முகப்பொலிவு தரும் கஸ்தூரி மஞ்சள் !!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டு வலியை குணப்படுத்த கூடியதும், வயிற்று புண்களை ஆற்றவல்லதும், தலைபாரத்தை சரிசெய்யும் தன்மை உடையதுமான கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கஸ்தூரி மஞ்சள் நுண்கிருமிகளை அழிக்க கூடியது.
மணம் தரவல்லது. உள் உறுப்புகளை தூண்டும். உடலுக்கு பலம் தரும். தோல்நோய்களை போக்கும். உடலில் தேவையற்ற முடிவளர்வதை தடுக்கிறது. நுரையீரல் நோய்களை குணப்படுத்துகிறது.கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றும், வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், தயிர். செய்முறை: 2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர் குணமாகும்.
அமிலத் தன்மையினால் குடலில் ஏற்படும் அரிப்புகளை சரிசெய்யும். ரத்தத்தை சுத்தப்படுத்தி குடலில் சேர்ந்த கிருமிகளை வெளித்தள்ளும். வெள்ளைபோக்குக்கு மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. நச்சுக்கள் உடலில் சேராத வண்ணம் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. கஸ்தூரி மஞ்சளை கொண்டு நீர்க்கோவை, தலைபாரத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், சுண்ணாம்பு. செய்முறை: சிறிது கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு, சிறிது சுண்ணாம்பு சேர்க்கவும்.
இந்த கலவையை கலந்து நெற்றியில் பற்றாக போடும்போது தலைபாரம், நீர்க்கோவை சரியாகும். சுண்ணாம்பு அதிகம் சேர்த்தால் தோலில் எரிச்சல் ஏற்படும். எனவே குறைவாக சேர்க்கவும். கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி தசைவலி, மூட்டுவலிக்கான மேல்பற்று மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், கஸ்தூரி மஞ்சள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு சூடு செய்யவும். இதில், கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். இதை மேல்பற்றாக பூசிவர தசை வலி, மூட்டுவலி, வீக்கம் சரியாகும்.
இது, வலி நிவாரணியாக விளங்குகிறது. அடிபட்ட வீக்கம் சரியாகும்.கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி முகப்பூச்சு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி, ரோஜா இதழ்கள், பால். செய்முறை: கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் கோரைக்கிழங்கு பொடி, அரைத்து வைத்திருக்கும் ரோஜாப்பூ இதழ்கள், சிறிது பால் விடவும். இதை நன்றாக கலந்து வாரம் ஒருமுறை முகப்பூச்சாக பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். பருக்கள், சுருக்கங்கள், வறண்ட சருமம் மாறும். முகம் பொலிவு பெறும்.
முகத்தில் முடி வளராமல் தடுக்கிறது. வாயில் ஏற்படும் புண்களை ஆற்றும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அகத்திக்கீரை, நல்லெண்ணெய். செய்முறை: அகத்திக்கீரையை நசுக்கி நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சி எடுக்கவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வயிறு, வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் புண் இருக்கும்போதுதான் வாயில் புண் ஏற்படும். இதற்கு அகத்திக்கீரை அற்புத மருந்தாகிறது.
Average Rating