மீண்டும் அழ விரும்பவில்லை! : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்!! (மகளிர் பக்கம்)
இந்தியாவில் இருக்கும் மதங்களில் ஒன்று கிரிக்கெட். அந்தளவு கொண்டாடப்படும் இந்த விளையாட்டில், ஆண்கள் கிரிக்கெட் வீரர்களை தெரியும் அளவிற்கு பெண்கள் அணியினர் பெயர் அவ்வளவு பரிட்சயம் இல்லை. இதற்கே இந்த நிலை என்றால் மற்ற விளையாட்டில் இருக்கும் வீராங்கனைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இருந்தாலும் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் நடக்கும் போது சிலரது பெயர்கள் அடிபடும். அதுவும் குறுகிய நாட்களுக்கே. அப்படித்தான் மகளிர் மல்யுத்த வீராங்கனைகளான கீதா, ரிது, பபிதா போகட், சாக்ஷி மாலிக். ஆனால், நம் கவனத்திற்கு மற்றொரு பெயரும் இருக்கிறது. அவர் தங்கப் பதக்கங்களை வென்றதால் இல்லை. பெண்கள் பெரும்பாலும் பலவீனமாக கருதப்படும் அனைத்து பிரச்சினைகளையும் சந்தித்து அதில் போராடி மீண்டும் தன்னை நிரூபித்திருக்கும் மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்தான் அந்த நபர்.
2003 ஆம் ஆண்டில் லண்டன் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கவுர், நீண்ட நாட்களாக மல்யுத்தத்திலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் தேசிய அளவிலும், உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்று அதில் வெற்றி வாகையும் சூடியுள்ளார். அந்த வகையில் 72 கிலோ பிரிவில் தேசிய சாம்பியனான கிரனை 5-1 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கம் பெற்றதோடு ரூ.10,00,000 தட்டி சென்றிருக்கிறார். ஏன் மீண்டும் மல்யுத்தத்திற்கு வந்தார் என்று கூறும் கவுரின் கதை சற்று மனதைக் கலங்கடிக்க செய்கிறது.“இப்போட்டியில் பணம் இல்லாவிட்டாலும் நான் வந்திருப்பேன்” என்று கூறும் கவுர், “மல்யுத்தம் மட்டுமே செய்ய விரும்புகிறேன். நீண்ட நாட்களாக இதை இழந்திருக்கிறேன்” என்கிறார்.
35 வயதான கவுர் 7ஆண்டுகள் கழித்து மீண்டும் விளையாட்டிற்கு வந்திருக்கிறார். மல்யுத்தத்திலிருந்து விலகி இருந்த நாட்களை அவ்வளவு எளிதாக அவரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஊக்க மருந்து அருந்தி விளையாடினார் என்ற குற்றச்சாட்டிற்காக ஒன்பது மாதக் காலம் National Anti- Doping Agency யால் தடை செய்யப்பட்டார். ஆனால் அந்த குற்றச்சாட்டுத் தவறானது என்று பின்பு தெரிய வந்தது.2013 ஆம் ஆண்டு, போதைக்கு அடிமையான பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபில் ஒருவரை மணம் முடித்தார் கவுர். 2 ஆண்டுகளுக்குப் பின் அவரது கணவர் சந்தீப் சிங் விவாகரத்துக் கோரியதோடு, ‘உன் வீட்டுக்கு செல்’ என்றும் கட்டளையிட்டுள்ளார்.
“நான் பயிற்சி எடுக்கும் போது என் கணவர் அடிக்க வந்தார். குறிப்பாக சிறுவர்களோடு இருக்கும் போது” என்று கண்களில் நீர் தளும்பியபடி கூறும் கவுர், “அவர் எனக்கு உணவு கொடுக்கவில்லை. அந்நேரங்களில் இறந்த மனிதனை போல் இருந்தேன். எங்களுக்கு மகள் பிறந்த போது, என் மாமியார் மற்றும் அவர்களது உறவினர்கள், எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்க வேண்டுமென்று விரும்பினார். இதை வலியுறுத்தி மறுபடியும் அவர்கள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேறும் படி கட்டாயப்படுத்தினர். என் கணவர் நான் வேண்டுமா, மகள் வேண்டுமா என்று கேட்டபோது எனக்கு மகள் தான் வேண்டுமென்றேன்” என்று தனது வேதனைகளை பகிர்ந்தார்.
இதன் பின்னர் தரண் தாரான் மாவட்டத்திலுள்ள மொஹன்புர் கிராமத்தில் வாழ்ந்து வரும் தனது தாயிடம் குழந்தையோடு தஞ்சம் அடைகிறார் கவுர். அங்கிருந்து போலீஸ் வேலைக் காரணமாக ஜலந்தருக்கு மாறினார். இது போன்ற துயரங்களினூடே 2014 ஆம் ஆண்டில் தனது கணவர் விவாகரத்து கோரி மனு கொடுத்த போது, மற்றொரு துயர சம்பவம் கவுர் வாழ்வை பற்றிக் கொள்கிறது.“விசாரணை நடைபெறும் போதெல்லாம் அமிர்தசரசுக்கு பயணம் செய்ய வேண்டும். அதற்காக நான் என் மகளை எனது அம்மாவுடன் விட்டுவிட்டேன், ஏனெனில் நான் எங்கும் அவளுடன் பயணம் செய்ய முடியாது” என்கிறார் கவுர்.ஐந்து வயதாகும் மகளோடு, வழக்கும் வளர்கிறது, இதில் பணமும் இன்னொரு தடங்களாகிவிடுகிறது.
இந்த சோதனைகளைக் கடக்க 2018 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் மல்யுத்தத்தில் தனது பயணத்தைத் துவங்க ஜலந்தரில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொள்கிறார் கவுர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது முதல் போட்டியான Senior National Championships-ல் வெண்கல பதக்கம் வென்றதோடு முன்றாம் இடம் பிடித்தார்.
எனினும், சோர்வடையாமல் முயற்சி செய்வதை தொடர்ந்தார்.சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அனைத்து இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டியில், கவுர் 72 கிலோ மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதோடு, பஞ்சாபில் நடைபெற்ற உள்ளூர் போட்டியிலும் வெற்றி கண்டுள்ளார்.“நல்லது மீண்டும் நடந்தது. மல்யுத்தம் எல்லாவற்றிலும் எனக்கு கை கொடுத்துள்ளது. எனக்கு உதவும் இதில் மறுபடியும் ஒருமுறை வீழ்ந்தேன். இப்போது இழப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. நான் எதையும் தற்போது செய்வதற்குத் தடையேதுமில்லை” எனத் துணிந்து தனது வாழ்க்கை பயணத்தைத் தொடர்கிறார் கவுர்.கவுருக்கு மல்யுத்தம் அறிமுகமானது ஓர் விபத்து, இது குறித்து கூறுகையில், “குண்டெரிதல் போட்டியில் 44 மீட்டர் தொலைவில் வீசி பஞ்சாப் போலீஸில் சேர்ந்தேன். பயிற்சியில் இருந்த போது ஓர் உயர் அதிகாரி சோனிக்கா கல்லிரமன் என்ற பெண்ணோடு மல்யுத்த போட்டியில் பங்கேற்க சொன்னார். அவளை 39 வினாடிகளில் சாய்த்தேன்” என்கிறார்.
மற்றவர்கள் மாலையில் ஓய்வெடுத்த வேலையில், கவுர் பயிற்சி மேற்கொண்டார். ஆனால், அந்த நாட்களில் வேலையை விட மல்யுத்தம் மூலம் தான் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார்.“என் தந்தைக்கு சிறுநீரகங்கள் பிரச்சினை ஏற்பட்டது. அதனோடு வயிற்றுப்போக்காலும் அவதிப்பட்டார். அப்போது எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.2000 செலவாகும். முதன் முறை ஒரு போட்டியில் ரூ. 13,000 வென்றேன். அதன் மூலம் மருத்துவ செலவுகளை பார்த்தோம். 2001 ஆம் ஆண்டு அப்பா இறந்த பிறகு, மல்யுத்தம் மூலம் என் குடும்பத்திற்கு உதவுவதற்கான ஒரு வழி கிடைத்தது” என்று கூறும் கவுர் மல்யுத்தத்தோடு குண்டெரிதலிலும் பயிற்சி பெற்றார். பஞ்சாப் போலீஸ் டிரெயலில் 56 மீட்டர் தொலைவில் வீசி சாதனையும் படைத்தார். தேசிய சாதனை 65.25 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், மல்யுத்தத்திற்கு ரூ.10,00,000 முதல் பரிசு என நிர்ணயிக்கப்பட்டது. அதில் மீண்டும் சோனிக்கா கல்லிரமனை வீழ்த்தினேன்” என்று பெருமை கொள்ளும் கவுர் 11 ஆண்டுகள் மல்யுத்த போட்டி யின் மூலம் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.“நான் சர்வதேச அளவில் 33 முறை இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறேன். அதில் 11 போட்டிகளில் பதக்கங்களை வென்றேன். ஐந்து ஆசிய சாம்பியன்களில், நான்காவது இடத்தைப் பிடித்தேன். அந்த நாட்களில், பெண்கள் மல்யுத்தத்தில் அதிக விருப்பம் காட்டப்படவில்லை” என்று கூறும் கவுர் தற்போது எனக்கான வாய்ப்பு வழங்கும் போது மீண்டும் என்னை நிரூபித்து வெற்றி பெற முடியும் என்கிறார்.
இதற்காக லக்னோ தேசிய விளையாட்டு முகாமில் ஆறு மாதம் பயிற்சி எடுக்க வாய்ப்புக் கோரும் கவுர், “கோண்டாவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாக்ஷி, வினேஷ், லலிதா போன்ற மற்ற சகாக்களைப் பார்த்த போது என்னை அறியாமலேயே கண்கள் கலங்கின. அவர்களுடன் மீண்டும் நான் இருப்பேன் என்ற மன தைரியத்தை வளர்த்துக் கொண்டேன்” என்கிறார் கவுர். தனது வாழ்வில் ஏற்பட்ட துயரங்கள், அவமானங்கள் என எல்லாவற்றையும் அனுபவங்களாக எடுத்துக் கொண்டு தனது மன வலிமையால் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் கவுர், “நான் மீண்டும் அழ விரும்பவில்லை. மல்யுத்த மேட்டில் புரள்வதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனிமேல் நான் பயப்பட மாட்டேன்” என்கிறார்.
Average Rating