ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! (மகளிர் பக்கம்)
சொல்கிறார் ஹேமலதா, அழகுக்கலை நிபுணர்
இயற்கையை மீறி பல செயற்கைத் தனங்களை செய்து நம் அழகை வெளிப்படுத்த எத்தனை விதமான முயற்சிகளை நாம் செய்ய எத்தனிக்கிறோம். ஆனால் நம் முகம் என்பது பெரும்பாலும் அகத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக செயல்படுகிறது. அழகியலையும் தாண்டி உளவியலாய் செயல்படும் நம் முகத்திற்கு சிறு பாதிப்பு என்றாலும் மனம் அதையே நினைத்து வருந்தும்.
சிறிதாய் முகத்தில் ஒரு மச்சம், மரு அல்லது பரு வந்தாலே மனம் படாதபாடு படுகிறது. அதுவே முகத்தின் மொத்த அழகையும் கெடுக்கும் மங்குவாக இருந்தால்… அவ்வளவுதான். வாழ்க்கையே பறிபோனது மாதிரி மனம் சதா அதையே சிந்திக்கத் தொடங்கும். அதுவும் இளம் வயதினராக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். முக அழகை மொத்தமாய் கெடுக்கும். ‘மங்கு’ என்றால் என்ன? அது ஏன் வருகிறது? யார் யாருக்கெல்லாம் மங்கு வருகிறது? மங்கு வந்தால் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை விரிவாகக் காண்போம்.
மங்கு என்றால் என்ன?
பார்த்தவுடன் நம் முகத்தில் தெரியும் இது நோய் அல்ல. சருமத்திற்கு வரக்கூடிய ஒருவித பிரச்சனை. மங்குவை ஆங்கிலத்தில் மெலாஸ்மா (Melasma) என்கின்றனர். அதாவது ஹை பவர் பிக்மென்டேஷன் மங்குவாக அழைக்கப்படுகிறது. பிக்மென்ட் என்பது கரும் புள்ளியாகும். சின்ன புள்ளியாக துவங்கி நிறைய சிறு புள்ளிகள் இணைந்து மிகப் பெரிதாக முகத்தில் தோன்றத் துவங்கும். அதாவது கறுப்பான பாட்சஸ் அல்லது புள்ளிகள் என இதைச் சொல்லலாம்.
சருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாட்ச் பாட்ச்சாக கறுப்பாகத் தெரிகிறது. மெலாஸ்மா பிரச்னை, 80 சதவிகிதமும் பெண்களுக்கே அதிகமாக வருகிறது. சில ஆண்களுக்கும் மங்கு வரலாம். ப்ரௌன் நிறத்தில் தோற்றமளிக்கும் இது பெரும்பாலும் நெற்றி, இரண்டு கன்னங்கள், இருபுருவங்களுக்கு இடைப்பட்ட பகுதி, மூக்கு மற்றும் தாடையில் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
சிலருக்கு புள்ளி புள்ளியாகத் தோற்றம் தரும் இதன் வடிவம் வெவ்வேறு விதத்திலும் இருக்கும். சிறிய புள்ளியில் துவங்கி மிகப் பெரிய அளவில் சமமற்ற தன்மையில் அழகைக் கெடுக்கும் விதமாகவே தோற்றம் தரும். மங்குவில் சூப்பர் ஃபிஷியல், டீப் என்ற இரண்டு வகை உண்டு. இது, குறிப்பிட்ட காலத்துக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்னை என்றாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்பும் உள்ளது.
மங்கு வருவதற்கான காரணங்கள்
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவற்றாலும், மெனோபாஸ் தோன்றும் காலங்களிலும் மங்கு வரும் வாய்ப்பு உள்ளது. நமது சருமத்திற்குத் தேவையானது வைட்டமின் டி ஊட்டச் சத்து. சூரியனில் இருந்து நமக்கு நேரடியாகக் கிடைக்கிறது. சூரிய ஒளி அதிகப்படியாக நம் சருமத்தை தாக்கும் போது மங்கு தோன்றலாம் என்கின்றனர் சரும நிபுணர்கள்.வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள், வெயில் பாதிப்பு அதிகம் தாக்கக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மங்கு வருவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது.
அதேபோல் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு மங்கு வரும் வாய்ப்பு உள்ளது. கெமிக்கல் கன்டன்ட் அதிகம் உள்ள ஹேர் டை பயன்படுத்துபவர்கள், காஸ்மெட்டிக் பொருட்களை அடிக்கடி மாற்றி பயன்படுத்துபவர்கள், மன அழுத்தத்தால் அதிகம் பாதிப்படைந்தவர்கள், குழந்தை பேறைத் தடுக்க மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவோருக்கும் மங்கு வரும். இவற்றில் ஹார்மோன் பிரச்சனையால் வரும் மங்கே பெரும்பாலானவர்களுக்கு அதிகம் வருகிறது. மற்ற காரணங்களால் வருவது குறைவு.
மங்குவில் இருந்து தப்பிக்க
எப்போதும் தோல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதே சருமத் திற்கு பாதுகாப்பானது. விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, நாமே நமது சரும அழகினைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்களாக முயற்சி செய்து, கடைகளில் மங்குவை நீக்குவதாக விற்கும் முக க்ரீம்களை பயன்படுத்தவேண்டாம். போடும்போது முகம் பளபளப்பாகத் தோன்றினாலும், அதை நிறுத்தி விட்டால் முகம் கருத்துப்போகத் துவங்கும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நம் சருமத்திற்கு ஏற்ற சன் கிரீம்களே எப்போதும் நல்லது.
பெண்கள் மெனோபாஸ் நேரத்தில் தோன்றும் மங்கு பிரச்னைக்கு தோல் மருத்துவர்களை அணுகி, மங்குவை ஃபீல்ஸ் செய்யலாம். முடிந்தவரை சன் கிரீன், ஸ்கார்ஃப் போன்றவற்றால் முகம், கை, கால்களை மறைத்து பாதுகாக்கலாம்.மங்குவை பார்லரில் நீக்குவதற்கும் வழி முறைகள் உள்ளது. ஆனால் நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி நீக்குவது என்பதை இந்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.
வீட்டிலே நீக்கும் முறைகள்
* இரண்டு சிறிய வெங்காயத்தை தோலை நீக்கி அதில் இருக்கும் நீர்ச் சத்தை எடுத்து சிறிய பஞ்சை நனைத்து மங்கு இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.
* எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் ஆசிட் நிறைந்திருப்பதால் அதன் நீர்ச்சத்தையும் பஞ்சு மூலமாக மங்கு இருக்கும் பகுதிகளில் வைக்கலாம். லெமனில் ப்ளீசிங் கன்டன்ட் நிறைந்திருப்பதால் கண்களை பாதுகாப்பாக மறைத்துவிட்டு பிறகு முகம் முழுவதும் தடவி முயற்சிக்கவும்.
* கலப்படமற்ற தரமான மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சளை பசும்பாலோடு இணைத்து முகத்திற்கு பேக் போடலாம். பேக்கினை 20 நிமிடங்கள் கழித்து கழுவுதல் வேண்டும். தொடர்ந்து இதைச் செய்யும்போது முகத்தில் இருக்கும் மங்கு கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறத் துவங்கும்.
* கற்றாழை ஜெல்லை தோல் நீக்கி, நன்றாக சுத்தம் செய்த பிறகு அந்த ஜெல்லை முகத்தில் தடவி, அதன் மேல் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால் முகத்தில் இருக்கும் ஜெல் கீழே நழுவாமல் திக்காக முகத்தைப் பிடித்துக்கொள்ளும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும்.
* அதேபோல் ஓட்ஸ் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் தன்மை அதில் இயல்பாக உள்ளது. 2 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் எடுத்து அது நனையும் அளவிற்கு பசும் பால் மற்றும் தேன் சேர்த்து அந்தக் கலவையினை பேஸ்டாக்கி முகத்தில் பேக்காகப் போட்டு 10 நிமிடங்கள் வைத்திருந்து, முகத்தை சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் விரல்களால் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து செய்யும்போது மங்கு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கும்.
* மங்கு பாதிப்பு உள்ளவர்கள் மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒரு வழி முறையைக் கையாள வேண்டும். தடிமனான சருமம் உள்ளவர்கள் ஓட்ஸ் பயன்படுத்தலாம். மென்மையான சருமத்தைக் கொண்டவர்கள் எலுமிச்சை, மஞ்சள், கற்றாழை இவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம். துவக்க நிலை பாதிப்பில் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை தைரியமாகப் பின்பற்றலாம். நீண்டகாலமாக நமது சருமத்தில் இருக்கும் மங்குவை போக்க முயற்சிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது மறையும்.
* எந்த மாற்றமும் ஒரே நாளில் வந்துவிடாது. அதற்கு பொறுமை மிகமிக அவசியம். எந்தச் செயலையும் தொடர்ந்து செய்யும்போதுதான் அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். எனவே சோர்வின்றி ஏதாவது ஒரு முறையினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.அழகு நிலையங்களில் மங்குவை நீக்குவதற்கு என ஃபேஷியல் தனியாக உள்ளது. அழகுக் கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த ஃபேஷியலை தொடர்ந்து மேற்கொள்ளும்போது நூறு சதவிகிதம் மங்கும் கட்டாயம் மறைந்து முகம் பொலிவு பெறும்.
Average Rating