சரும நலன் காக்கும் பழங்கள்! (மருத்துவம்)
பழங்களை உண்ணும்போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்குக் கிடைக்கும். அதே பழங்களை சமீப காலமாக இயற்கையான அழகுசாதன பொருளாகவும் உபயோகிக்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக, முகத்திற்கு ஃபேஷியல் செய்வதற்கு பழங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அழகு சிகிச்சை நிபுணர் கீதா அசோக்கிடம் Fruit facial பற்றி கேட்டோம்…
‘‘ஃபேஷியலில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. இப்போது இயற்கைப் பொருட்களின் மீது விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் பழங்களை வைத்து செய்யும் ஃபேஷியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அழகு சாதனப் பொருட்களால் ஃபேஷியல் செய்யும்போது அதனுள் இருக்கும் வேதிப்பொருட்கள் சருமத்தின் நலனுக்கு பக்கவிளைவை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. ஆனால் பழங்களினால் ஃபேஷியல் செய்யும்போது பக்கவிளைவுகள் வராது என்ற நம்பிக்கை கிடைக்கிறது.
குறிப்பாக கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களில் நிறைய நன்மைகள் உண்டு. பன்னீர் திராட்சையை விதையோடு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து 2 நாட்கள் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 2 நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் மெல்லிய வெள்ளை ஏடு படிந்திருக்கும். இதற்கு Alpha Hydroxy Acid (AHD). என்று பெயர். அதை நன்றாக கலக்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி எடுத்துக் கொண்டு பஞ்சினால் முகம், கழுத்துப்பகுதிகளில் தடவி 10 நிமிடம் வைத்துவிட்டு, தண்ணீரால் முகத்தை கழுவலாம். AHD வெயிலினால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்திற்கு நல்ல பொலிவைக் கொடுக்கும்.
திராட்சைச் சாறுடன் அரிசி மாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும்போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் நீங்கி, முகம் பளிச்சென்று ஆகும்.பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன் சிறிது வெண்ணெய், தேன் கலந்து முகத்தில் தடவுவதால், முகத் தோலில் உள்ள வறட்சி நீங்கி, தோலின் முதுமைத் தன்மையைக் குறைக்கும். வாழைப் பழத்தின் தோல் மிகவும் நல்லது.
வாழைப்பழத்தோலை ஒட்டியிருக்கும் சதைப்பகுதியுடன், 10 சொட்டு கிளிசரின், கால் டீஸ்பூன் சர்க்கரை கலந்து தோலை அப்படியே முகத்தில் வைத்து தடவி 5 முதல் 10 நிமிடம் வைக்க வேண்டும். இந்த வாழைப்பழ ஃபேஷியல் இறந்த செல்களை நீக்கி, நிறத்தை அதிகப்படுத்தக் கூடியது.
அடுத்து ஸ்ட்ராபெர்ரியில் என்சைம்கள் அதிகம் உள்ளது. இவை இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. ஸ்ட்ராபெர்ரியை மிக்சியில் அரைத்து 10 சொட்டு தேன், மக்காச்சோள மாவு கலந்து முகத்தில் போடும்போது நல்ல பலன் கிடைக்கும்.
தர்ப்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி, உலோக வடிகட்டியில் போட்டு கரண்டி வைத்து மசித்தால் கிடைக்கும் சாறு 10 மிலி, சாத்துக்குடி சாறு 10 மிலி, இத்துடன் ஜவ்வரிசி மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகம் கழுத்திற்கு தடவினால் நல்ல பளபளப்பையும் கொடுக்கும்.’’
Average Rating