சந்தேகத்தை சந்தேகியுங்கள்…நம்பிக்கையை நம்புங்கள்!! (மருத்துவம்)
‘சந்தேகக் கோடு…. அது சந்தோஷக் கேடு’ என்பார்கள். அது நிஜம்தான் என்பதை அன்றாடம் நிகழும் பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. எதிர்காலம் குறித்த சந்தேகம்… நெருங்கிய உறவுகள் மீதான சந்தேகம் போன்றவை குறித்து சந்தேகங்கள் எழுந்து, ஒரு கட்டத்தில் விஸ்வரூபமெடுக்கும்போது அது நோயாகவே மாறிவிடுகிறது என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இத்தகைய பிரச்னை யாருக்கு வரும், என்ன அறிகுறிகள், எப்படி தவிர்ப்பது போன்ற நம் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் உளவியல் ஆலோசகரான செல்வி அருள் மொழி.
சந்தேகம் என்பதற்கான உளவியல் விளக்கம் என்ன?
சில கலாச்சாரத்தின் அடிப்படையால், ஒரு தனிநபருடைய குணாதிசயங்களால் அல்லது சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சில பாதிப்புகளால் வெளிப்படும் நடவடிக்கைகள், சில முன்னெச்சரிக்கைகள், சில தற்காப்பு நடவடிக்கைகளை நாம் சந்தேகம் என்கிறோம்.
வாழ்க்கைத்துணை மீதான சந்தேகம் பற்றி…
ஒரு மனைவி மேல் சந்தேகம் கொண்ட கணவனை விசாரிக்கும்போது முதலில் அவன் சொல்லும் வார்த்தை, ‘சந்தேகம் ன்னு ஒன்னும் இல்லைங்க… அது என்னான்னா…’ என்று இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பிரச்னை, ஒரு கஷ்டம். அவர்களைப் பொறுத்தவரை அது சந்தேகமில்லை. நம் பார்வையில்தான் அது சந்தேகம். ஏதாவது ஒரு சூழ்நிலையில் கணவன் அல்லது மனைவி தவறாக புரிந்து கொள்ளப்படுவார்கள் அது தீர்க்கப்படாதபோது, அந்த சந்தேகம் தீவிரமடையும்.
பல திரைப்படங்களில் பார்த்திருப்போம் கணவனோ அல்லது மனைவியோ எந்நேரமும் தன் துணையை சந்தேகப்பட்டு துன்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். அது நமக்கு பார்க்க திரில்லர் மூவியாக, சுவாரஸ்யமாகக் கூட அமையலாம். ஆனால், திரைப்படம் என்பதைத் தாண்டி நம் எதார்த்த வாழ்விலும் அதுபோன்ற சிலரை பார்க்கிற நிலை வருகிற போதுதான் அது எத்தனை கொடுமையான சூழ்நிலை என புரிகிறது.
இப்படிப்பட்டவர்கள் கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒரு பெண் அல்லது ஆணுடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டு இருந்தாலே அவர்களுக்குள் தவறான உறவு இருக்குமோ என சந்தேகக் கண் கொண்டு பார்த்து தன் துணையுடன் பிரச்னை செய்வார்கள்.
தன் துணை வெளியே போய்விட்டு வரும்போது அவர்களிடம் இருந்து வித்தியாசமான வாசனை, நிறங்கள் என ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்வார்கள். ஏதேனும் அறிகுறிகள் அவர்களுடைய கண்ணுக்குத் தென்பட்டுவிட்டால், ‘வேறு ஒருவருடன் ஜாலியாக இருந்துவிட்டு வந்திருக்கிறாய்’ என சண்டையிடுவார்கள்.
அவர்களின் சந்தேகப்புத்தி இந்த இயல்பை ஏற்றுக் கொள்ளாது. இப்படி அந்த சந்தேகப் புத்தியானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி தொட்டதற்கெல்லாம் சந்தேகம் கொள்வார்கள். இது அவர்களை மட்டுமல்லாது அவர்களது குழந்தைகளின் மனநிலை மற்றும் வாழ்வியல் சூழலை வெகுவாக பாதிக்கும். ஏன் ஒரு சில சமயங்களில் இந்த பிரச்னை கொலை அல்லது தற்கொலை என்ற அளவில் போய் கூட முடியும்.
சந்தேகம் என்பதை நோய் என்று குறிப்பிடலாமா?
சந்தேகம் என்பதை முதலில் ஒரு நோய் என்று வரையறுத்துவிடமுடியாது. இயல்பிலேயே மன அழுத்த நோய் உள்ளவர்களது நடவடிக்கைகளை வேண்டுமானால் விதிவிலக்காக சொல்லலாம். இயல்புக்கு மாறான மனநிலை உடையவர்களை மட்டுமே மனநோயாளி என்று சொல்ல முடியும்.
இத்தகைய குணம் கொண்டவர்களை எப்படி அடையாளம் காண்பது?!
சந்தேக நோய் உடையவர்கள் கண்களிலேயே சிறிய வித்தியாசம் தெரியும். பெரும்பாலும் அவர்களது கண்கள் எப்போதும் எதையாவது தேடுவது போல சுழன்று கொண்டே இருக்கும். அதாவது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தன் பொருட்களை யாராவது எடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் எடுத்து ஒளித்து வைப்பார்கள். நான் செய்வதுதான் சரி என்பது போல எந்நேரமும் தனக்குத் தானே சுய விளக்கம் கொடுத்துக் கொள்வார்கள்.
நாம் கேட்காமலே (இதனால் தான் இப்படி செய்தேன்) என தன்னைப் பற்றி தன் செயல்கள் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். யாரையும் சுலபத்தில் நம்ப மாட்டார்கள். யாராவது இரண்டு மூன்று பேர் இயல்பாக அவர்கள் எதிரில் நின்று பேசிக்கொண்டு இருந்தாலே தன்னைப் பற்றித்தான் ஏதோ பேசுகிறார்கள் என்று நினைப்பார்கள்.
வீட்டை பூட்டிய பின் ஒரு தடவைக்கு பல தடவை ஆராய்ச்சி செய்வார்கள். சாப்பாட்டில் யாராவது விஷம் கலந்திருப்பார்களோ என நினைத்து சாப்பிட பயப்படுவார்கள். மனைவி அல்லது கணவனின் பைகளை அல்லது பொருட்களை ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். வீட்டை விட்டு வெளியே சென்று பின் தோட்டம் (பின் பக்கம்) வழியாக அல்லது ஜன்னல் வழியாக வெளி ஆட்கள் யாராவது வந்திருக்கிறார்களா என ஆராய்வார்கள்.
புதிதாக வீட்டுக்கு ஆட்கள் வந்தால் போனால் அவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார்கள். கணவனோ அல்லது மனைவியோ வெளியே கிளம்பினால், ‘யாரைப் பார்க்க போறன்னு தெரியும்… அங்கதானே போறே… என்று உணர்ச்சிவசமான வார்த்தைகளால் எரிந்துவிழுவார்கள். என்னைக் கொல்வதற்காக ஆட்களை கூட்டி வருவதற்காக வெளியே போகிறாயா என்றும் சிலர் கூறுவார்கள். நின்றால், உட்கார்ந்தால் என எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவார்கள். இதனை Paranoid Personality Disorder (PPD) என்பார்கள்.
நல்ல மனநிலையில் இருந்துகொண்டு தன் துணையைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் சூழ்நிலையின் காரணமாக தவறாக புரிந்து கொண்டு சந்தேகப்படுபவர்களை தனது பிரச்னையிலிருந்து வெளியே வர போராடுபவர்களை மனநோயாளி என்று சொல்லமுடியாது. அது அவர்களது பிரச்சனை.
அந்த பிரச்னையில் தெளிவு கிடைக்கும்போது அங்கே அவர் தெளிவடைந்துவிடுவார். தன் வாழ்க்கைத் துணை தனக்கு துரோகம் செய்கிறான் அல்லது செய்கிறாள் என நினைப்பவர்கள் அதன் உண்மைத்தன்மையை முதலில் சரியாக ஆராய வேண்டும். தன் துணையுடன் அமர்ந்து மனம் விட்டுப்பேசும்போது இந்த பிரச்னை தானாக சரியாகிவிடும்.
துரோகம் இழைப்பதை கண்டறியும்போது என்ன செய்ய வேண்டும்?
ஒரு சில இடங்களில் உண்மையிலே தவறுகள் நடைபெறுவதுண்டு. தவறான உறவுகளில் ஈடுபடுபவர்களை கண்டறியும் துணை அதனால் அதன் பிறகு அவர்கள் எது செய்தாலும் அவர்களை சந்தேகப்படுவது இயல்பு தான். இது சந்தேக நோய் என்றுகுறிப்பிடக் கூடாது. இதில் சந்தேகப்படுபவர்களின் நிலைதான் பாவம். அவர்கள் இந்த பிரச்னையிலே மூழ்கி கிடக்காமல் அதற்குப் பதில் தங்கள் துணையிடம் இருந்து விலகுவதா அல்லது அத்தகைய தவறு செய்யும் துணையுடனே வாழ்வதா என தெளிவான முடிவு எடுப்பது அவசியம்.
மன அழுத்தம் உடையவர்களுக்கு இத்தகைய தெளிவு தேவைப்படாது. எத்தனை விளக்கங்கள் கிடைத்தாலும் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்தான். தன்னுடைய நிலையிலிருந்து அவரால் மீள முடியாது. சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார். தன் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, மன குழப்பத்திற்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகும் ஒருவர் தன்னை சுற்றி உள்ள ஒவ்வொருவர் மீதும், ஒவ்வொன்றின் மீதும் சந்தேகம் கொள்வர்.இதில் விதிவிலக்குகள் உண்டா?
ஒரு குடும்பத்தில் மனைவியின் அல்லது கணவனின் நடவடிக்கைகளால் கவன ஈர்ப்பு செய்யப்பட்டு, அதாவது அதீத அன்பின் காரணமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இதனோடு ஒப்பிட முடியாது. சில பெற்றோருக்கு பிள்ளைகளின் நடவடிக்கை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் அச்சம் சந்தேகம் என்கிற வகையில் அடங்காது. சிலரது ஆழ்மனம் பாதிப்படையும் பொழுது, சம்மந்தப்பட்டவர்களது நடவடிக்கைகளால் பாதிப்படையும்போதுதான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அதனால்தான் நிச்சயமாக பாதிப்புகள் உண்டு.
சந்தேக குணம் கொண்டவர்களை எப்படி கையாள்வது?
மிகப்பெரிய குற்றங்களுக்கு நம்பிக்கை இன்மையே அதாவது சந்தேகமே காரணமாக இருந்திருக்கிறது. சந்தேகத்தின் காரணமாக கொலை, வன்முறை என அசாதாரணமாக அரங்கேறிவிடுகிறது. இவர்களிடம் உடனிருப்பவர்கள் கொஞ்சம் கவனமாகத்தான் நடந்துகொள்ளவேண்டும்.
மேலும் அவர்களது சந்தேகம் வலுப்பெறும்படி நடந்துகொள்ளாமல் சந்தேகத்தைத் தீர்க்கும் வழிமுறைகளை யோசித்து முறையாக கையாள வேண்டும். சந்தேகத்தின் வீரியத்தை பொறுத்து குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் துணையோடு அல்லது முறையாக பயிற்சி பெற்ற மனநல ஆலோசகரின் துணைகொண்டோ தீர்க்க முயலலாம்.
இதற்கு சிகிச்சைகள் என்ன?
சந்தேக குணம் தீவிரமான உளவியல் பாதிப்பாக மாறிவிடும்போது Sedative drugs முதலில் அளிக்க வேண்டும். அதாவது நன்கு தூக்கம் தரக்கூடிய மருந்துகள்தான் பெரும்பாலும் முதன்மையான மருந்தாக இருக்கும். நன்கு ஆழ்ந்து உறங்கும்போது மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும். அப்போது இந்த பிரச்னை குறையும் என்பதால் தூக்க மாத்திரைகள் கொடுப்பார்கள். நீண்ட நாள் மாத்திரைகள் எடுக்க வேண்டி இருக்கும்.
ஆரம்பத்தில் மாத்திரையின் அளவு குறைவாக இருக்கும்போதே தூங்கி விடுவார்கள்.
ஆனால், நாளாக நாளாக குறைந்த டோசேஜில் தூக்கம் வராமல் போகலாம். டோசேஜ் அதிகரிக்க வேண்டி இருக்கும். இதற்கு உடல்ரீதியாக பின் விளைவுகள் இருக்கும். அதனால் இதிலிருந்து எளிதில் விடுபட மருந்துகளோடு தியானம், யோகா மற்றும் தொடர் கவுன்சிலிங் போன்றவை அவர்களுக்கு கட்டாயம் தேவை.
அவர்கள் யாரை நன்றாக நம்புகிறார்களோ அவர்கள் இந்த கவுன்சிலிங்கிற்கு அவர்களை எப்படியாவது அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு நல்ல நம்பிக்கைத் தரக்கூடிய பேச்சாற்றல் உடையவர்கள் மூலமாக இந்த கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்.
படிப்படியாக அவர்கள் மனதை வேறு நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வைக்க வேண்டும். நல்ல புத்தகங்கள், நல்ல இசை அல்லது கைவேலைப்பாடுகள் அல்லது பொழுதுபோக்குகள் மூலம் அவர்கள் மனதை திசை திருப்ப வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல இந்த பிரச்னையிலிருந்து அவர்கள் விடுபடுவார்கள்.
அதனை விடுத்து மேலும் அவர்களை காயப்படுத்தியோ, மேலும் அவர்களது சந்தேகத்தை தூண்டும் வகையிலோ நடந்து கொள்வது பெரும் நஷ்டத்தை உண்டாக்கிவிடும். இந்த பிரச்னையிலிருந்து வெளிக்கொணர்வது பிரச்சனையின் தன்மையை பொறுத்து எளிதாகவும் கடினமாகவும் கூட அமையலாம்.
எல்லா பிரச்சனைக்கும் ஒரே மாதிரி தீர்வை சொல்லமுடியாதே. எந்த மாதிரியான காரணமாகவும் இருந்தாலும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வன்முறையை கையாலாமல் அமைதியாக சிந்தித்து…
அவரது நடவடிக்கைக்கு ஏற்ப, அவர் நம்பும்படி அல்லது யாராவது ஒருவராவது அவரது நம்பிக்கைக்கு உரியவராக இருந்துகொண்டு அவரது நடவடிக்கைகளை கண்காணிப்பது நலம். இதன் மூலம் பெரும் சேதத்தை தவிர்க்கலாம். இதற்கு வீட்டில் இருப்பவர்கள் அவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். உறுதுணையாக இருந்து உதவ வேண்டும். அப்போதுதான் அவர்களால் இந்த பிரச்னையிலிருந்து முழுவதுமாக வெளி வர முடியும்!
Average Rating