வடக்கு கிழக்கு மக்களை பிரபாகரன் கும்பலின் கொடூரப்பிடியிலிருந்து மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் -‘ரிஎம்விபி”யின் இராணுவத்தளபதி மார்க்கன்
வன்னிப்புலிகளிடமிருந்த போது ஆண்டான்குள (வாகரை) பிரதேச இராணுவப் பொறுப்பாளராக இருந்து தற்போது கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) இராணுவத்தளபதியாக இருக்கும் மார்க்கன் எனும் ஐ..மார்க்கன் அவர்கள் முதன்முறையாக ஊடகத்திற்கு அதிலும் நிதர்சனம்.நெற் இணைத்தளத்திற்காக வழங்கிய சிறுபேட்டி இது….
நிதர்சனம்.நெற் :- ரிஎம்விபியின் இராணுவத்தளபதி என்ற ரீதியில் வன்னிப்புலிகளுடன் மோதக்கூடிய அளவில் உங்கள் அமைப்பின் (ரிஎம்விபியின்) இராணுவ பலம் அமைந்து உள்ளதா?
மார்க்கன் :- தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ‘ரிஎம்விபி”யானது அரசியல், நிதி, இராணுவம், புலனாய்வு எனும் நான்கு கட்டமைப்புக்களைக் கொண்டதாக எமது அமைப்பு நிர்வகிக்கப்பட்டுள்ளது. புpரபாகரனின் அணியினரை எதிர்கொள்ளக் கூடிய வகையில் எமது இராணுவம் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் பலம் வளர்க்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பிரபாகும்பலின் எந்தவிதமான தாக்குதலையும் எதிர்த்துப் போரிடும் வலிமைமிக்கவர்களாக எமது ‘ரிஎம்விபி” அமைப்பின் இராணுவ மற்றும் புலனாய்வுப்பிரிவு விளங்குகின்றது.
நிதர்சனம்.நெற் :- யுத்தநிறுத்தத்தை தன்னிச்சையாக அறிவித்த ‘ரிஎம்விபி”யானது தற்போது யுத்தநிறுத்தத்தை கைவிட்டதன் காரணமென்ன?
மார்க்கன் :- இலங்கைஅரசுக்கம் பிரபாஅணியினருக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தநிறுத்தம் பேச்சுவார்த்தை போன்ற சம்பவங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை என்று எமக்கு தெரிந்திருந்த போதிலும் மக்களின் நன்மைகருதி நாமும் ஒத்துழைக்க வேண்டும் எனும் நோக்கிலும் வடகிழக்கு மக்களின் எதிர்காலத்தை முன்னிட்டுமே நாமும் யுத்தநிறுத்தத்தை தன்னிச்சையாக அறிவித்திருந்தோம். ஆயினும் பிரபாஅணியினர் தமது வழமையான பாணியில் எமது கந்தாக்காடு பகுதியில் அமைந்திருந்த முகாமைத் தாக்கியழிக்க முனைந்ததுடன் எமது ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போன்ற அப்பாவிகளைக் கொன்றொழித்துக் கொண்டிருப்பதினாலேயே நாம் யுத்தநிறுத்தத்தை கைவிட்டு பிரபாஅணியினருடன் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே நாம் யுத்தநிறுத்தத்தை கைவிட்டதற்கு காரணம் பிரபாகுழுவினரே தவிர நாம் அல்ல.
நிதர்சனம்.நெற் :- உங்களது போராட்டம் கிழக்கு மாகாணத்தை மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதா?
மார்க்கன் :- எமது போராட்டமானது கிழக்கில் உள்ள மக்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் பிரபாகரனினதும் அவரது குழுவினரதும் அடக்குமுறையில் இருந்து விடுவிப்பதற்கான போராட்டமாகும். கிழக்கு எனும் பிரதேசவாதத்திற்குள் எமது போராட்டத்தை மட்டுப்படுத்தி எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்கள் பிரபாகுழுவினர் தான்.
நிதர்சனம்.நெற் :- அண்மையில் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிழக்கு மாகாணத்தைச் சோந்த முக்கியஸ்தர் ரமணன் என்பவர் கொல்லப்பட்து குறித்து…..
மார்க்கன் :- மேற்படி ரமணன் பிரபாஅணியின் கிழக்குமாகாண இராணுவபுலனாய்வுப் பொறுப்பாளாராக இருந்த போது பலஅப்பாவிப் பொதுமக்களையும் மாற்று அமைப்புப் போராளிகளையும் கொன்று குவித்தவர். பின்னர் எமதுதலைவர் கருணாஅம்மான் கிழக்குமக்களின் உரிமை கேட்டுப் போராடி பிரபாஅணியில் இருந்து பிரிந்தபோது எமது ஆதரவாளராகக் காட்டிக் கொண்;டு எமது கிழக்கு மாகாணப் போராளிகளைக் காட்டிக் கொடுத்ததுடன் சமாதானமென வெள்ளைக் கொடியுடன் வந்து எமது போராளிகளைக் கொன்று குவித்தவர்களுக்கு தலைமை தாங்கி வந்தவர்களில் ஒருவர். அதுமட்டுமல்ல அன்றைய சம்பவத்தில் எமது பல பெண்போராளிகளை மானபங்பப்படுத்தியவர்களின் காரணகர்த்தாக்களில் ஒருவர். இதன் காரணத்தினாலேயே எமது ‘ரிஎம்விபி”யின் விசேட படையணியால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
நிதர்சனம்.நெற் :- உங்களது அதாவது ‘ரிஎம்விபி”யின் எதிர்கால நடவடிக்கை எப்படி அமையும்?
மார்க்கன் :- வடகிழக்கு மக்கள் பிரபாகுழுவின் கொடூரமான செயற்பாட்டுக்குள் தள்ளப்பட்டு சுதந்திரத்தை மட்டுமல்ல நிம்மதியையும் இழந்து சொல்லொனாத் துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வடகிழக்கு மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் மட்டுமல்ல சந்தோசமாகவும் வாழக்கூடிய வகையில் நிரந்தரத் தீர்வொன்றை எடுத்துக் கொடுக்கும் வகையில் எமது போராட்டம் அமையும்.
நிதர்சனம்.நெற் :- வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு நிதர்சனம்.நெற் இணையத்தளத்தின் ஊடாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
மார்க்கன் :- வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே எமது தலைவர் கருணாஅம்மான் தலைமையில் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பை ஆரம்பித்து போராட்டத்தை நடாத்தி வருகின்றோம். எமது அமைப்புக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்தவகையில் உதவி செய்து எமது போராட்டத்தில் பார்வையாளராக இராமல் பங்காளிகளாக மாறி எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
Average Rating