கள், எதிர்காலத்தில் ஆடைகள், பாரம்பரிய உணவுகள், தின்பண்டங்கள் என பெண்கள் தயாரிக்கக்கூடிய எல்லாத் துறையிலும் இறங்கும் எண்ணம் இருக்கிறது. நிறைய பெண்கள் டெய்லரிங், ஃபேஷன் டிசைனிங், ஜுவல்லரி மேக்கிங் என திறமை இருந்தாலும் அதனை சரியான முறையில் வர்த்தகம் செய்ய முடியவில்லை.

அதை நாங்க செய்து தருகிறோம். மாற்றுத்திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் எண்ணம் இருக்கிறது. தயாரிப்பிலோ, விற்பனையிலோ பங்கு பெற முடியாத பெண்களுக்கு, நிர்வாக மேற்பார்வையில் வாய்ப்பு கொடுக்கிறோம்.

சக்சஸ் ஃபார்முலா

ஒரு பெண்ணிற்கு வாய்ப்பு கிடைத்தால், அடுத்த தலைமுறையையும் காப்பாற்றும் திறன் அவளிடம் உள்ளது. இன்று இணைந்துள்ள இரண்டு கைகளின் ஓசை, நான்காகவும், நூறாகவும், ஆயிரமாகவும் அதிகரிக்கும்போது, அந்த கைகள் மாநிலம் முழுவதும் பலத்த கரவொலியை எழுப்பும். அனைவரும் ஒன்றுபடுவோம் என்ற நம்பிக்கையோடு கையை விரிக்கிறார் முருகானந்தம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செரிமானத்தை தூண்டும் கரும்பு!! (மருத்துவம்)
Next post 28,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மம்மூத் யானை!! (வீடியோ)