ஹேப்பி ப்ரக்னன்ஸி!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 58 Second

பிரசவ கால கைடு – 1

மினி தொடர்

-இளங்கோ  கிருஷ்ணன்

தாய்மை… ஒரு புதிய உயிரை இந்த மண்ணுக்குக் கொண்டுவந்து, மனித குலத்தைத் தழைக்கச் செய்ய இயற்கை, பெண்களுக்கு அளித்த அற்புதக் கொடை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் தாய்மை அடையும் பருவம் ஓர் அற்புதத் தருணம்; பரவச அனுபவம். வயிற்றில் வளரும் சிசுவைத் தொட்டுத் தொட்டு அவள்கொள்ளும் ஆனந்தம், சிசு மெல்ல அசைகையில் அவள் அடையும் பெருமிதம் வார்த்தையில் வடிக்க இயலா கவிதை.ஆனால், முதன் முதலாய் தாயாகும் பெண்களுக்குப் பரவசம் மட்டுமே இருப்பது இல்லை. நம் குழந்தை நன்றாக வளர்கிறதா? அது பாதுகாப்பாய் உள்ளதா? பிரசவம் எப்படி இருக்கும்? என்று எண்ணற்ற இயல்பான அச்சங்கள் ஒருபுறம் என்றால், “இதைச் சாப்பிடாதே, அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே” என்று ஆளாளுக்கு இலவசமாய் அள்ளிவிடும் அட்வைஸ்கள் மறுபுறம் என்று அவளின் பிரசவ காலத்தை பதற்றத்துக்குள்ளாக்கு கின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் தங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும். இனிமையான, ஆரோக்கியமான பேறுகாலத்துக்கு ஏற்ற நடைமுறைகள் என்னென்ன? கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகள் என்னென்ன? அவற்றை எப்படி எதிர்கொள்வது? கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன? உண்ண வேண்டிய; தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? கர்ப்பம் சார்ந்து உள்ள நம்பிக்கைகளில் எவை எவை சரி அல்லது தவறு என கர்ப்பம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் தெளிவாக விளக்கும் 360 டிகிரி மினி தொடர் இது…

கர்ப்பம் என்றால் என்ன?

கர்ப்பம் என்றால் குழந்தை உண்டாவது என்றுதான் நமக்குத் தெரியுமே. இதில் தெரிந்துகொள்ள என்ன இருக்கு என்று நினைக்க வேண்டாம். கர்ப்பம் என்பது பல்வேறு உறுப்புகளின் கூட்டுச் செயல்பாடு. கர்ப்பம் எவ்வாறு நிகழ்கிறது என்று தெரிந்துகொள்வதுதான் கர்ப்ப காலப் பராமரிப்பின் முதல் படி. பெண்ணின் சினைப்பையில் உள்ள கருமுட்டை அது உருவான நாளில் தொடங்கி சுமார் இரண்டு வார காலத்தில் தாய்மைக்குத் தயாராக முதிர்ச்சி அடைகிறது.

அவ்வாறு முதிர்ச்சி அடைந்த கருமுட்டையுடன் ஆணின் விந்துவில் உள்ள உயிரணு சேரும்போது அது கருவாக வடிவெடுக்கிறது. பிறகு, அந்தக் கரு ஃபெலோப்பியன் டியூப் வழியாகப் பாதுகாப்பாகப் பயணித்து பெண்ணின் கர்ப்பப்பையை அடைகிறது. அங்கு இயற்கை, கரு பாதுகாப்பாகத் தங்குவதற்கான வேலைகளை ஏற்கெனவே செய்துவைத்திருக்கும். அங்கிருந்துதான் அந்த ஒற்றைச் செல் (கரு) வளர்ந்து ஒரு குழந்தையாக வடிவெடுத்து, சுமார் 38 முதல் 40 வாரங்களில் இந்த பூமிக்கு வருகிறது.

கருவுக்கு என்ன பெயர்?

குழந்தை பிறந்தவுடன் நாம் பெயர் வைப்பது போலவே கருவுக்கு மருத்துவ அறிவியல் பெயர் வைத்துள்ளது. பொதுவாக, கரு உருவானது முதல் எட்டு வாரங்கள் வரை உள்ள கரு ‘எம்ப்ரியோ’ எனப்படுகிறது. எட்டாவது வாரம் முதல் உறுப்புகள் வளர்ச்சி அடையத் தொடங்குவதால் அந்தக் கரு, சிசு என்ற நிலையை அடைகிறது அப்போது இதனை ‘ஃபிடெஸ்‘ (Fetus) என்கிறார்கள்.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள் என்று பார்த்தோம். அதாவது 280 நாட்கள் அல்லது 10 மாதங்கள். இந்த கர்ப்ப காலத்தை ஒவ்வொரு மூன்று மாதங்களாக, மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். இதை, ‘டிரைமஸ்டர்’ என்பார்கள். ஒவ்வொரு மும்மாதமும் கரு வெவ்வேறு வகையான வளர்ச்சி நிலைகளில் இருப்பதால், இப்படி மும்மாதங்களாகப் பிரித்துக்கொள்ளும் போது கர்ப்ப காலப் பராமரிப்பு என்பது புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் எளிதாக இருக்கிறது.பொதுவாக, ஒவ்வொரு மாதத்துக்கும் பிரத்யேகமான பிரச்னைகள், சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், அதற்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள், எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகள், செய்துகொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள், செய்ய வேண்டிய பரிசோதனைகள் என அனைத்தும் மாறுபடும்.

முதல் மும்மாதங்கள்

கர்ப்ப காலத்தின் தொடக்க நிலை. நம் நாட்டில் பல பெண்களுக்கு தாங்கள் கர்ப்பம் அடைந்திருப்பதே தெரிந்திருப்பது இல்லை என்பது இந்த முதல் மும்மாதப் பராமரிப்பின் சவால்களில் ஒன்று. பொதுவான சில அறிகுறிகளைக் கொண்டு கர்ப்பத்தை ஓரளவு யூகிக்கலாம். கர்ப்பம் என்று சந்தேகம் இருந்தால், கர்ப்பத்தை பரிசோதித்து அறியும் ஸ்ட்ரிப்பைப் பயன்படுத்தி கர்ப்பமா என்று கண்டறியலாம். அருகில் உள்ள மகப்பேறு மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. கர்ப்பத்தை கண்டறியும் ஸ்ட்ரிப் பொதுவாக நூறில் நான்கைந்து பேருக்கு தவறாகப் போகவும் வாய்ப்பு உள்ளது என்பதால், மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

அறிகுறிகள்

மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போவது, வாந்தி, மயக்கம், உடல் சோர்வு, மார்பகங்கள் இறுகுதல், வழக்கத்தைவிட கூடுதலான பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

கருச்சிதைவு

முதல் மும்மாதங்களின் தொடக்கத்தில்தான் கருவானது சினைப்பையில் இருந்து பயணித்து ஃபெலோப்பியன் டியூப் வழியாக கருப்பையை அடையும் என்பதால் அந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். ஒரு உயிரின் பயணத்திலேயே மிகவும் ஆபத்தான, சிக்கலான பயணம் எது என்று கேட்டால் அது கரு சினைப்பையில் இருந்து தாயின் கருப்பையை அடையும் பயணம்தான்.

இயற்கை அதைப் பாதுகாக்க என்னதான் முன்னேற்பாடுகள் செய்துவைத்திருந்தாலும் நாமும் கவனமாக இருக்க வேண்டும். கருவுற்ற தாயின் தேவையற்ற பயணங்கள், அலைச்சல்கள், மனஅழுத்தங்கள், கவலைகள் போன்றவையும் தாய் எடுத்துக்கொள்ளும் சிலவகை மாத்திரைகள், சிகிச்சைகள், அதீத உடல் உழைப்பு போன்றவையும் கருவுக்கு ஆபத்தாகக்கூடும் விஷயங்கள் என்பதால் இந்தக் காலகட்டத்தில் கர்ப்பிணிகள் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியம்.முதல் மும்மாதங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன? முதல் மும்மாதங்களில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? சந்தேகங்கள் என்னென்ன, பரிசோதனைகள் என்னென்ன என்பதை அடுத்த இதழில் காண்போம்! ஹேப்பி மதர்ஹுட் தோழி!

முதல் மும்மாதங்கள் முதலே வீட்டில் உள்ள பெரியவர்கள், நண்பர்கள், சுற்றத்தினர் என்று பலரும் பலவித அறிவுரைகள் சொல்லத் தொடங்கிவிடுவார்கள். அவை அனைத்துமே பொய் என்றும் சொல்ல முடியாது. ஆனால், அவை யாவும் அவர்கள் உடல்வாகுக்கு ஏற்றவை. அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டவை. அவர்களுக்கு செட் ஆனவை அவ்வளவே.உங்கள் அம்மா தாயான காலகட்டம் வேறு; இந்தக் காலக்கட்டம் வேறு. இப்போது உள்ள சுற்றுச்சூழல், உணவின் தரம், வாழ்க்கைமுறை எல்லாமே எவ்வளவோ மாறிவிட்டன. எனவே, உங்களது மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே சத்து மாத்திரைகளோ, உணவுப் பொருளோ எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய சந்தேகம்தானே என்று அலட்சியப்படுத்தாமல் உங்கள் மருத்துவரிடமே ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையின்மைக்கான மரபியல் காரணங்கள்!! (மருத்துவம்)
Next post கில்லி பட விஜய் தங்கச்சியா இது? இப்போ எப்படி கவர்ச்சியா மாறிட்டாங்க பாருங்க! (வீடியோ)