சியர் லீடர் ஆவதே சிறப்பு!! (மகளிர் பக்கம்)
பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்
காதலிக்கும் போதும் சரி… கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி… கணவன் – மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான் இருக்கும். தனது அருகாமை தன் துணைக்கு மகிழ்ச்சியான உற்சாகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். திருமணம் முடிந்த சில தினங்களில் இது தலைகீழாக மாறி விடுவதைப் பார்க்கலாம். துணையின் மீது ஒருவித அலட்சியம் தலைதூக்கும். துணைக்கு நாம் செய்ய வேண்டிய வேறு எந்த வேலையை வேண்டுமானாலும் யாரிடமும் ஒப்படைக்கலாம். ஆனால், துணையை உற்சாகப்படுத்துகிற ‘சியர் லீடர்’ வேலையை அப்படி யாரிடமும் மாற்றி விட முடியாது.
தன்னை உற்சாகப்படுத்துகிற, ஊக்கப்படுத்துகிற, குறிப்பாக… பாராட்டுகிற நபரைத் தான் யாருக்குமே பிடிக்கும். வாழ்க்கைத் துணைவர் அந்த வேலையைச் செய்யத் தவறுகிற பட்சத்தில், சம்பந்தமில்லாமல் அதைச் செய்கிற இன்னொரு நபரிடம் ஈர்ப்பு உண்டாவது இயற்கையே. துணையை உற்சாகப்படுத்தி மகிழ்விப்பதன் அவசியம் உணராததாலேயே பல தம்பதியரின் உறவு சிரம தசை நோக்கி நகர்கிறது. விமானத்தில் ஆட்டோ பைலட் மோடு என்று ஒன்று உண்டு. விமானியின் உதவியின்றி விமானம் தானாகச் செல்ல இது உதவும். பலரும் வாழ்க்கை என்கிற விமானத்தை அப்படித்தான் ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிட்டு அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். அதன் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தை உணராதவர்கள் அவர்கள்.
5 முக்கிய ஸோன்கள்…
திருமண உறவில் 5 முக்கிய ஸோன்கள் உண்டு. அழகான நிலையில் இருந்து ஆபத்தான நிலை நோக்கி, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மிக இயல்பாக உறவு நகர்வதை பெரும்பாலான தம்பதியர் அறிந்திருப்பதில்லை.
முதல் ஸோன்
குதூகலமான, கொண்டாட்டமான காலம் இது. திருமணத்துக்கு முந்தைய அல்லது திருமணமான முதல் சில நாட்களை உள்ளடக்கிய இந்தக் காலம் தற்காலிகமானது. கணவன்மனைவி இருவருமே சியர் லீடர்களாக இருக்கும் காலமும்கூட. வாழ்க்கை முழுக்க இந்த ஸோனிலேயே இருந்து விட்டால் பிரச்னைகளுக்கே இடமில்லை. ஆனாலும் அது சாத்தியமே இல்லை.
இரண்டாவது ஸோன்
திருமணமாகி, வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டிலான காலம் இது. ஒருவர் மீது ஒருவர் கொண்ட த்ரில் சற்றே குறைந்திருக்கும். ஆனாலும், பரஸ்பர பாராட்டு இருக்கும். சியர் லீடராக இருப்பதிலிருந்து விலக ஆரம்பிப்பார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கம் அப்படியே இருக்கும். ஒருவரின் தவறுகளை
இன்னொருவர் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிற மனநிலையில் இருப்பார். திருமண உறவி லேயே மிகவும் சிறந்த ஸோன் இது என்றாலும், இந்த நிலையிலும் பெரும்பாலான தம்பதியரால் தொடர்ந்து இருக்க முடிவதில்லை.
மூன்றாவது ஸோன்
துணையின் மீதான த்ரில் இன்னும் கொஞ்சம் குறைந்திருக்கும். துணையின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே பார்த்த நிலை மாறி, நெகட்டிவ் பக்கமும் தெரிய ஆரம்பிக்கும். துணையை உற்சாகப்படுத்துகிற சியர் லீடர் மனப்பான்மை முற்றிலும் காலியாகியிருக்கும். பரஸ்பர பாராட்டு அறவே இருக்காது. தவறுகளை கண்டுபிடிக்கத் தொடங்கி இருப்பார்கள். சின்னச்சின்ன விஷயங்களைக் கூட விமர்சிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
நான்காவது ஸோன்
நாம் தேர்ந்தெடுத்த துணை நமக்குக் கொஞ்சமும் பொருத்தமற்றவரோ… அவசரப் பட்டு தவறான முடிவெடுத்து விட்டோமோ என நினைக்க வைக்கிற ஸோன் இது. துணையிடமிருந்து விலகியிருக்கத் தோன்றும். துணையிடம் நிறைகளைவிட, குறைகளே அதிகம் என நினைக்க வைக்கும்.
ஐந்தாவது ஸோன்
முந்தைய ஸோனில் தவறான துணையைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ எனக் குழம்ப வைத்தது மாறி, தவறான துணைதான் என முடிவே செய்ய வைக்கிற ஸோன் இது. துணையிடம் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே உள்ளதென நினைக்கச் செய்யும். அப்படியொரு துணையுடன் வாழவே முடியாதென்கிற மனநிலைக்குத் தள்ளும். நிச்சயம் பிரிவை நோக்கி முன்னேற வைக்கும். இதில் நீங்கள் எந்த ஸோனில் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கும் உங்கள் துணைக்குமிடையிலான சில விஷயங்களை வைத்துக் கண்டுபிடிக்கலாம். அடிக்கடி கணவரை அல்லது மனைவியை பாராட்டுவீர்களா? நன்றி சொல்வீர்களா?
என் கணவர் – மனைவியிடம் நிறைய பாசிட்டிவான விஷயங்களும், கொஞ்சம் நெகட்டிவான விஷயங்களும் உள்ளன என நீங்கள் நினைத்தீர்களானால் நீங்கள் முதல் 3 ஸோன்களுக்குள் இருக்கிறீர்கள் என அர்த்தம். துணையிடம் கொஞ்சம் அக்கறையையும் அன்பையும் அதிகரித்து உங்கள் சியர் லீடர் வேலையைத் தவறாமல் செய்தீர்களானால் உங்கள் உறவு 4 அல்லது 5வது ஸோனை நோக்கி நகராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மாறாக நெகட்டிவ் விஷயங்களைக் கூடுதலாகவும், பாசிட்டிவ் விஷயங்களைக் குறைவாகவும் உணர்ந்தீர்கள் என்றால் நீங்கள் 4 அல்லது 5வது ஸோனில் இருப்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ரொம்பவே ஆபத்தான இடத்தில் இருக்கிறது உங்கள் உறவு. உடனடியாக அதை சரி செய்து தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை நீங்கள் எடுத்தாக வேண்டும்.
தம்பதியரிடையே காணப்படுகிற 5 விதமான தவறான மனநிலைகளைப் பார்ப்போமா?
1. கணவரிடம் காய்கறி வாங்கிவரச் சொல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வாங்கி வந்ததும் அவருக்கு நன்றி சொன்னதுண்டா? ‘இதென்ன காமெடி… காய்கறி வாங்க வெல்லாமா தேங்க்ஸ் சொல்லிட்டிருப்பாங்க? அவருக்கும் சேர்த்துதானே சமைக்கப் போறேன்…’ என நீங்கள் கேட்டால் அது தவறு. அதுவே முற்றலான, சொத்தையான காய்கறிகளை வாங்கி வந்திருந்தால் அதற்கு அவரை திட்டத் தவறியிருக்க மாட்டீர்கள்தானே? தவறு செய்யும் போது சத்தமாக சுட்டிக் காட்டும் நீங்கள், உங்களுக்கு ஒரு உதவி செய்யும் போது அதற்கு நன்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். இது கணவர்களுக்கும் பொருந்தும்.
2. உங்களுக்கு ஒரு சேலையோ, சல்வாரோ வாங்கி வரச் சொல்கிறீர்கள். நீங்கள் சொன்ன அளவை அல்லது கலரை தவிர்த்து தவறாக வேறொன்றை வாங்கி வந்து விடுகிறார். தவறாக வாங்கி வர வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்காது. ஆனாலும் அதை அவர் வேண்டுமென்றே செய்ததாக நினைத்து அவரைக் கடுமையாக விமர்சிப்பீர்கள். இந்த மனநிலை இருந்தால் உங்களால் உங்கள் உறவை நல்லபடியாக நீண்ட நாளைக்குக் கொண்டு செல்ல முடியாது. மேலும் உங்கள் விமர்சனத்துக்குப் பயந்து, அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்படுகிற போது அதைச் செய்யவே பயப்படுவார் உங்கள் கணவர். தவறுகளை அலட்சியம் செய்ய வேண்டியதில்லை. அதே நேரம் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதுமில்லை.
3. உங்கள் குழந்தைகளை விடுமுறை தினத்தன்று அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறீர்கள். உங்கள் கணவரும் அப்படியே செய்கிறார். ‘நான் சொல்லித்தானே செய்தார்? அதுக்கு எதுக்கு தேங்க்ஸ்?’ என நினைக்காதீர்கள். அந்த இடத்தில் அவர் செய்த வேலைக்கு நன்றி சொல்லிப் பாருங்கள். அதன் விளைவு அவரது அன்பில் பிரதிபலிப்பதை உணர்வீர்கள்.
4. மனைவி சமைக்கிறார்… வீட்டை சுத்தம் செய்கிறார்… ‘அது அவளோட கடமைதானே… தினமும் செய்யறது தானே… அதுக்கெதுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு?’ என நினைக்காதீர்கள் கணவர்களே… எதையும் அவரது கடமை என நினைக்காமல் நன்றி சொல்லிப் பாருங்கள். ஒரு சின்ன நன்றிதான் சாதாரண விஷயத்தை அசாதாரணமாக மாற்றும். நன்றி சொல்லத் தவறும் போது அசாதாரணமான விஷயம்கூட சாதாரணமானதாக மாறி விடும்.
5. உங்கள் கணவரோ… மனைவியோ… உங்களுக்கு ஒரு உதவி செய்தால் நன்றி சொல்வீர்கள். அதுவே உங்களைச் சார்ந்த யாருக்கேனும்… உங்கள் பெற்றோர், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் யாருக்காவது உதவி செய்தால் அதற்கு நன்றி சொல்கிற பழக்கம் உண்டா உங்களுக்கு? துணையை உற்சாகப்படுத்துகிற சியர் லீடராக நீங்கள் இருப்பீர்களானால், உங்கள் துணை யாரிடம் காட்டுகிற பரிவையும் இரக்கத்தையும் செய்கிற உதவியையும் நிச்சயம் பாராட்டுவீர்கள்!
எழுத்து வடிவம்: மனஸ்வினி
Average Rating