பேரினவாதத்தின் வழி !! (கட்டுரை)

Read Time:20 Minute, 19 Second

முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்றற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படு- த்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகி இருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன.
குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட, கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டு இருக்கிறார்கள். காடையர்கள், ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துகளை அடித்து நொறுக்கியமைக்கு நிகராக, உளரீதியான தாக்குதல்களும் முஸ்லிம்கள் மீது தொடரப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு, கடந்த காலங்களில் தீட்டி வைக்கப்பட்டிருந்த திட்டங்கள், ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர், உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்படும் நிலை உருவாகியிருக்கிறது. ஆடை விவகாரம் தொடக்கம், அரபு மொழியைப் பயன்படுத்துகின்றமை வரை, அரசாங்கமே கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியிருக்கிறது.

மழுங்கடித்தல்

இவற்றை எல்லாம் எதிர்ப்பதற்கான துணிவை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மழுங்கடிப்பதற்கான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.

பாண் வெட்டும் கத்தி வைத்திருந்தவர்கள் தொடக்கம், ‘சுக்கான்’ போட்ட சட்டை அணிந்த பெண் வரை, கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையின் மூலம், உளரீதியானதோர் அச்சத்துக்குள், முஸ்லிம் சமூகம் தள்ளிவிடப்பட்டிருக்கிறது.

மறுபுறமாக, சூழ்நிலையைப் பயன்படுத்தி, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் குறிவைக்கப்பட்டுள்ளனர். பேரினவாதிகளின் கண்களுக்குள் உறுத்திக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பெரும் நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சிலர் மீது, அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவை தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் போல் தெரியவில்லை.

முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்ப்பதன் ஓர் அங்கமாகவே, இதனை முஸ்லிம்கள் பார்க்கின்றனர். அதனால்தான் ‘ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும்’ என்று, நாடாளுமன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கின்றார்.

குறிவைக்கப்படும் ரிஷாட்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது, மிக நீண்ட காலமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இனவாதம் பேசிவரும் பௌத்த தேரர்கள்தான் அவற்றில் அதிகமான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். வில்பத்துக் காடுகளை, ரிஷாட் அழித்து விட்டார் என்பது, அவற்றில் மிகப் பிரதானமான குற்றச்சாட்டாகும்.

எவ்வாறாயினும், ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் சட்ட ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘என்மீது கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், அரசியலில் இருந்தே ஒதுங்கி விடுவேன்’ என்று அமைச்சர் ரிஷாட் கூறிவருகின்றமையும் நினைவுகொள்ளத்தக்கது.

ரிஷாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, அவர் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் காரணமாகும் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான், சில அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள், ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரசாரங்களைப் பெரும் முன்னெடுப்பில் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ரிஷாட் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்ட ரீதியாக நிரூபிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவரை, வேறொரு பக்கமாகச் சுற்றி வளைப்பதற்கு, ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டன. அதனால்தான், சுடச்சுட 10 குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு, ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை அவர்கள் கொண்டு வந்திருக்கின்றனர்.

குறுக்கு வழி

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் இணைத்து, முஸ்லிம்களில் எவரையும் குற்றம்சாட்ட முடியும் என்கிறதொரு நிலைவரம் உருவாகி விட்டது. காரணம், அந்தத் தாக்குதலை நடத்திய ‘முட்டாள்’ கூட்டத்தில் மௌலவி, சட்டத்தரணி, பெரும் பணக்காரர்கள் என்று, சமூகத்திலுள்ள முக்கிய அந்தஸ்திலுள்ள பலரும் இருந்துள்ளனர்.

அதனால்தான், இந்த நிலைவரத்தை வைத்து, ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி, அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் அவ்வாறான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

ஈஸ்டர் தினத் தாக்குதல் என்பது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத மிகக் கொடூரமான, பயங்கரவாதச் செயற்பாடாகும். அதனுடன் தொடர்புபட்ட அனைவரும் இரக்கமின்றித் தண்டிக்கப்பட வேண்டும். உதாரணமாக, நாடாளுமன்றத்திலுள்ள எதிர்த்தரப்பினர் கூறுகின்றமை போல், பயங்கரவாதிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உதவி செய்திருந்தமை சந்தேகத்துக்கு இடமின்றி, சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மிகப்பெரும் தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும்.

ஆனால், பயங்கரவாதிகளுடன் ரிஷாட் பதியுதீனுக்குத் தொடர்பு உள்ளது அல்லது பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதற்கு ரிஷாட் முயன்றார் என்கிற சந்தேகம் இருக்குமாயின், அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதுதான் முறையானதாகும். அதை விடுத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அவருக்கு எதிராக ஏன் கொண்டுவர வேண்டும் என்பதுதான், பலரிடமும் உள்ள கேள்வியாகும்.

அதுவும், முஸ்லிம் சமூகத்தின் மீது, எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டிருப்பதானது, முஸ்லிம் சமூத்துக்கு எதிரான, பேரினவாதச் செயற்பாடுகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

சட்ட ரீதியாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றம்காண அல்லது குற்றத்தை நிரூபிக்க முடியாதவர்கள், இப்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் அவரைப் பழி தீர்க்கப் பார்க்கிறார்களா என்கிற கேள்வியும், முஸ்லிம் மக்களிடம் உள்ளது.

அச்சம் தரும் விடுதலை

இப்படி, முஸ்லிம் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியிருக்கும் மிக மோசமானதொரு சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் தலைமையேற்று மேற்கொண்டு வந்த, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையானது முஸ்லிம்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக ஆறு வருடக் கடூழியச் சிறைத் தண்டனையை, கடந்த ஒன்பது மாதங்களாக ஞானசார தேரர் அனுபவித்து வந்தார். இந்தநிலையில், அதுவும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களும் செயற்பாடுகளும் நாடு முழுவதும் கொதிநிலையில் இருக்கின்றதொரு நேரம் பார்த்து, ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டிருப்பது, பெரும் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.

சிறைச்சாலையிலிருந்து வந்தவுடன், “நான் சமயக் கடமைகளிலும், தியானத்திலும் ஈடுபட்டு வாழ்நாளைக் கழிக்கப் போகிறேன்” என்று கூறிய ஞானசார தேரர், இப்போது அவரின் பழைய ‘சாட்டை’யைக் கையில் எடுத்திருக்கின்றார்.

தான் தியானம் செய்து, காலத்தைக் கழிக்கவுள்ளதாகக் கூறியதைக் கேட்ட இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தான் ‘களத்துக்கு’த் திரும்பப் போவதாகக் கூறியுள்ளதோடு, முஸ்லிம்களை அச்சுறுத்தும் சில கருத்துகளையும் வெளியிட்டிருக்கிறார்.
சவால்

இதேவேளை, ஞானசார தேரரை ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவித்தமைக்கு எதிராகக் கண்டனங்களும் எழுந்துள்ளன. தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாகச் சாடியுள்ளது.

‘இலங்கையில் பௌத்தர்கள் அல்லாத ஏனைய மதத்தவர்கள் மீது வன்முறைகளைத் தூண்டிவிடும் இந்தத் தேரரின் நடவடிக்கைகள் மீது, ஒருபோதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிராத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாத்திரமே அவர் சட்டத்துக்கு உட்பட்டு கையாளப்பட்டார்’ என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ‘இனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி வைப்பதன் ஊடாக, எல்லாப் பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் ஒரு நாடு என்ற முன்னேற்றத்தை அடைவதற்கு, தேரரின் விடுதலையானது சவாலை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, ஆளுநர்கள் அஷாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோர், ஞானசார தேரருக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை விடுத்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கதாகும்.

ஜனாதிபதி பொறுப்புதாரி

மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம கலவரம் நடைபெறுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் ஞானசார தேரர் என்பதை எல்லோரும் அறிவர். அவ்வாறான ஒருவர் இப்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிராக எதையாவது செய்துவிடுவாரோ என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது. அவ்வாறு எதுவும் நடந்து விடக் கூடாது என்பதுதான் நல்ல மனிதர்களின் விருப்பமாகும்.

ஆனால், அதையும் மீறி ஞானசார தேரரின் வழிகாட்டுதலின் பேரில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் வன்முறைகள் ஏதாயினும் நடந்தால், அதற்கான முற்றுமுழுப் பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பேச்சுகளும் உள்ளன.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்குக் காரணமானவர் ஜனாதிபதி. எனவே, வெளியில் வந்துள்ள தேரர் ‘நல்ல பிள்ளை’யாக நடந்து கொள்வதையும் ஜனாதிபதி உறுதி செய்தல் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது. அதை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும்.

ஆனால், முஸ்லிம்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையில், பொறுப்புவாய்ந்தவர்களில் கணிசமானோர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றமையைக் காண முடிகிறது. அதிலும், தங்களின் வாக்காளர்களையும் தங்களுக்கான எதிர்கால வாக்குகளையும் மனதில் வைத்துக் கொண்டுதான், கணிசமான அரசியல்வாதிகள், முஸ்லிம்கள் விடயத்தில் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

இலங்கை, இலங்கையர்களின் நாடு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு இடையில்தான், நாமும் நமது பரம்பரைகளும் வாழப்போகிறோம் என்பதை நினைக்கும் போதுதான், ஏமாற்றமாகவும் சோர்வாகவும் உள்ளது.

இனவாத பேச்சுகளும் வரலாற்று பதிவுகளும்

“இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்த நாடு சொந்தமில்லை. அவர்கள் அரேபியாவிலிருந்து வந்தவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு வாழ விருப்பம் இல்லை என்றால், அரேபியாவுக்கே சென்று விடுங்கள்” என்று அர்த்தப்படும் படியாக, தற்போதைய கொதிநிலையான சூழ்நிலையில், சில அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் பேசியமை, முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மேற்படி அரசியல்வாதிகளின் கருத்துகளை மறுத்தும் எதிர்த்தும் முஸ்லிம்கள் தமது கருத்துகளை அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சமூகச் செயற்பாட்டாளரும் புத்திஜீவியுமான அஷ்ஷெய்க் இனாமுல்லா மஷிஹுதீன், வெளியிட்டுள்ள பதிவொன்றை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

“இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும், அரேபியரின் வம்சாவளியினர் என்பது திரிபுபடுத்தப்பட்ட வரலாறாகும். கடல்வழி வர்த்தகத்துடன் தென்னிந்தியா, இலங்கை கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மற்றும் மலையாளம் பேசும் சுவனர்களுடன், அரேபிய வர்த்தகர்களுக்கு, இஸ்லாத்துக்கு முன்பிருந்தே தொடர்புகள் இருந்திருக்கின்றன.

அரேபியர்கள் மூலம், இஸ்லாம் இந்தப் பகுதிகளில் பரவ ஆரம்பித்திருக்கிறது. மாறாக, இலங்கை வந்த அரேபியர்கள் சிங்களத் தாய்மாரைத் திருமணம் செய்ததால் தான் இலங்கைச் சோனகர் தோற்றம் பெற்றனர் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்குமான வரலாறு அல்ல; அது ஒரு சிறு பகுதியினருக்கு மாத்திரமே பொருந்தும்.

அவ்வாறு சிங்களத் தாய்மார்களுக்கும் அராபிகளுக்கும் பிறந்தவர்கள் சோனகர்கள் என்றால், தாய்மொழி சிங்களமாக அல்லது அரேபியாக (தகப்பன் மொழி) இருந்திருக்கும். அதனால் தான், இஸ்லாத்தை ஆரம்ப காலத்தில் அரபுத் தமிழில் முன்னோர்கள் கற்றார்கள்.

வட இந்தியாவில் இருந்து, ஆரிய சிங்களவர் இலங்கைக்கு வர முன்னரும், இந்த நாட்டில் தமிழ் பேசும் இந்துக்கள் போல், நாகர்கள் அல்லது சுவனர்கள் எனும் எமது வம்சமும் பூர்வீகம் கொண்டிருக்கிறது.
இந்தத் திரிபு படுத்தப்பட்ட வரலாற்றை வைத்துக் கொண்டு, அரேபியாவில் இருந்து வந்த முஸ்லிம்கள்தான் இங்கு வாழ்கின்றார்கள் என்று சொல்வதைக் கேட்டு, “வாழுங்கள் அல்லது அங்கு சென்று விடுங்கள்” என்று பேசும் இனவாதிகளும் இருக்கின்றனர்.

2,500 வருட பின்புலத்தைக் கொண்ட பௌத்தர்கள் போல் 2,019 வருட பின்புலத்தைக் கொண்ட கிறிஸ்தவர்கள் போல், இலங்கை முஸ்லிம்களுக்கும் 1,440 வருட இஸ்லாமிய பின்புலம் இருக்கிறது.
அந்தவகையில், எம் எல்லோருக்கும் இந்தப் பிராந்தியத்தில் தான் பூர்வீகம் இருக்கிறது என்பதை, எந்தவொரு சமூகமும் மறந்து விடலாகாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க அதிபரை அளரவைத்த மோடி அப்படி என்ன சொன்னார் தெரியுமா!! (வீடியோ)
Next post பாலின நோய்கள் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)