கர்ப்ப கால மலச்சிக்கல்!! (மகளிர் பக்கம்)
கர்ப்ப காலத்தில் தலை முதல் பாதம் வரை கர்ப்பிணிகள் சந்திக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம், அந்தப் பருவத்தில் நடக்கிற ஹார்மோன் மாற்றங்கள். அத்தகைய பிரச்னைகளில் முக்கியமானது மலச்சிக்கல். 50 சதவிகிதக் கர்ப்பிணிகளை பாதிக்கிற இந்தப் பிரச்னையின் பின்னணி, தீர்வுகள், ஆலோசனைகள் குறித்துப் பேசுகிறார் மருத்துவர் நிவேதிதா.
கர்ப்ப காலத்தில் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிகரிப்பதன் விளைவாக உடல் முழுவதும் உள்ள தசைகள் தளர்வடையும். உணவுப்பாதை தசைகளும் அடக்கம். அதனால் உணவானது மிக மிக மெதுவாக குடலில் செல்லும். இது ஒரு பக்கம் என்றால், நாளுக்கு நாள் வளரும் குழந்தையின் அழுத்தம், அதிக அளவில் எடுத்துக் கொள்கிற இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவையும் சேர்ந்து கொள்வதாலேயே கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். முழுதானிய உணவுகள், சிவப்பரிசி, பீன்ஸ், பச்சைக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் போன்றவை தினசரி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தினமும் 25 முதல் 30 கிராம் நார்ச்சத்து தேவை. நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குறைந்த அளவில் தொடங்க வேண்டும்.
அறிமுகமில்லாத அந்த உணவுகளை அளவு தெரியாமல் ஒரேயடியாக எடுத்துக் கொண்டால், அது ஏற்றுக் கொள்ளாமல், வேறுவிதமான வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை சிறுநீரின் தெளிவான நிறத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதும் பலன் தரும். கடைகளில் ப்ரூன் (prune) என்கிற உலர்பழம் கிடைக்கும். அதில் ஒன்றோ, இரண்டோ சாப்பிட, மலச்சிக்கல் சரியாகும்.
மூன்று வேளைகள் வயிறு நிறைய உண்பதைத் தவிர்த்து 6 வேளைகள் கொஞ்சம் கொஞ்சமாக உண்பதன் மூலம் வயிறு ஓவர்டைம் வேலை பார்க்கத் தேவையின்றி, ரிலாக்ஸ்டாக உணவை செரிக்கச் செய்து, குடலுக்கு அனுப்பும். இதனால் செரிமானம் எளிதாவதுடன், மலச்சிக்கலும் சரியாகும். மிதமான நடைப்பயிற்சி மிகவும் அவசியம். அது குடல் தசைகளைத் தளர்த்தி, மலச்சிக்கல் குணமாக உதவும். கை நிறைய பாதாம், பேரீச்சை, உலர்ந்த திராட்சை போன்றவற்றை வைத்துக் கொறித்தபடியே, ஒரு வாக் போய் வருவது நல்ல பயிற்சி.
கர்ப்பத்தின் போது எடுத்துக் கொள்கிற வைட்டமின்கள், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவை மலச்சிக்கலை தீவிரமாக்கலாம். அது உங்கள் மனநிம்மதியைக் கெடுக்கும் அளவுக்குத் தீவிர மலச் சிக்கலைக் கொடுத்தால், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். மலச்சிக்கலைத் தீவிரமாக்காதபடியான மருந்துகளைப் பரிந்துரைக்கச் சொல்லிக் கேளுங்கள்.
நீங்களாகவே மலமிளக்கி மருந்து களையும், எண்ணெய்களையும் வாங்கி உட்கொள்ள வேண்டாம். உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் பேசினால், உங்களையும் குழந்தையையும் பாதிக்காதபடி பாதுகாப்பான மருத்துவ முறைகளைப் பரிந்துரைப்பார். கர்ப்ப காலத்தைக் கடந்ததும் ஹார்மோன்கள் பழைய நிலைக்குத் திரும்பியதும் இந்தப் பிரச்னையும் தானாக சரியாகி விடும். பயம் வேண்டாம்.
Average Rating