வயிற்று கோளாறுகளை போக்கும் ஓமம்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாயு தொல்லையை போக்க கூடியதும், செரிமானத்தை தூண்டவல்லதும், வலி வீக்கத்தை குறைக்க கூடியதும், வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்ய கூடியதுமான ஓமத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
அற்புத மருத்துவ குணங்களை கொண்டது ஓமம். இது, சிறுநீரை பெருக்கும் கூடிய தன்மை கொண்டது. வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். செரிமானத்தை தூண்டும். இதய நாளத்துக்கு பலம் தருகிறது. வயிற்று புண்களை ஆற்றும். உடலுக்கும், மனதுக்கும் இதம் தருவதாக ஓமம் விளங்குகிறது. ஓமத்தை பயன்படுத்தி வீக்கம், வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், விளக்கெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் வறுத்து பொடி செய்த ஓமத்தை சேர்க்கவும். இதை நன்றாக வேகவைத்த பின்னர் களி பதம் வந்தவுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்க்கவும். இதை மேல் பூச்சாக பயன்படுத்தினால் மூட்டு மற்றும் தசைகளில் ஏற்படும் வீக்கம், வலி குறையும். அடிபட்ட காயங்கள், அதனால் உண்டாகும் வீக்கம் விலகி போகும். ஓமம் வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மை உடையது. புண்களை விரைவில் ஆற்ற கூடியது.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஓமத்தை பயன்படுத்தி வாயு தொல்லையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், மோர், உப்பு. செய்முறை: சிறிது மோர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் ஓமம், சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்துவர வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் நீங்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் மருந்தாக இது விளங்குகிறது. வயிற்றில் ஏற்படும் வலியை போக்கும். ஓமத்தை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பணங்கற்கண்டு. செய்முறை: சிறிது சுக்கு, 10 மிளகு, திப்பிலி, ஒரு ஏலக்காய், சிறிது ஓமம் சேர்த்து நசுக்கி எடுக்கவும். இந்த கலவையை நீரில் போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று கோளாறுகள் சரியாகும். செரிமானத்தை தூண்டும். வயிற்றுப்போக்கு, காலரா போன்றவற்றுக்கு ஓமம் மருந்தாகிறது.
உமிழ்நீரை சுரக்கும் தன்மை உடையது. இதன் காரணமாக செரிமானம் நன்றாக இருக்கும். ஓமம் உள் மருந்தாகி வயிற்று கோளாறுகளை போக்கும். வெளி மருந்தாகி வீக்கத்தை வற்றச்செய்யும். புண்களை விரைவில் ஆற்றும். விட்டுவிட்டு வரும் காய்ச்சலை குணப்படுத்தும் எளிய மருந்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை, சீரகம், வெட்டிவேர், பனங்கற்கண்டு. செய்முறை: ஆடாதோடையோடு வெட்டிவேர், சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீரில் இட்டு காய்ச்சி குடித்துவர விட்டுவிட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.
Average Rating