இதய நோய் தடுக்க வழிமுறை…!! (மருத்துவம்)
முன்பெல்லாம் 50-60 வயதுக்காரர்களுக்குத்தான் இதய நோய் வரும். இன்று, 20 வயது இளைஞரையும் இதய நோய் தாக்குகிறது. நல்ல உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஓய்வு… இவைதான் நல்வாழ்வுக்கான சூத்திரம். கம்பங்களியோ, கேழ்வரகு கூழோ சாப்பிட்டுவிட்டு, கடும் வெயிலில் கடினமாக வேலை செய்வார்கள். உணவு கலோரியாகி எரிந்துபோகும். சரிவிகித சத்துணவை சாப்பிட்டு, உடலை பாதிக்கும் தவறான செயல்களை தவிர்த்து, கட்டுப்பாட்டோடு இருந்ததால்தான் நம் முன்னோர் நோய் நொடியின்றி நெடுங்காலம் வாழ்ந்தனர்.
ஆனால், இன்று எல்லா கட்டுப்பாடுகளும் தளர்ந்துவிட்டன. நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் என எல்லா நோய்களும் வரத்துவங்கிவிட்டன. உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில், மிக சிறு வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கம் உருவாகிவிடுகிறது. புகைப்பிடிப்பவர்கள் அவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் நிற்பவர்களுக்கும் இதய நோயை பரிசளிக்கிறார்கள். புகைக்கு அடுத்தபடியாக உணவுப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. உணவுக்கும், தட்பவெப்பத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. நாம் அரிசியை முதன்மை உணவாக சாப்பிடுவதும், வடமாநிலத்தினர் கோதுமையை சாப்பிடுவதும் அப்படித்தான்.
இன்று தட்பவெப்பத்துக்குத் தொடர்பில்லாத உணவுகள் எல்லாம் வந்துவிட்டன. உடம்பால் அந்த உணவுகளை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. உணவுக்கேற்ற உழைப்பும் இல்லை. அதனால் கொழுப்பாக மாறி, எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் படிந்துவிடுகிறது. ரத்தக்குழாயில் படிந்த கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்) இதய நோய் வர முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்து, மன அழுத்தம். இளைஞர்கள் எதையோ தேடி அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வு, உறக்கம் மறந்து வேலை செய்கிறார்கள். உலகமயமாக்கலுக்கு பிறகு பணிச்சூழலும் மாறிவிட்டது.
குறிப்பாக, ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையும், வேலையும் பிரிக்க முடியாததாக மாறிவிட்டது. அலுவலக சூழல், குடும்பத்தையும் பாதிக்கிறது. இதனால், மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இதுவும் இதய நோய்க்கு முக்கிய காரணம். இவை தவிர, உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் ஆகியவையும் காரணம். இன்று, பலரிடம் உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. இதனால், குறைந்த வயதிலேயே மாரடைப்பு நோய் தாக்குகிறது.
பெண்களை பொறுத்தவரை மாதவிலக்கு நின்ற, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதய நோய் வரும். பெண்களுக்கு இயற்கையாக சுரக்கும் ‘’ஈஸ்ட்ரோஜன்’’ என்னும் ஹார்மோன் மாதவிலக்கு நிற்கும்வரை மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. ஆனால், சமீபத்திய ஆய்வுகளில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் இதய நோய் வருவது அதிகரித்துள்ளது. உணவுமுறைதான் இதற்கு முக்கிய காரணம். வேலைக்கு செல்லும் பெண்கள், அலுவலகம் மட்டுமில்லாமல், வீட்டையும் நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. இது அதிக மனஅழுத்தத்தையும், சோர்வையும் உண்டாக்குகிறது. இது, இதய நோய் வர முக்கிய காரணமாகி விடுகிறது.60 வருடங்களுக்கு முன்னர், 100-ல் இரண்டு பேருக்கு மட்டுமே இதய நோய் வந்தது. ஆனால், இப்போது 100-ல் 14 பேருக்கு இருக்கிறது. வரும் 2020-ம் ஆண்டில் இது 20 ஆக உயரும் என்கிறார்கள்.
உடனடியாக விழித்துக்கொள்ளாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். கொழுப்பு இல்லாத சைவ உணவு, அன்றாட உடற்பயிற்சி ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, பக்கவிளைவு ஏற்படுத்தாத உணவை உட்கொள்ள வேண்டும். இதுபோன்ற மாற்றம் வந்தால் மட்டுமே இதய நோயை வெல்ல முடியும்.
Average Rating