வறண்ட சருமத்தை போக்கும் பருப்பு கீரை!! (மருத்துவம்)
தோட்டத்தில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான, பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுபோக்கு, வெள்ளைபோக்கு, புண்கள், வறண்ட சருமம் போன்றவற்றுக்கு மருந்தாகும் பருப்பு கீரையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பறவைகள் விரும்பி உண்ணக் கூடியது பருப்பு கீரை. இது, நுண்கிருமிகளை போக்க கூடியது. நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பருப்பு கீரையை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பருப்பு கீரை, தயிர். பருப்பு கீரையை சுத்தப்படுத்தி பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும்போது வயிற்றுபோக்கு, சீத கழிச்சல் சரியாகும். வெள்ளைப்போக்கு காரணமாக பலவீனம், அசதி ஏற்படுவதுடன் உடல் மெலியும். இந்நிலையில், பருப்பு கீரையை தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர பெண்களுக்கு தேவையான சத்து கிடைக்கும். வெள்ளைபோக்கு பிரச்னை சரியாகும். பருப்பு கீரையை கொண்டு அக்கி, அம்மை கொப்புளங்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பருப்பு கீரை, சீரகம், மஞ்சள். செய்முறை: பருப்பு கீரையை துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேனீரை வடிக்கட்டி குடித்துவர அக்கி, அம்மை கொப்புளங்கள், வியர்குரு நீங்கும். பருப்பு கீரையின் தண்டு பகுதியில் சாறு எடுத்து பூசிவர அக்கி புண்களால் ஏற்படும் எரிச்சல் சரியாகும். நீர்ப்பாங்கான இடங்களில், புல்வெளிகளில், தோட்டங்களில் வளர்ந்து பயன்தரும் இந்த கீரை புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. காய்ச்சல், எரிச்சல், நெறிக்கட்டுதல் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.
பருப்பு கீரையை கொண்டு வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோற்றுக் கற்றாழை, பருப்பு கீரை. செய்முறை: சோற்று கற்றாழை பசை, பருப்பு கீரை பசை ஆகியவற்றை கலந்து எடுத்துக்கொள்ளவும். இந்த பசையை வறண்ட சருமம் உள்ள இடத்தில் பூசிவர வறண்ட சருமம் மாறி பொலிவு பெறும். இது குளிர்ச்சி தரக்கூடியதாக விளங்குகிறது. தோலுக்கு மென்மை உண்டாகும். எரிச்சலுக்கு காரணமான வறண்ட சருமம், வெடிப்பு ஆகியவற்றை பருப்பு கீரை குணப்படுத்துகிறது. விட்டமின் சி அதிகம் உள்ள இது தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. பருப்பு கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் புண்களை ஆற்றி எரிச்சலை போக்குகிறது.
சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. ஈரலுக்கு பலம் தரக்கூடியது. இரும்பு, கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை உடைய இது உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. கண்களுக்கு தெளிவான பார்வையை தரக்கூடியது. வாரம் ஒருமுறையெனும் பருப்பு கீரையை உணவில் சேர்த்துவர பலநோய்களை விலக்கி வைக்கலாம். கால் ஆணிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குண்டுமல்லி, மஞ்சள் ஆகியவை மருந்தாகிறது. குண்டுமல்லி இலையை அரைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கால் ஆணியின் மீது கட்டி வைத்தால் வெகு சீக்கிரத்தில் கால் ஆணி சரியாகும்.
Average Rating