கர்ப்ப கால மன அழுத்தம்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 5 Second

வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாதது. அது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மன அழுத்தம் கொஞ்சம் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது. கர்ப்ப கால மன அழுத்தத்துக்கு பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் காரணமாகலாம். ஏற்கெனவே மன அழுத்தம் உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் அது தொடர வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்ப கால மன அழுத்தம் என்பது தாய் மற்றும் சேயினுடைய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதால் அது அலட்சியப்படுத்தப்படக் கூடாது. கர்ப்ப காலத்தில் மனநிலையில் அசாதாரண மாற்றங்களை இருக்கிற உணர்கிற பெண்கள் அது பற்றி மருத்துவரிடம் பேசி முறையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தம் மிகக் குறைவான அளவில் இருப்பது தெரிந்தால் மருத்துவர் வெறும் கவுன்சிலிங் மூலமாகவே அதை குணப்படுத்துவார்.

அந்த நிலையில் மருந்துகள் தேவைப்படாது. ஆனால் மன அழுத்தம் தீவிரமாகி கவுன்சிலிங் உதவாத பட்சத்தில், மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைப்பார். ஏற்கெனவே மன அழுத்தம் இருந்து அதற்கு மருந்துகள் எடுத்துக்கொண்டு கர்ப்பமானதும் அதை நிறுத்தி இருந்தாலும் மன அழுத்தம் மீண்டும் தாக்கலாம். கர்ப்ப காலத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்வதில் பெண்களுக்கு தயக்கம் இருப்பது சகஜமே. அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்று அவர்கள் பயப்படலாம்

அதே நேரம் மன அழுத்தத்துக்கு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஆபத்தானதே. மன அழுத்தத்தைக் கண்டறிந்து சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளாத போது பிரசவத்துக்குப் பிறகு தாயின் மனநிலை மேலும் மோசமாகும். குழந்தையுடன் அன்பைப் பரிமாறிக் கொள்வதில் இது சிக்கலை ஏற்படுத்தும். தாயின் தூக்கம் பாதிக்கப்படும். சரியாக சாப்பிட முடியாமல் போகும். அதனால் உடல்
ஆரோக்கியமும் சேர்த்து பாதிக்கப்படும்.

எனவே, கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் கட்டுப்படுத்த முடியாமல் போனால் மருத்துவர் கருவிலுள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பான மருந்துகளைப் பரிந்துரைப்பார். மன அழுத்தத்தின் தீவிரத்தைப் பொறுத்து கவுன்சிலிங்கை அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்ததும் கர்ப்பிணியின் மனநிலையில் நல்ல மாற்றம் தெரியும்.

அதன் பிறகு சில விஷயங்களில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர் சொன்ன நாட்களில் கவுன்சிலிங் போக வேண்டும் அல்லது அவர் பரிந்துரைத்த மருந்துகளை குறிப்பிட்ட நாட்களுக்கு தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் போதுமான அளவு தூங்க வேண்டும். மன அழுத்தம் காரணமாக தூக்கம்
பாதிக்கப்படும்.

அதற்காக தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது மன அழுத்த மருந்துகளே தூக்கமின்மையையும் சரியாக்கிவிடும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது முக்கியம். உடலை வருத்திக் கொள்ளாமல் மிதமான நடை அல்லது ஏதேனும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். மது அருந்துவதோ, மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை எடுத்துக்கொள்வதோ கூடாது.

கர்ப்பிணிகள் தங்கள் சக்திக்கு உட்பட்ட விஷயங்களை மட்டுமே செய்தால் போதும் என்கிற மனநிலைக்குப் பழக வேண்டும்.முடியாத விஷயங்களைச் செய்ய முயற்சித்து மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம். வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கான முடிவுகளைக் கொஞ்சகாலம் தள்ளிப் போடலாம். மனநிலை சரியான பிறகு அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் இருந்தால் அவற்றுக்கு முறையான சிகிச்சைகளை மேற்கொள்வதும் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

மன அழுத்தம் முற்றிலும் சரியாகிவிட்டதாக உணரும்போது கவுன்சலிங் மற்றும் மருந்துகளை நிறுத்திவிடலாம் என்று சிலர் நினைக்கலாம். அது கூடாது. மனநிலையில் மாற்றம் வந்ததாக உணர்ந்த பிறகும் குறைந்தது 6 மாதங்களுக்காவது சிகிச்சைகளைத் தொடர வேண்டியிருக்கும். இதுகுறித்து மருத்துவரிடம் பேச வேண்டியது முக்கியம். மருத்துவரிடம் கேட்காமல் தாமாகவே மருந்துகளை நிறுத்துவது ஆபத்தான முடிவு.

மீண்டும் மன அழுத்தம் வராமல் தடுக்கும் வழிகள்

* மருந்துகளைப் பாதியில் நிறுத்தக்கூடாது.

* நான்தான் நன்றாக இருக்கிறேனே… இனியும் எனக்கு எதற்கு மருந்துகள் என்கிற நினைப்பு தவறானது. மனநல மருந்துகள் பிரச்சனை சரியான பிறகும் குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. சிலருக்கு வாழ்நாள் முழுவதும்கூட மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

* இன்னும் சிலருக்கு மருந்துகளை நிறுத்திய பிறகு குறிப்பிட்ட இடைவெளிகளில் கவுன்சிலிங் தேவைப்படும். அதையும் சிகிச்சையாகக் கருத்தில்கொண்டு தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* உணவு, உறக்கம் மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

* முடிந்தவரையில் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* புதிய மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டலாம்.

* எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பாசிட்டிவான சிந்தனை. அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டால். எந்தக் காலத்திலும் மன அழுத்தம் வராமல் தவிர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்!! (மருத்துவம்)
Next post பெண்களும் பவுன்சர்களாகலாம்! (மகளிர் பக்கம்)