மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு!! (கட்டுரை)
உலகளவில் எழுந்திருக்கின்ற கேள்விகள் எல்லாமே, இஸ்லாத்தின் பெயராலும் ஏனைய மதங்களின் பெயராலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை, எவ்வாறு ஒழிக்க முடியும் என்பதாக இருக்கையில்தான், இலங்கையில் ஈஸ்டர்தினம் தெரிவு செய்யப்பட்டு, தேவாலங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
நாட்டில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்தான அசாதாரண நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்படுதல்தான், இப்போதைய தேவையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு, கிழக்கின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார் என்ற கரும்புள்ளியுடன்தான், இப்போதைய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு” என்ற இயேசுவின் போதனை, ஒருவர் எமக்கு அடித்தால்கூட எமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு நாம் சென்ற வழியிலேயே செல்லவேண்டும் என்ற ஆழ்ந்த தத்துவக் கருத்துடையது. இப்போதனையைப் பெற்றிருக்கும் கிறிஸ்தவர்கள், தாம் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் எந்த முடிவுகளும் பாரிய விளைவுகளையே ஏற்படுத்தும் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். அது போல, இச்சிந்தனையை மனதிற்கொண்ட ஏனைய மதத்தவர்களும், இவ்வாறிருப்பதைக் காண்கிறோம்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குப் பிறகு, பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில், உலகின் சக்திவாய்ந்த நாடுகளில், நேருக்கு நேராகத் தாக்குதல் நடத்தத் திறானிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.எஸ், இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உலகுக்குக் காண்பித்து அறிக்கை வெளியிட, சமீபத்தில் சமாதானத்தை கட்டியெழுப்பிய ஒரு நாட்டை அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் என்றுதான் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் இன்னமும் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படவில்லையாயினும், உண்மையில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும், கடந்த 10 வருடங்களாக, தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களின் அமைதி குலைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி சொன்னதுபோல, ஐ.எஸ் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பதைத, இலங்கையை வைத்து வெளிக்காட்டியுள்ளது.
இஸ்லாமியப் பயங்கரவாதம் என்பது, இஸ்லாமியர்கள் தங்களது இஸ்லாமிய அரசு எனும் அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக, மதத்தின் பெயரால் முன்னெடுக்கும் பயங்கரவாதச் செயல் என்றுதான் சொல்லப்படுகிறது. அதேநேரம், இந்தப் பயங்கரவாதத்துக்கான கருத்தியல், அவர்களின் ஆதாரமாக குர்-ஆனின் வசனங்களைக் கொள்வதாலும் இஸ்லாமியப் பயங்கரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள், தாங்கள் மேற்கொள்ளும் வன்முறைகள், கொலைகளை, குர்-ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் மூலம் நியாயப்படுத்தி வருகின்றனர்.
சமீப காலங்களில், உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள், பிற மதத்தவர்களை முக்கியமாக மேற்குலகத்தவர்களை மாத்திரமல்லாமல், பிற இஸ்லாமியப் பிரிவுகளைக்கூட அழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான செயல்கள், மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும், கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்கியிருக்கின்றன. அதனாலும் பிரச்சினைகள் மூழ்குகின்றன.
சோமாலியா, சூடான், அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகள் என, உலகின் அனேக நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதச் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், இப்போது இலங்கையும் சேர்ந்திருக்கிறது. தொடருமா, இல்லையா என்பது தெரியாததே.
இந்த இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள், குண்டுத் தாக்குதல்கள், சட்டவிரோதப் பொருள்களைக் கடத்தல், தற்கொலைத் தாக்குதல்களை நடத்துதல் எனக் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக, உலகளவில் தங்களுக்கான ஆட்களைப் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலமும் இணையம் வழியூடாகவும், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்றனர். இவர்களுக்கான ஊதியம், கொடுப்பனவுகளை இலட்சக்கணக்கில் அள்ளிக்கொடுக்கின்றனர். இவ்வாறான வளர்ச்சியின் ஓர் அங்கமாகத்தான் இலங்கையிலும் 300ஐ தாண்டிய மக்கள் பலியெடுக்கப்பட்டனர். இவர்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதுதான், இலங்கையின் இப்போதைய சவால்.
இதற்குப் புதிதாக, இலங்கையில் இவ்வாறான தீவிரவாதச் சிந்தனை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதுடன், ஏற்கெனவே மூளைச்சலவை செய்யப்பப்பட்டு, பயங்கரவாதிகளாக மாறியவர்களைக் களையெடுத்தல் ஆகியவற்றையே, அரசாங்கம் செய்தாகவேண்டும். அதேநேரம், தற்போது பயங்கரவாதத்தை நோக்கித் திசைதிருப்பப் பட்டிப்பவர்களிடமிருந்து, ஏனையவர்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.
இஸ்லாத்தை வளர்க்க, வஹ்ஹாபிய அடிப்படைவாத இயக்கங்கள் தேவையில்லை. அந்த இயக்கங்களால் இஸ்லாம் வளர்க்கப்படவுமில்லை. அவ்வாறான இயக்கங்களால், குழப்பங்கள் உருவாகி சமூகம்தான் பிரிந்திருக்கின்றது என்றுதான் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு, இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள், அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு வருதல், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, ஜனாதிபதியினால் தடை செய்யப்பட்டமையையும் வரவேற்றுமுள்ளனர்.
இருந்தாலும், மத போதனைகளைப் போதிக்கின்றோம் என்ற போர்வையில் செயற்படும் அடிப்படைவாத (இஸ்லாமிய இஸ்லாம் அல்லாத) அமைப்புக்கள் அனைத்தும், உடனடியாக தடைசெய்யப்பட்டால் மாத்திரமே, இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தையும், இலங்கை நாட்டிலிருந்து இல்லாதொழிக்க முடியும் என்பது பொதுக்கருத்து.
வெறுமனே ஒருவரிடம், “முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கிறது; நீ தற்கொலைதாரியாக மாறி இவர்களைக் கொலை செய், உனக்கு சுவர்க்கம் இலகுவாக கிடைக்கும்” என்றால், அவ்வளவு இலகுவாக அவர் தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வருவாரா? அவரிடம் ஏதோ ஒரு தீவிரச் சிந்தனை இருக்கவேண்டும். அந்தச் சிந்தனை, வெறும் உலகத்தோடு தொடர்புடையதாக இருந்தால், உலக இலட்சியத்தின் மூலம்தான் சாத்தியம். இலங்கையில் நடந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு, உலக இலட்சியம் இல்லாதிருக்கிறது. அப்படியானால், மறுமை இலட்சியம்தான். அதற்கு மார்க்கம் அடிப்படையாக இருந்து மார்க்க விடயத்தில் தீவிர சிந்தனை இருந்திருக்க வேண்டும். இதுவே சஹ்ரான் மூலமாக நடத்தப்பட்டது.
இது குறித்துக் கருத்து வெளியிடும் காத்தான்குடியைச் சேர்ந்த பாரம்பரிய முஸ்லிம் தரப்பினர், பயங்கரவாத நோக்கமோ, ஆயுதம் தூக்கும் நோக்கமோ இல்லாமல், வெவ்வேறு காரணங்களுக்காக மார்க்கத்தில் கடும்போக்குவாதச் சிந்தனையை நோக்கி, பாதி மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைப்பலம் குறைந்தவர்களுக்குள்ளிருந்துதான் இவ்வாறான பயங்கரவாதிகள் உருவாக்கப்பட முடியும். அதன் விளைவை, மொத்தச் சமூகமும் அனுபவிக்க வேண்டி வருகின்றது. இந்தப் பின்னணியில்தான், ஆயுத நோக்கமற்ற முன்பாதி மூளைச்சலவை (மார்க்கத்தில் கடும்போக்குவாதம்) நம் சமூகத்தில் இடம்பெறுகிறது.
இந்த முன்பாதி மூளைச்சலவை தடுக்கப்பட முடியுமானால், பின்பாதிக்கான மூளைச் சலவையையும் (மார்க்கத்தின் பெயரால் தீவிரவாதம்) முற்றாகத் தடுக்க முடியும். இந்த விடயத்தில், நாம் உணர்ச்சிகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்கக் கண்ணாடிபோடாமல் நடுநிலையாக, சமூக கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டும்தான் உண்மை புரியும் என்கின்றனர்.
அத்தோடு, மார்க்க விடயத்தில் தீவிர சிந்தனை உள்ளவனை, மறுமையின் ஆசையைக்காட்டி மூளைச்சலவை செய்வது இலகுவாக இருக்கும். ஏனெனில், ஏற்கெனவே அவனது மார்க்கரீதியான தீவிர சிந்தனை என்பது பாதி மூளைச் சலவையினாலயே ஏற்பட்டுள்ளது. அந்தப் பாதி மூளைச்சலவையில் இருப்பவனை, தீ யசக்திகள் சில ஆயுத கலாசாரத்தை நோக்கித் திருப்புவதற்கு, மிகுதிப் பாதி மூளைச் சலவையைச் செய்வதற்கு மறுமையின் ஆசையை ஊட்டலாம். இங்கு இருக்கின்ற அடிப்படை விடயம் என்னவென்றால், அவன் தெளிவாக சிந்திக்க முடியாதவன் என்ற அவனது பலவீனம்தான், அவனை மார்க்க ரீதியான தீவிரச் சிந்தனையை நோக்கி, பாதி மூளைச்சலவை கொண்டு சென்றுள்ளது.
அவ்வாறு ஏற்கெனவே பாதி மூளைச்சலவையில் இருப்பவர்களுள் சிந்தனைப் பலவீனத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சிலரை, அதே மார்கத்தையும் மறுமையுயும் சொல்லி பயங்கரவாதியாக மாற்றப்படுகிறது.
அடுத்தவர்களைக் கொலைசெய்து, தானும் தற்கொலை செய்தால், தனக்கு எவ்வாறு சுவர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் அவன் அமைதியாக உட்கார்ந்துச் சிந்திக்குமளவுக்கோ அல்லது மார்க்க அறிஞர்களிடம் வினவுவதற்கோ முடியாத அளவு, ஒரு வகைச் சிந்தனை போதை அவனுக்கு ஏற்றப்படுகின்றது. இதனால், உருவான அழிவைப் பற்றி காலத்தைக் கடத்துவதை விடவும், தொடரும் பயங்கரவாத முன்னெடுப்புகளுக்கு முட்கட்டை போடுவதே நமது செயற்பாடாக இருக்க வேண்டும் என்பதுடன், மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாத்தை, நாட்டிலிருந்து மாத்திரமன்றி, உலகத்திலிருந்தும் ஒழிக்கவும் முடியும்.
அறிவியல் மூலமே நம் எதிர்காலத்தை மாற்ற முடியும். எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம், உங்களைப் போன்ற புதுமையான மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கைகளில் உள்ளது. சவால்களுக்கு முகங்கொடுத்து நம் நாட்டை ஒரு சிறந்த இடமாகவும் பெருமைமிக்க நாடாகவும் மாற்றுவோம் என்று இளைஞர் சமூதாயத்துக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியதே காலத்தின் தேவை. ஆனால், யார் குற்றச்செயல்களில் ஈடுபடுவார் என்று தேடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், எவ்வாறு மத்தின் பெயரிலான இந்தத் பயங்கரவாதத்தை அழிக்க முடியும்?
Average Rating