தன்னம்பிக்கை தரும் மூன்று மந்திரங்கள்! (மருத்துவம்)
வாழ்க்கையில் வெற்றிபெற நம்பிக்கையே பிரதானத் தேவை. மற்றவரிடத்தில் நம்பிக்கை வைக்கிறோமோ இல்லையோ… முதலில் நம்மீது நாம் வைக்கும் நம்பிக்கை மிகமிக அவசியமான ஒன்று. எனவே, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உளவியலாளர்கள் சொல்லும் 3 எளிமையான வழிகளை பார்ப்போம்…..
தன்னால் முடியாதோ? தான் எதற்கும் லாயக்கில்லையோ என்று சுய சந்தேகத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தன் மீதான நம்பிக்கையை கட்டமைப்பது சாத்திமில்லாத ஒன்றாக இருக்கிறது. அப்படி, ஒருபோதும் நம்பிக்கையை கைவிட்டு விடாதீர்கள். அது உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதை அடைவதற்கு, முதலில் நீங்கள் யார் என்பதை உணர்வதும், உங்களை நேசிக்கவும், உங்களால் வெற்றியடைய முடியும் என்பதை நம்புவதிலிருந்தும் பயணத்தை தொடங்க வேண்டும். இதெல்லாம் சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், செயல்படுத்துவதற்கு சில மனத்தடைகள் இருக்கலாம். அந்தத் தடைகளைப் போக்கக்கூடிய வழிகளைப் பார்ப்போம்.
ஆள் பாதி ஆடை மீதிநம் ஆடைகள்தான் முதலில் அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய விஷயம். உடை உடுத்தும் பாணி, அலங்கரித்துக் கொள்ளும் விதம்தான் நாம் யார் என்பதை வெளிப்படுத்தும் கண்ணாடி. ஆடை, அலங்காரங்களை சிலர் ஆடம்பரமாக நினைக்கலாம். நம் தோற்றத்தின் மீது நாம் கொள்ளும் அக்கறை நம்மை நாமே நேசிக்கவும், நம்பிக்கை வைக்கவும் உதவக்கூடிய முக்கிய அம்சம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அலுவலகம் கிளம்பும் முன் இன்று என்ன ட்ரெஸ் போடலாம் என்ற கேள்வியுடன் பீரோ முன்பு நிற்கும்போது, அலமாரி அழகாக அடுக்கப்படாமல் கலைந்து கிடந்தால் அந்த மந்தம் உங்களையும் தொற்றிக் கொள்ளும். அன்று முழுவதுமே சுறுசுறுப்பில்லாமல் இருப்பீர்கள். அதுவே உங்கள் தன்னம்பிக்கையின் அளவையும் குறைத்துவிடும்.
அதனால் பீரோ முழுவதும் அடைத்துக் கொண்டிருக்கும், சின்னதாகிப்போன அல்லது பழைய உடைகளை உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். தற்போதுள்ள ட்ரெண்டில் இல்லாத சில ஆடைகள் இருந்தால் அவற்றையும் தூக்கிப் போடுங்கள். உங்கள் நிறத்திற்கும் உடலுக்கும் ஏற்ற உடையை அணிந்தால், அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
ஆரோக்கியமான பழக்கங்களை வழக்கப்படுத்துங்கள்நம் மனம் தெளிவாக இருந்தால்தான் தோற்றத்திலும் தெளிவு தெரியும். சுறுசுறுப்பில்லாமல், எதிலும் ஈடுபாடில்லாத உணர்வுகள் இருந்தால் நம்முடைய செயல்களிலும் அது வெளிப்பட்டுவிடும். தோற்றத்தில் பொலிவு வரவேண்டும் என்றால், நல்ல நேர்மறையான எண்ணங்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
முகம், கை,கால் தோல்களில் வறட்சி இல்லாமல் எப்போதும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது, பற்களை மஞ்சள் கறை படியாமல், தினமும் இரு வேளை பல் துலக்குவது, வாரம் இரு முறை தலைக்கு ஷாம்பூ போட்டு குளிப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை வழக்கப்படுத்திக் கொண்டால் அது மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் தோற்றத்தில் வர வைக்கும். உங்கள் உடல் எடைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் பருமன் தன்னம்பிக்கையை இழக்கச் செய்துவிடும். அதனால், நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள்.
புதிதாய் கற்றுக் கொள்ளுங்கள்ஒவ்வொரு நாளும் புதிதாய் ஒன்றை கற்றுக் கொள்வது, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும், எளிதாய் செய்யக் கூடிய வேலை. உங்கள் சமூகத்திறனை மேம்படுத்துவதற்கும், நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்தக்கூடிய மியூசிக், நடனம், கலைகள், ஜிம் என்று ஏதாவது ஒரு வகுப்பில் சேரலாம். ஒவ்வொரு நாளும் புதியவற்றைப் புரிந்துகொள்வது, உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.
அதனால் கிடைக்கும் உங்களைப் பற்றிய பெருமித உணர்வு மிகவும் சக்தி வாய்ந்தது, உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியது. கற்றல், உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும், ஒவ்வொரு நாளும் சவாலான வேலைகளை எதிர்கொள்ளவும் தூண்டக் கூடியது. இவற்றை வெறும் கற்பனையாக அல்லாமல் ‘மந்திரமாக’ எடுத்துக்கொண்டு பின்பற்றி வந்தால், கண்டிப்பாக உயரும் உங்கள் தன்னம்பிக்கையால், நிச்சயம் தலை நிமிர்ந்து வலம் வரலாம்.
Average Rating