ஈரானின் இராஜதந்திர போர் 2019 !! (கட்டுரை)
ஈரானுடனான உலக நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்ட ஓராண்டுக்குப் பின்னர் ஈரான் அதன் யுரேனியத்தை தொடர்ச்சியாக வைத்திருத்தல் என்று அறிவித்ததன் மூலம், மேற்குலகத்துக்கு உறுதியான மற்றும் தெளிவான செய்தியை ஈரான் சொல்லியிருக்கிறது.
கடந்தாண்டு, ஐரோப்பிய முக்கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் புதுப்பிக்க முற்பட்ட வேளையில், ஐரோப்பிய நாடுகள் ஈரானின் நன்னோக்கத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் எந்த ஒரு கொள்கை நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைக்கு ஏற்றதாகவே, ஈரானிய ஏவுகளை திட்டங்களைக் குறைக்க அல்லது ஈரானின் பிராந்திய வல்லரசு தன்மையை தகர்ப்பதற்கான மூலோபாய நகர்வுகளையே மேற்கொண்டது என்ற அடிப்படையில், குறித்த ஈரானின் மேற்குறித்த அறிவிப்பானது, ஈரான் மேற்கத்தேய அரசியல் நகர்வுகளுக்கு எதிராக ஒரு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்திருக்கிறது என்பதையே காட்டுகின்றது.
மேலும், மேற்கத்தேய நாடுகள் அதன் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட கடமைகளை பூர்த்தி செய்யாவிட்டால், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் 26 மற்றும் 36 பிரிவுகளில் கூறப்பட்டுள்ளபடி, ஈரானுக்கு அதன் ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாகவோ அல்லது முழுமையாகவோ மீறுவதற்கு உரிமை உண்டு. எனவே, ஈரான் சமீபத்திய முடிவு சட்ட மற்றும் மூலோபாய சொற்களிலும் பகுப்பாய்வு செய்யப்படவேண்டியது அவசியமானது.
இருப்பினும், ஈரானின் தீர்மானத்தின் மூலோபாய அம்சங்கள், அதன் சட்ட அம்சங்களை விட முக்கியமானது என்று தெரிகிறது. இந்த முடிவு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் குறித்த முடிவானது ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முக்கூட்டு நாடுகள் ஈரான்-எதிர்ப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்தவும், மீண்டும் ஈரானுடனான பேச்சுவார்த்தை மேசைக்கு குறித்த நாடுகளை திசைதிருப்பும் ஒரு மூலமாகவே இத்தீர்மானம் பார்க்கப்படுகின்றது.
ஈரானுக்கு எதிரான மேற்கத்தேய நகர்வுகள், ஜனாதிபதி ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றமையுடன் தொடங்கிய போதிலும், மைக் பொம்பயோ, ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளராக பொறுப்பேற்றதும் அதிகரிக்க தொடங்கியிருந்தது. அதற்கு பொம்பயோ, ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் உட்பட பல குடியரசுக் கட்சி வெள்ளை மாளிகை கொள்கைவகுப்பாளர்கள் ஈரானுக்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்கள் என்பது ஒரு புறமிருக்க, ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயக கட்சி மேற்கைரோப்பிய நாடுகளுடன் இணைந்து ஈரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிவதே குடியரசு கட்சியின் வெளிவிவகார கொள்கை மற்றும் அரசியலுக்கு உகந்தது என அக்கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் நினைத்தமையே ஆகும்.
எவ்வாறிருந்த போதிலும், ஐக்கிய அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக உடன்படிக்கையிலுருந்து வெளியேறியிருந்த போதிலும், அந்த நேரத்தில், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகியோர் மேற்குத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்ததுடன், குறிப்பாக, மேற்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் ஈரானுடன் உடன்படிக்கையில் இருக்கும் எனவும், அதன் காரணமாக ஈரானும் தொடர்ச்சியாக உடன்படிக்கையை பேணவேண்டும் எனவும் அவர்கள் வாதிட்டிருந்தனர்.
இந்த வாதம், ஈரான் தொடர்ச்சியாக அணுசக்தி உற்பத்தியை குறைத்தல்/இல்லாமல் செய்தல், உடன்படிக்கையில் ஈரானின் ஏவுகணை உற்பத்தி தொடர்பாக மேலதிக இணைப்புகளை ஏற்படுத்த முயன்றமை ஆகியன, ஈரானின் வல்லரசு தன்மையை தனது பிராந்தியத்திலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் செய்யும் சதி எனவே ஈரான் பார்க்கின்றது என்பதுடன், அவ்வாறு ஈரான் பார்ப்பதிலும் தவறேதும் இல்லை. அதற்கு காரணம், மறுபுறத்தில் பிரித்தானியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியாக இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா ஆகியவற்றுக்கு தொடர்ச்சியாக, ஈரானின் எதிர்ப்பை மீறியும் ஏவுகணை மற்றும் கனரக ஆயுதங்களை அண்மைக்காலத்தில் அதிகப்படியாக கையளித்தமையே ஆகும்.
இதற்கு மேலதிகமாகவே ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஈரானுடனான மாற்று வர்த்தக நுட்பத்தை தொடங்குவதில் வேணுமென்றே தாமதப்படுத்துவதை ஈரான் தனது இருப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் உடன்படிக்கைக்கு எதிரான ஐரோப்பாவின் சதிவேலையாக பார்க்கின்றது. இவ்வற்றின் மத்தியிலேயே குறித்த அறிவிப்பு ஈரானால் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பொழுது, யுரேனியத்தை தொடர்ச்சியாக பேணுதல் என்ற ஈரான் முடிவானது ஈரானுக்கு எதிரான “அமெரிக்க-ஐரோப்பிய” கூட்டுத் திட்டத்தை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றே கருதவேண்டும். ஈரானின் புதிய அணுசக்தி மூலோபாயத்தால் பிரெஞ்சு அரசாங்கம் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்ததாலும், அத்தகைய விரைவான எதிர்வினைக்கு, பிரெஞ்சு ஜனாதிபதி மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஆகிய இருவரும் அமெரிக்காவின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான பாத்திரங்களைக் கொண்டிருந்தனர் என்ற அடிப்படையில், குறித்த இக்கட்டான நிலையை எவ்வாறாகவேனும் அரசியல் மற்றும் பிரெஞ்சின் வெளிவிவகார கொள்கை முரண்பாடு அடிப்படையில் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, ஐரோப்பிய நாடுகளின் ஈரான் தொடர்பான அடுத்த அரசியல் நகர்வு மிகவும் முக்கியம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating