ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் !! (கட்டுரை)

Read Time:17 Minute, 9 Second

ஒக்டோபர் 26, 2018 அன்று அரங்கேறி, அடுத்த 52 நாள்கள் தொடர்ந்த அரசமைப்பு நெருக்கடி, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இருவரினதும் பெயருக்கும் பிரபல்யத்துக்கும் கடும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருந்தது.

இதில், ஏலவே பிரபல்யம் இழந்திருந்த மைத்திரி, இன்னும் பிரபல்யம் இழந்ததில் அதிகம் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், 2018இல் பொதுஜன பெரமுனவை (மொட்டுக் கட்சியை) தொடங்கி, தன்னுடைய அரசியல் மீள்பிரவேசத்தை முத்திரை பதித்து, ஏற்றப் பாதையில் ஆரம்பித்திருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த 52 நாள் கூத்தில் பங்கெடுத்து, தன்னுடைய பெயருக்குக் களங்கம் விளைவித்துக் கொண்டது ஏன் என்ற கேள்விதான் முக்கியமானது.

பொதுவாகவே தன்னுடைய அரசியல் காய்நகர்த்தல்களைக் கவனமாக முன்னெடுக்கும் பக்குவம் மஹிந்தவிடம் இருக்கிறது. மொட்டுக் கட்சியை மஹிந்த ராஜபக்‌ஷவே ஆரம்பித்திருந்தாலும், அதற்கு நேரடித் தலைமையையோ, அதன் அங்கத்துவத்தையோ மஹிந்த உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை, நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்த தேர்தல் வரை, பொறுமை காப்பதில் அவர் கவனமாக இருந்தார் என்பதே, அவருடைய அந்த நடவடிக்கை உணர்த்தும் செய்தியாக இருந்தது. அவ்வளவு கவனமாகக் காய்நகர்த்தல்களைச் செய்தவர், மைத்திரியுடன் 52 நாள் கூத்தில் கைகோர்த்து, தனக்குச் சற்றேனும் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டது வியப்புக்கு உரியதே.

ரணிலைப் பதவி நீக்கி, மஹிந்தவைப் பிரதமராக நியமித்ததற்கு, மைத்திரி சொன்னதாகச் சொல்லப்படும் காரணம், “ரணிலுடன், தன்னால் வேலை செய்ய முடியாது” என்பதாகும்.

ரணிலை நீக்க, மைத்திரி எடுத்துக் கொண்ட முதலாவது முயற்சி இதுவல்ல. 2018ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில், ரணிலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் இருந்த அழுத்தம், யாருடையது என்பது, 52 நாள் கூத்தில், இலங்கையர்கள் அனைவருக்கும் வெட்டவௌிச்சமானது.

ஆகவே, ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்தும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதிவியிலிருந்தும் விரட்டியடிக்க வேண்டிய தேவை, ஐக்கிய தேசியக் கட்சிக்காரரைவிடவும் மைத்திரிக்கே அதிகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை எம்மால் ஊகிக்க முடிகிறது.

ரணிலுக்கு மாற்றாக, மைத்திரி முதலில் தேர்ந்தெடுத்தது மஹிந்தவை அல்ல. ஒருவகையில் பார்த்தால், ஆளில்லாத பட்சத்தில், தன்னுடைய கடைசித் தெரிவாகவே மைத்திரி, மஹிந்தவை அழைத்து, அரசமைப்புக்கு விரோதமான முறையில், பிரதமராக நியமித்திருந்தார்.

52 நாள் அரசமைப்பு நெருக்கடிக் காலத்தில் வௌிவந்த தகவல்கள், வதந்திகள் என்பவற்றில் உண்மை ஏதுமிருப்பின், மைத்திரி முதலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணிலின் தலைமைக்குப் போட்டியாக இருந்தவர்களையே பிரதமராகப் பதவியேற்க அழைத்திருந்ததாகத் தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ரணிலை ஆக்ரோஷமாக எதிர்க்கும் ‘அடுத்த தலைவர்’ என்ற நிலையில் இருப்பவர்கள் கூட, ரணிலை நீக்கி, குறுக்குவழியில் தாம் பிரதமராகும் முயற்சியை ஏற்கவில்லை என்பது, இங்கு குறிப்பிட்டு நோக்க வேண்டியதொன்று.

இதற்கான காரண காரியங்கள் எவ்வாறு இருப்பினும், ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியினரைவிடவும் மைத்திரி அதிகம் அக்கறைப்படக் காரணம் என்ன என்ற கேள்வி இங்கு முக்கியமானதாகிறது.

இதில் நாம் ஊகிக்கக்கூடிய ஒரே காரணம், 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்ற மைத்திரியின் பகீரதப் பிரயத்தனமே ஆகும்.

“ஒரு முறை மட்டும்தான் நான், ஜனாதிபதி பதவியிலிருப்பேன்” என்பது, மைத்திரி 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் முழங்கிய முக்கிய வாசகம். பதவிக்கு வரும் வரை யாவரும் புனிதர்களாக இருப்பதும், பதவிக்கு வந்தபின்னர் பதவிச்சாத்தானின் ஆசைப்பிடிக்குள் சிக்கிக்கொள்வதும், அரசியல் என்பது என்று தொடங்கியதோ, அன்றிலிருந்து உலகம் கண்டுகொண்டிருக்கும் ஒன்று. இதற்கு மிகச் சில விதிவிலக்குகளே இருக்கிறார்கள்.

மைத்திரிக்கு நடந்ததும் நடப்பதும் இதுதான் எனலாம். இரண்டு முறை ஜனாதிபதியாக இருக்க வாய்ப்பிருக்கும் போது, அதனை எப்படியாவது அடைந்து கொள்ளவே அவர் முயல்கிறார். மஹிந்தவைப் போல் தானாகத் தனித்து நின்று வெல்லக்கூடிய தனிநபர் பிரபல்யம், மைத்திரிக்கு இல்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி இருந்தாலும், முழுச் சுதந்திரக் கட்சியும் மைத்திரியோடு இல்லை; அதில் பெரும்பங்கு மஹிந்த ஆதரவாகவும், ஒரு பங்கு இன்னும் சந்திரிக்காவுடனும் இருக்கிறது.

ஆகவே, ரணில் விக்கிரமசிங்கவைப் போல, ஒரு தேசியக் கட்சியின் பின்புலப்பலமும் மைத்திரிக்கு இல்லை. ஆகவே, சமகால அரசியலைப் பொறுத்தவரை, மைத்திரி அதிகாரம் நிறைந்த பதவியிலிருக்கும் ஒரு தனிநபர்.

ஆகவே, தன்னுடைய மீண்டும் ஜனாதிபதியாகும் கனவு நிறைவேற வேண்டுமானால், அதற்கு இரண்டு பிரதான தரப்புகளில் ஒன்றினது ஆதரவு அவசியம். அது ஏலவே, தன்னை ஆதரித்த ஐக்கிய தேசியக் கட்சியாக இருப்பது சாலப் பொருத்தமானது என்பதே, மைத்திரியின் முதல் தெரிவாக இருந்தது.

தான் போட்டியிடுவதா, இல்லையா என்பது ஒரு புறமிருக்க, மைத்திரியை மீண்டும் பொது வேட்பாளராக நிறுத்தும் எண்ணம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்பதை, ரணில் விக்கிரமசிங்க மிகத்தௌிவாக, மைத்திரிக்கு உணர்த்தியிருக்கிறார்.

ரணில்-மைத்திரி விரிசலுக்கு இதுதான் காரணம் என்பது ஊகிக்க முடியாததொன்றல்ல. ‘ரணிலோடு வேலை செய்ய முடியாது’ என்ற மைத்திரியின் கருத்துக்குப் பின்னால், இருக்கும் நிதர்சனம், ‘ரணில் என்னை மீண்டும் பொது வேட்பாளராக நிறுத்த மறுத்துவிட்டார்’ என்பதுதான்.

தன்னுடைய பதவிக்காலத்தை நீடிக்கும் நப்பாசையுடன், மைத்திரி தன்னுடைய பதவிக்காலம் ஐந்து வருடமா, ஆறு வருடமா என்று மீயுயர் நீதிமன்றிடம் வினவியிருந்தமையும் மைத்திரிக்கு அதிருப்தி ஏற்படும் வகையில், மீயுயர் நீதிமன்று ஐந்து வருடமே அவரது பதவிக்காலம் என்ற தனது அபிப்பிராய தீர்மானத்தை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பொதுவேட்பாளராக மைத்திரி போட்டியிட, ரணில் அனுமதிக்காததன் விளைவாக ஏற்படுத்தப்பட்டதுதான், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம்; அது நாடாளுமன்றத்தில் பெருந்தோல்வியடைந்தது.

அதன் பின்னர் கொஞ்சக் காலம் அமைதியாக இருந்த மைத்திரி, தன்னுடைய அடுத்த காய் நகர்த்தலுக்குத் தயாரானார். அதுதான் பிரதமரான ரணிலை நீக்கி விட்டு, இன்னொருவரை நியமித்தல். அது ஐக்கிய தேசியக் கட்சிக்காரராக இருப்பதையே மைத்திரி முதலில் விரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மறுத்துவிடவே, மைத்திரிக்கு எஞ்சியிருந்த ஒரே தெரிவு, மஹிந்த மட்டும்தான்.

மஹிந்தவை, தான் பிரதமராக்கினால் மஹிந்த தரப்பின் பொது வேட்பாளராகத் தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களம் காணலாம் என்று மைத்திரி நம்பியிருக்கலாம்.

இது தொடர்பில், இருவேறு கருத்துகளுண்டு. முதலாவது, அதற்கு வாய்ப்பே இல்லை; மஹிந்த தரப்பு ஒரு போதும் அதனை விரும்பப் போவதில்லை என்பதாகும். இதற்கு மாற்றான கருத்து யாதெனில், தான் தேர்தலில் நிற்க முடியாது என்ற பட்சத்தில், தன் தரப்பில் யாரை நிறுத்துவது என்பது மஹிந்தவுக்கு மிகச்சிக்கலானதொரு தெரிவு.

கோட்டாபய ராஜபக்‌ஷ என்பது, பொதுவாகச் சொல்லப்பட்ட பெயராக இருந்தாலும், கோட்டாபயவை ஆதரிப்பதில் மஹிந்தவுக்கு நிறையத் தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது. மக்கள் மத்தியில், குறிப்பாக கொழும்பு வாழ் உயர் மத்தியதர, உயர் குழாமிடையே கோட்டாபயவுக்குக் கொஞ்சம் ஆதரவு இருக்கிறது.

மேலும், பொதுவாகவே இலங்கை வாழ் மக்களிடையே கோட்டாபய மீதான பயம்கலந்த செயல்வீரர் என்ற அபிப்பிராயமும் காணப்படுகிறது. ஆனால், கோட்டாபயவுக்குக் கட்சி ஆதரவோ, தொண்டர் ஆதரவோ இல்லை. கோட்டாபயவின் பொதுமக்களுடனான உறவு, கட்சித் தொண்டர்களுடனான உறவு என்பது மேலிந்து கீழானதாகும். அதாவது, அதிகாரத் தோரணையுடன் கூடியதாகவே இருந்திருக்கிறது.

ஆகவே, மஹிந்த மீதிருக்கும் ‘நம்மவர்’ என்ற உணர்வு, கோட்டா மீது கட்சியினருக்குக் கிடையாது. இது பற்றி, நாம் பின்பு விரிவாகப் பார்ப்போம். மறுபுறத்தில், மஹிந்தவின் மற்றையதொரு தம்பியான பசில் ராஜபக்‌ஷவுக்கு, கட்சிக்குள் ஆதரவு நிறையவே இருந்தாலும் (மொட்டுக் கட்சி இதுவரை பெற்ற வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தூண், பசில் ராஜபக்‌ஷவே என்றால் அது மிகையல்ல) பொது மக்கள் மத்தியில், ஊழல் கறைபடிந்தவர் எனும் அபிப்பிராயம் காணப்படுவது அவருக்குச் சாதகமானதாக இல்லை.
மறுபுறத்தில், மஹிந்தவின் அண்ணனான சமல் ராஜபக்‌ஷவுக்கு நல்லவர் என்ற பெயர் இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்குப் போதுமான பிரபல்யம் இருக்கிறதா என்பது நிச்சயமல்ல.

மேலும், தன் குடும்பத்தவரையே மீண்டும் தேர்தல் களத்தில் இறக்கும் போது, அது ‘குடும்ப ஆட்சி’ என்ற 2015இன் முழக்கத்தை மீண்டும் ராஜபக்‌ஷவை நோக்கிச் செலுத்த வாய்ப்பளிப்பதாகவும் அமையும்.
இந்தச் சிக்கல் எல்லாம் தான், இன்றுவரை தமது அடுத்த வேட்பாளர் யார் என்ற தெரிவை மேற்கொள்வதில், மஹிந்த தயக்கம் காட்டுவதற்கான காரணங்களாகத் தெரிகின்றன.

மேலும், 19ஆம் திருத்தத்தின் கீழ், இன்று மைத்திரிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களில் சிலவும் கூட, அடுத்ததாகப் பதவிக்கு வரும் ஜனாதிபதிக்கு இருக்காது. இந்தச் சூழலில், மைத்திரி மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியானால், தான் பிரதமராக இருந்து கொண்டு, தனது கையில் அரசாங்கப் பலத்தை வைத்துக் கொண்டால், பலமான பிரதமராகத் தான் இருக்க முடியும் என்பதோடு, அரசமைப்புத் திருத்தத்தினூடாகவோ, புதியதோர் அரசமைப்பை அறிமுகப்படுத்துவதன் ஊடாகவோ, நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கும் ரணிலின் திட்டத்தைத் தானும் முன்னெடுக்க, மஹிந்த யோசித்திருக்கலாம்.

ஆயினும், அரசமைப்புக்கு விரோதமான முறையில், மைத்திரி தன்னைப் பிரதமராக்கியதை மஹிந்த ஏற்றுக்கொண்டது ஏன் என்ற கேள்வி முக்கியமானது? பிரதமராகத் தொடர்வது, மஹிந்தவின் எண்ணமாக இருந்திராது. மாறாக, எப்படியாவது, நாடாளுமன்றத்தைக் கலைத்து, உடனடியாகத் தேர்தல் களம் காண வேண்டும் என்பதுதான் மஹிந்தவின் நோக்கமாக இருந்திருக்கும்.

அதேவேளை, தேர்தலை எதிர்க்கட்சியாகச் சந்திப்பதைவிட, அரச இயந்திரத்தை கையில் வைத்திருக்கும், அரச ஊடகங்களையும் வளங்களையும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பைத் தரும் வகையில் ஆளுங்கட்சியாகத் தேர்தலைச் சந்திப்பது, சாதகமானது என்பதுதான் மஹிந்த பிரதமராகப் பதவியேற்றமையைப் புரிந்துகொள்வதற்குப் பொருத்தமானதொரு காரணமாகத் தெரிகிறது.

ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது, அரசமைப்புக்கு முரணானது என்று மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தமையும் அந்தக் கலைப்பை ரத்துச் செய்தமையும் மைத்திரிக்கு மட்டுமல்ல, மஹிந்தவுக்கும் பெரும் பின்னடைவாகும். ஒக்டோபர் 26இன் பின்னர் மைத்திரி-மஹிந்த எதிர்பார்த்திராக ஒன்று, அவர்களுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாகவும் ஏற்பட்ட மக்கள் எழுச்சியாகும். தாமாகவே மக்கள் வீதிக்கிறங்கினார்கள்.

ஆனால், இந்த 52 நாளில் தமக்கு ஆதரவாக ஏற்பட்ட இந்த எழுச்சியை, அதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து கொண்டு சென்றதா என்று கேட்டால், அதற்கு ‘இல்லை’ என்ற பதிலை, ஒரு கணம் கூட சிந்திக்கத் தேவையில்லாது சொல்லிவிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30 வயதுக்குள் இறந்துபோன தமிழ் நடிகைகள் !! (வீடியோ)
Next post சுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்? (அவ்வப்போது கிளாமர்)