பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி !! (உலக செய்தி)

Read Time:8 Minute, 43 Second

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17 வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்ற சுமார் 90 கோடி வாக்காளர்களில் 67 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர்.

மகத்தான இந்த தேர்தல் முடிவை இந்தியர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளுமே முன்னணியில் இருந்தன. இந்த முன்னணி தொடர்ந்து நீடித்தது.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு அதைவிட கூடுதல் இடங்கள் கிடைத்து உள்ளன.

குஜராத், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களிலும் மற்றும் தலைநகர் டெல்லியிலும் பாரதீய ஜனதா அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), நிதின் கட்காரி (நாக்பூர்) உள்ளிட்ட தலைவர்களும் வெற்றி வாகை சூடினார்கள்.

தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாரதீய ஜனதா கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளன. எனவே மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். மத்தியில் அவரது தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி 2-வது முறையாக அரியணை ஏறுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்றே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு 96 இடங்கள் கிடைத்தன. இதில் காங்கிரஸ் மட்டும் 51 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

கடந்த தேர்தலில் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் இருந்த காங்கிரசால் இந்த தடவையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போய்விட்டது.

காங்கிரஸ் கூட்டணிக்கு கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே கைகொடுத்து உள்ளன. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. அங்கு ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் அவர், பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த கூட்டணி தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த அணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோல் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்தன. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணியில் 20 தொகுதிகளில் களம் இறங்கிய அ.தி. மு.க. தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

தேசிய அளவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளையும் சாராத பிற கட்சிகள் 97 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளன.

கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்து காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இதனால் அந்த கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலவச நிமோனியா தடுப்பூசி!! (மருத்துவம்)
Next post பேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை!! (கட்டுரை)