எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் !! (கட்டுரை)
அடுத்தது தேர்தல்தான் என்று, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றன. அது வசை பாடல் காதையாகவே இருக்கிறது. நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம், எதைச் செய்வோம், எமது கட்சி வெற்றி பெற்றால், ஆட்சியமைத்தால் எதையெதை எல்லாம் மக்கள் அடைந்து கொள்வார்கள் என்று சொல்வதற்கும், விளக்கமளிப்பதற்கும் அப்பால், மற்றைய கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதையே தொழிலாகப் பல கட்சிகள் கொண்டிருக்கின்றன. தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலும் இவ்வாறான வசைபாடல்கள் நடைபெறுவது வழமைதான்.
நாட்டின் அடிப்படைப் பிரச்சினையான இனநெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வு தேவை என்றிருக்கும் நிலையில், இலங்கையின் அரசியலுக்கு மாத்திரமல்ல, பொருளாதாரத்துக்கே அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், இஸ்லாமிய அரசியல்வாதிகளின் வகிபாகம் சர்வதேச ரீதியில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியுள்ளது என்ற கருத்துகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆயுதங்களுடன்தான் யுத்தங்கள் நடைபெறவேண்டும் என்றில்லை. ஆயுதங்கள் இன்றி, பொருளாதார யுத்தங்கள் உலகளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இலங்கை போன்ற சிறிய நாடுகள், பல்வேறு வகைப்பட்ட பொருளாதார அழுத்தங்களுடனேயே இயங்கிவருகின்றன என்பதும் உண்மைதான். ஆனாலும், அதற்காக எல்லா வகைகளிலும் பணிந்து இருந்துவிட முடியாது என்பது அந்தந்த நாடுகளின் இறைமையுடன் சம்பந்தப்பட்ட விவகாரமாகும்.
“நன்றி சஹ்ரான்(?)” என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, இலங்கையின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த வாரத்தில், ஏறத்தாழ 90 வருடங்களாக அதிகாரத்துடனேயே இருந்துவந்து கொண்டிருந்த முஸ்லிம் தலைவர்கள், தமது அமைச்சர் பதவிகளைத் தூக்கியெறிந்துள்ளனர்.
இதற்குள் வெளிப்படையாகத் தெரியாத அரசியலும் ஒன்றிருக்கிறது. பதவி துறப்புக்குப் பின்னர் நடைபெற்ற பல விடயங்கள், இதற்குப் பதில் சொல்லி விட்டன.
முஸ்லிம்களின் மார்க்க விடயம், இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஈஸ்டர் தாக்குதலை மறந்து விடலாம் என்று யார் நினைத்தாலும், முடியாதளவுக்கு அது இரத்தத்தில் ஊறிய விடயமாக மாறிவிட்டது. வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கூட, ஹீரோக்கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான், “நன்றி சஹ்ரான்(?)” என்று சொல்லிக் கொள்ளுதல், நல்லதையும் கெட்டதையும் செய்திருக்கிறது என்று கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தின் தலைநகரமாக திருகோணமலை இருந்தாலும், மத்தியிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் உருவான அடிப்படைவாதச் செயற்பாட்டாளராகவே சஹ்ரானை எல்லோரும் பார்க்கின்றனர். ஆனால், இப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளும் மார்க்கவாதிகளும் அவரையும் அவருடன் சேர்ந்தவர்களையும் “இஸ்லாமியர்கள் அல்ல” என்று அறிவிக்கின்றனர்.
அடிப்படையில், பிறப்பாலும் வளர்ப்பாலும் ஒருவர் மதம் சார்ந்த அடிப்படையைக் கொண்டு விடுகிறார். அதன் பின்னர், அதனை இல்லையென்று சொல்லும் அளவுக்கான வெளிப்படுத்தல் ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்விதான் இந்த இடத்தில் எழுகிறது. ஒரு மதம் பற்றிப் பேசுவதற்கு மற்றொருவருக்கு உரிமை இல்லை என்பதும் இதன் அடிப்படையில் தான்.
தமிழருக்கு இல்லாத உரிமை, இஸ்லாமியச் சரியாச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான ஏதுக்கள், உருவான வேளைகளிலெல்லாம் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
ஆனால், சஹ்ரான் ஹாசீம் தரப்பினரின் தொடர் தாக்குதலானது, பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அது வளர்ந்து மரமாகிக் காய், கனி என்று பயன் தரும் போது, எல்லோரும் மலைத்துப் போய்விடக்கூட வாய்ப்பிருக்கிறது.
உள்ளே இருந்து, வெளியே வருகின்ற பல விடயங்கள் இன்னமும் இதற்கு எண்ணை ஊற்றுவனவாக இருக்கின்றன. உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லாத சலுகையை, ஈரான் இலங்கைக்கு வழங்குகிறது. ஆறு மாத கால கடனுக்குக் கோடான கோடி எரிபொருளைக் கொடுக்கிறது. இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. பதுளை – செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2,000 கோடி ரூபாய் வழங்கும் நாடு சவூதி ஆகும். கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200 கோடி ரூபாய் பண உதவி செய்வது குவைத் அரசாங்கம் என்ற வகையான கருத்துகள் தற்போதுதான் வௌிவந்து, மக்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கி உள்ளன.
அதிலும் முக்கியமாக, இலங்கையில் முஸ்லிம்களுக்கான நெருக்கடி தொடர்ந்தால், எரிபொருள் வழங்கலை 23 சதவீதமாகக் குறைக்க வேண்டி ஏற்படும். அவ்வாறு நிகழ்ந்தால் ஒரு லீற்றர் பெற்றோல், இலங்கையில் 450 ரூபாயாகும் அபாயம் ஏற்படும் என்று வெளியாகும் கருத்துகள் நெருப்பைப் பற்றவைக்கின்றன.
நாடு என்பது சுதந்திரமாகவும் மகிழ்வாகவும் வாழ்வதற்கானதுதான்; என்றாலும் யாழ்ப்பாணத்தில் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து தொடங்கிய யுத்த காலத்தில், சுதந்திரம் இல்லாமலேயே இருந்தது. 2009க்குப் பின்னர், மக்கள் நிம்மதியை ஓரளவு அனுபவித்தனர். இதனை இல்லாமல் செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், மீண்டும் அச்ச நிலைமையையும் தம்முடைய பாதுகாப்புக் குறித்து எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவித்தன. அந்த வகையில், நெருப்பை வளர்க்கும் கருத்துகளுக்குள் கவனத்துடன் இருந்தே ஆக வேண்டும்.
இலங்கை முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பும் இலங்கை அரசாங்கத்துடையதுதான். ஆனால், சஹ்ரானின் தாக்குதல்களையடுத்து உருவான சூழல் முஸ்லிம்களைச் சிங்களவர், தமிழர்களிடத்திலிருந்து சற்று அன்னியப்படுத்தி இருக்கிறது. வெளிப்படையாக, நல்லுறவு போன்றிருந்தாலும் மனதுக்குள்ளே உறுத்தல் நிலை ஒன்று தோற்றம் பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, கிழக்கின் நிலைமைதான் மோசமாகும்.
ஏற்கெனவே, கிழக்கில் பற்றி எரிந்து கொண்டிருந்த தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான வெறுப்புணர்வு, இப்போது சற்றுப் பலப்பட்டிருக்கிறது. அதற்கப்பால், முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த அச்சம் உண்மையானதுதான் என்று, பொதுப்படையிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தையும் யாரும் சொல்ல முடியாது.
இந்த வெறுப்பைச் சரி செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்தான், அனைவரையும் திகைக்க வைத்த சம்பவம் நடந்தது. இப்போது முஸ்லிம்களின் உணவு விடுதிகளுக்குச் செல்வதற்குத் தமிழர்கள் அச்சப்படுகிறார்கள்; புடவைக் கடைகள், ஏனைய கடைகளைக் கூட ஒதுக்கிவிடவே நினைக்கின்ற அளவுக்கான சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் முஸ்லிம்களின் வியாபாரம் வீழ்ச்சி நிலையைத்தான் எட்டியிருக்கிறது. இது ஒரு சாதகமான சூழல் அல்ல என்பது எல்லாத் தரப்பினருக்கும் தெரிந்திருந்தாலும் வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்த ஆபத்தானதொரு நிலைமையை உருவாக்கியதற்காக, சஹ்ரானுக்கு நன்றி(?) சொல்லியே ஆகவேணடும்.
இதற்குள்தான், இந்த அரசியல் வசைபாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மிகச் சாதாரணமாக தம்மைச் சுற்றியுள்ள வட்டத்துக்குள் மாத்திரம் மறைவாகப் பேசப்பட்டு வந்த முஸ்லிம்களுக்கெதிரான வசை பாடல்கள் இப்போது ஓரளவுக்கு வெளிப்படையாகவே பொதுவௌிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதில் மாற்றம் ஏற்படுவதற்குள் நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும்போல் இருக்கிறது. அப்படியானால் இன்னமும் வலுவானதாக இது மாற்றம் பெற்றே தீரும்.
வெறுப்புப் பேச்சு என்கிற விடயத்தை இப்போது எல்லோருமே வெளிப்படையாகப் பகிர்வதை பார்க்கிறோம். ஆனால், யாருக்கும் வெறுப்புப் பேச்சின் அடிப்படை என்ன என்றுதானும் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதுதான் வேடிக்கை.
வெறுப்புப் பேச்சின் ஊடாகவே, சஹ்ரான் கூட தனக்கான கூட்டத்தைச் சேர்த்திருக்கிறான். இப்போது ஒரு சில அரசியல்வாதிகள், தங்களுக்கான வாக்காளரை வெறுப்புப் பேச்சினூடாகச் சேர்க்கிறார்கள். வருகிற தேர்தலில் அனேக கட்சிகள் வாக்குக் கேட்கும். அதற்குள் இலங்கையில் சீரான மாற்றம் ஏற்படுத்துவது கடினமாகத்தான் இருக்கும்.
2015 ஜனவரி 08 இல் நீண்ட காலத்துக்குப் பிறகு நாட்டில் நல்லதொரு ஜனநாயக சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்ற மனோநிலை உருவாக்கியிருந்தது. அது 2018 ஒக்டோபர் 26இல் குழப்பப்பட்டு, பின்னர், சீர்பட்டு வருவதாக நம்பினோம். ஆனால், 2019 ஏப்ரல் 21 நிகழ்வு அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்து, சாண் ஏற முழம் சறுக்கியதாக அமைந்து விட்டது.
ஆட்சி மாற்றத்தை அடைவதற்கான வாய்ப்பாக இது அமையலாம்; இல்லாமலும் போகலாம். பாதுகாப்புத் தரப்பினர், புலனாய்வுத் துறையினரின் செயற்பாடுகள் வீரியத்துடன் இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு பலவீனப்பட்டுப் போய் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். வெளிநாட்டுச் சக்தியொன்று உள்நாட்டவர்களை பயன்படுத்தியிருக்கிறது என்ற கோணத்தில் கூட அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. முஸ்லிம்களும் இதனை வெளிப்படுத்துகிறார்கள்.
நாட்டின் அரசியலைக் குழப்பகரமான ஒரு நிலைமைக்குச செல்வதற்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதை விடவும் குழப்பத்தைச் சரி செய்வதே இப்போதைய தேவை என்ற வகையில், நாட்டைக் காப்பாற்றுவதை விடுத்து, எரிகின்ற வீட்டிலே எதையாவது பிடுங்கி, இலாபம் அடைய முயற்சிப்பது தவிர்க்க வேண்டும்.
ஜனாதிபதியும் பிரதமரும் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் செய்கின்றார்கள். நாட்டின் பெருந்தேசியவாதிகளின் அரசியல் என்பது, ஆட்சியைத் தங்கள் கையில் எடுப்பதாகவே இருக்கிறது என்பதுதான் வரலாறாக இருந்தாலும் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக, வசைபாடல்களுக்கு முடிவு கட்டுதல் முக்கியம்.
Average Rating