காதலுக்கு கண்ணுண்டு!! (மகளிர் பக்கம்)
ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக் கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்… – நா.முத்துக்குமார்
கார்த்திக், உஷா… காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நாளாக ஆக, காதலிக்கும் போது இருந்த நெருக்கம் குறைந்தது. நான்கே ஆண்டுகளில் எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்து பரஸ்பரம் மோதிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து, பேசிக் கொள்வதையே இருவரும் நிறுத்திவிட்டார்கள். கருத்து வேறுபாடு அதிகமாகி, விவாகரத்து செய்துவிடலாம் என முடிவெடுத்த சூழல்… உளவியல் ஆலோசகரிடம் ஆலோசனை பெறச் சொன்னார் ஒரு நண்பர். எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்ட உளவியல் நிபுணர், ‘ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளை அதிகமாக வளர்த்துக் கொண்டதே இந்தப் பிரச்னைகளுக்கான ஆணிவேர்’ என்றார். ‘லைலா – மஜ்னு’, ‘அம்பிகாபதி – அமராவதி’ வகை காதல்கள் இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லாதவை. காதலர்கள், தங்களுக்குள் பிரச்னை வராமல் இருக்க, நவீன காலத்துக்கேற்ப மனதை மாற்றிக்கொள்வது அவசியம்.
காதல்… எல்லோருக்கும் எல்லா வயதிலும் தேவையான உணர்வு. அறிவியல்பூர்வமாக ஆராயப்படாத ஓர் உணர்வும் கூட. ‘மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளிடம் அம்மாக்கள் முதலில் செல்லமாக இருப்பார்கள். ஆனால், பெறுகிற பிரியத்துக்கேற்ற எதிர்வினையை குழந்தைகளால் ஆற்ற முடிவதில்லை. இதனால் காலப்போக்கில் அம்மாக் களுக்கு குழந்தைகளின் மீதான ஈடுபாடு குறைந்துவிடுகிறது. அதே போல, குழந்தைகள் பிரியமாக இருந்து, அம்மாக்கள் அதை கவனிக்காமல், அன்பை வெளிப்படுத்தாமல் இருப்பார்கள். அவர்களின் மீதும் குழந்தைகளுக்குப் பிரியம் குறைந்துவிடுகிறது’ என்கிறது சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு.
இது போல காதலிலும் சரியான எதிர்வினை இரு பக்கமும் இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டும் மற்றவர் எதிர்வினை ஆற்றாமலும் இருந்தால் எப்படி அந்தக் காதல் வளரும்? எத்தனையோ காதல்கள் மோதலில் முடிவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. காதலில் ஒருவர் மற்றவரை குறை, நிறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுப்பது அவசியம். அமெரிக்க எழுத்தாளரும் பேச்சாளருமான Leo Buscaglia ‘ஒருவர் மீது மற்றவருக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் குறை, நிறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருக்கும் காதலர்களே சிறந்தவர்களாக இருக்க முடியும்’ என்கிறார்.
‘காதலுக்குக் கண்ணில்லை’ என்பதெல் லாம் பொய். முதல் பார்வையில் காதல் வருவது என்பதும் உண்மையல்ல. அப்படி வருவது ‘பிசிக்கல் அட்ராக்ஷன்’ எனும் உடல் கவர்ச்சி யில் சேரும். முதல் சந்திப்புக்கு பிறகு நன்கு பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து வருவதே உண்மையான காதல். அது ஆணோ, பெண்ணோ… தங்களுடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான, சிறந்த ஒரு Companion ஒவ்வொருவருக்கும் அவசியம். அதுதான் காதல் இணை. பல விஷயங்களை காதல் இணையுடன் மட்டுமே நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ள முடியும். காதலர்கள் தங்களுக்குள் பிரச்னைகள் வராமல், சுமுகமாக இருக்க சில வழிமுறை களைக் கையாள வேண்டும்.
ஒருவர், எல்லாவற்றிலும் தனது துணை சரியாக (Perfection) இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்துப் போவது அவசியம். உங்கள் துணையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் கூட துணையின் இணக்கமும் சம்மதமும் இருந்தால் மட்டுமே ஈடுபட வேண்டும். அவர் உங்களுக்காகவே படைக்கப்பட்டவராக நினைத்து ஆதிக்கம் செலுத்தக் கூடாது. காதலிக்கும் போது இருக்கும் தீவிரம் திருமணத்துக்குப் பிறகும் இருக்க வேண்டும். இருபதோ, அறுபதோ… எந்த வயதிலும் உங்களுக்கு துணையின் மேல் காதல் இருக்குமானால் உங்கள் இல்லற வாழ்க்கையில் என்றென்றும் ஆனந்தமே!
Average Rating