இந்தியாவைப் போல கூட்டாட்சி முறையே பிரச்சினைக்கு தீர்வு: இலங்கை தமிழர் தலைவர் ஆனந்தசங்கரி
இந்தியாவைப் போல கூட்டாட்சி முறை அளிப்பதே இலங்கைப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று இலங்கை தமிழர் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், கடந்த வாரம் தில்லி வந்து சென்ற நிலையில், புலிகளைக் கடுமையாக எதிர்க்கும் தமிழ் அமைப்புக்களான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பின் (பிளாட்) தலைவர் டி. சித்தார்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் டி. ஸ்ரீதரன் ஆகியோர் தில்லி வந்துள்ளனர்.
திங்கள்கிழமை இரவு தில்லி வந்த அவர்கள், “அமைதி மற்றும் மோதல்கள் ஆய்வு அமைப்பு’ (ஐபிசிஎஸ்) செவ்வாய்க்கிழமை நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டனர். அதில் பேசுகையில் மேற்கண்ட கருத்துக்களை அவர்கள் வெளியிட்டனர்.
இதுதொடர்பாக ஆனந்தசங்கரி கூறியது:
இலங்கை இரண்டாகப் பிளவுபட இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது. பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரே மாற்று வழி, இந்தியாவில் உள்ளதைப் போல கூட்டாட்சி முறையில் தீர்வு காண்பதுதான்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக, கூட்டாட்சி முறைக்கு யாரும் தயாராக இல்லை. ஆனால், இதற்கு முதல் முறையாக இலங்கையில் உள்ள இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பெரும் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அமைதித் தீர்வு வாசல் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. அதை நாம்தான் வரவேற்க வேண்டும்.
ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது. தனி நாடு கிடைக்காது. ஆயிரக்கணக்கானோரை இனியும் பலிகொடுக்கக் கூடாது. கூட்டாட்சி முறைதான் சரியான தீர்வாக இருக்கும் என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஜனதா விமுக்தி பெரமுனா என்ற சிங்கள கடும்போக்காளர் கட்சியுடன் அதிபர் மஹிந்தா ராஜபக்ஷய தேர்தலுக்கு முன்பு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி, கூட்டாட்சி முறை ஏற்படுத்த முடியாது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி அவர் செயல்படுவதற்கான நேரம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இந்திய கூட்டாட்சி முறை என்று சொல்லாமல், அதிக அதிகாரம் என்று அவர் பேசி வருகிறார்.
புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதிகம்: தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாக வெளி உலகுக்கு புலிகள் பறைசாற்றிக் கொள்கின்றனர். ஆனால், 1983-ல் இருந்த உரிமைகள் கூட இப்போது இல்லை. புலிகளைப் பற்றி கொழும்பில் கூட எதிர்த்துப் பேச முடியாது. சிங்களர்களால் கொல்லப்பட்டவர்களைவிட விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.
செஞ்சோலையில் அனாதைச் சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்டதாக புலிகள் பரப்பும் செய்தி பொய் பிரசாரம். அங்கு, 18-19 வயதுக்கு உள்பட்ட பெண்களை கட்டாயமாக இழுத்து வந்து புலிகள் ராணுவப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், தமிழகத்தில் உண்மை நிலவரம் புரியாமல் கண்டனப் பேரணி நடத்துகின்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, எங்களைத் தனியாக விட்டுவிடுங்கள் என்பதுதான்.
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் முறையைக் காட்டிலும், இந்தியாவில் உள்ளதைப் போல கூட்டாட்சி முறையைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அதன் மூலம், தமிழ்நாட்டுத் தலைவர்களின் வாயை அடைக்க முடியும்.
தற்போது கருணாநிதி முதலமைச்சராக இருக்கிறார். தமிழகத்தைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அந்த முறையிலான கூட்டாட்சி முறையை ஆதரிக்கிறேன் என்று அவர் சொன்னால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரும், ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவருமான டி.ஆர்.கார்த்திகேயன், இந்திய -இலங்கை உடன்பாடு முழுமையாக அமல்படுத்தப்படாதது குறித்து கவலை வெளியிட்டார். அதை அமல்படுத்தாமல் விட்டதன் மூலம், ராஜீவ் காந்தியை இலங்கை ஏமாற்றிவிட்டது என்றார் அவர்.