உடல் சோர்வை போக்கும் எலுமிச்சை!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை குணப்படுத்த கூடியதும், உடல் சோர்வை போக்க கூடியதும், குமட்டல், வாந்தியை நிறுத்தவல்லதுமான எலுமிச்சையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். ராஜகனி என்று அழைக்கப்படுவது எலுமிச்சை. இதில், பொட்டாசியம் சத்து அதிகளவில் உள்ளது. சோர்வை போக்குகிறது. மனதுக்கு இதத்தையும், உடலுக்கு பலத்தையும் தருகிறது. உப்புசத்தை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. சிறுநீரக கற்களை கரைக்கும். இதயத்துக்கு பலம் தரும். ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. கிருமி நாசினியாக விளங்குகிறது.
எலுமிச்சையை கொண்டு மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை, மிளகுப்பொடி, மஞ்சள் பொடி, தேன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், சிறிது மிளகுப்பொடி, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டிய பின் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்துவர மூட்டுவலி சரியாகும். உடல் வலி நீங்கும். எலும்பு தேய்ந்த நிலையில் ஏற்படும் வலியை போக்கும் பானமாக இது விளங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி உடைய எலுமிச்சையை பயன்படுத்தி வாந்தி, குமட்டலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை, தேன், சீரகம்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் தேன் விடவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொறிக்கவும். பின்னர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்துவர வாந்தி, குமட்டல் பிரச்னை சரியாகும். எலுமிச்சையை மேல் பூச்சாக பயன்படுத்தும்போது தோல்நோய்களை குணமாகும். ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட எலுமிச்சை நல்ல மணத்தை தருவதாக அமைகிறது. பித்த சமனியாக விளங்குகிறது. உடல் சோர்வை நீக்கி புத்துணர்வை தரும். ரத்தக் கசிவை தடுக்கிறது.
எலுமிச்சை இலைகளை பயன்படுத்தி பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலை, தோல், மஞ்சள் பொடி, சீரகம், பனங்கற்கண்டு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன், பொடியாக நறுக்கிய எலுமிச்சை தோல், பொடி செய்த எலுமிச்சை இலை, பனங்கற்கண்டு, மஞ்சள் பொடி, சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை குடித்துவர பசியை தூண்டும். பித்தத்தை சரிசெய்கிறது.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை ஈரலை பலப்படுத்தும். இதன் இலைகள் பித்த சமனியாகிறது.
எலுமிச்சை கனியை சுவைப்பதால் வாய் துர்நாற்றம் போகும். ஈறுகளில் இருந்து வெளியேறும் ரத்தத்தை நிறுத்தும். எலுமிச்சை சிறந்த மருந்தாகி பயன் தருகிறது.ரத்த மூலத்தை சரிசெய்யும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கருப்பு எள், பசு வெண்ணெய். செய்முறை: கருப்பு எள்ளை பொடியாக்கி அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதை பசு வெண்ணெயில் குழைத்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ரத்தமூலம் வெகு விரைவில் குணமாகும்.
Average Rating