கறை !! (கட்டுரை)

Read Time:20 Minute, 9 Second

நாட்டில் எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சமும் பதற்றமும், மக்கள் மனதை ஆட்கொண்டுள்ளது.

இன்னும் என்ன சம்பவம் நடந்து, அதன் மூலமாகவும், மறைமுகமாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணம் (இமேஜ்), மேலும் சிதைவடைந்து விடுமோ என்ற கவலை, இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்த இலங்கைத் தேசத்தினதும் இயல்புநிலை, ‘ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள் முடங்கும் ஓர் அப்பாவியைப் போல’, முடங்கிக் கிடக்கின்றது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, கொச்சிக்கடை, தெமட்டகொட, கட்டுவான, மட்டக்களப்பு, தெஹிவளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், சந்தேகத்துக்குரிய தற்கொலைதாரிகள், கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்ட தாக்குதல்கள், அங்கு மீட்கப்பட்ட வெடிபொருள்கள், தாக்குதலுக்கான மூலப்பொருள்கள் என்பன, இன்னும் நிலைமைகளைச் சிக்கலாக்கி இருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் முன்னைய காலங்களை விட, பக்குவமான அடிப்படையில் அரசாங்கமும் குறிப்பாக, முப்படையினரும் எடுத்த தீவிர தேடுதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முக்கியமானவை; மெச்சத்தக்கவை.

அத்துடன், இந்த நாட்டில் வாழும் கிறிஸ்தவ, கத்தோலிக்க மக்கள் இவ்வாறான ஒரு சூழலில், முஸ்லிம்களை அச்சத்தோடு பார்க்கின்ற போதிலும் கூட, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கிறிஸ்தவ மக்கள் வெளிப்படுத்தி வருகின்ற பொறுமை, முஸ்லிம் மக்களால் மிகவும் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.

அதேபோல், இலங்கையில் வாழ்கின்ற 20 இலட்சம் முஸ்லிம்களில் தீவிர மதக் கொள்கைகளில் ஊறிய ஒரு சிறு குழுவினரைத் தவிர, மற்றெல்லா முஸ்லிம் மக்களும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை உள்ளத்தாலும் செயலாலும் வெறுக்கின்றனர்.

இவ்வாறான பேர்வழிகளின் செயற்பாடுகளால் ஏனைய இன, மதக் குழுமங்களைச் சேர்ந்த மக்கள், இஸ்லாத்தை ஒரு கொடூரமான, ஈவிரக்கமற்ற சமயமாகக் கருதி விடுவார்களோ என்ற கவலை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

எனவே, “இப்பயங்கரவாத நடவடிக்கையை, இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டலாக நோக்க வேண்டாம்” என்றே, இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் கோரி நிற்கின்றனர்.

கடந்த காலங்களில், சிங்கள இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்காக, பௌத்த மதத்தையோ, தமிழ் ஆயுதக் குழுக்களின் உயர்ப்பலி தாக்குதல்களுக்காக இந்து மதத்தையோ, நியூசிலாந்து மற்றும் முஸ்லிம்கள் மீது கிறிஸ்தவ பெயர்தாங்கிகள் மேற்கொண்ட தாக்குதல்களுக்காக கிறிஸ்தவ மதத்தையோ குறை காண முடியாது.

அதுபோலவே, தேசிய தௌஹீத் ஜமாத் சார்ந்தவர்கள் என நம்பப்படும், மத ரீதியாக அளவுக்கதிகமான, தீவிர சிந்தனைக்கு ஆட்பட்ட அதேநேரத்தில், பின்விளைவுகள் பற்றிச் சிந்திக்கத் தவறிய ஒரு கும்பலால் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்கொடுமைத் தாக்குதல்களுக்காக, இஸ்லாமிய மார்க்கத்தைத் தவறான கண்ணோட்டத்தில் நோக்க வேண்டாம் என்றும், சாதாரண முஸ்லிம்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாம் என்றுமே, முஸ்லிம்கள் வேண்டி நிற்பதாகச் சொல்ல முடியும். இதேகருத்தை, அரசியல் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளமை கவனிப்புக்குரியது.

ஆனால், இந்தத் தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள், இலங்கையில் உள்ள ஒரு மதம்சார் இயக்கத்தால் நடத்தப்பட்டிருந்தாலும் அதனை ஐ.எஸ் பொறுப்பேற்றிருந்தாலும், இவ்விவகாரத்தில் நிறையவே சந்தேகங்களும் மயக்கங்களும் இருக்கவே செய்கின்றன.

அதில் குறிப்பாக, இந்தக் குழுவினரை ஏதேனும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அரசியல் சக்திகள் தமது உள்நோக்கத்துக்காகப் பயன்படுத்தியிருக்கின்றனவா? என்ற வலுவலான சந்தேகங்கள் எழுகின்றன.

இலங்கையைப் பொறுத்தமட்டில், முஸ்லிம்கள் தரப்பில் இருந்து, ஒரு தாக்குதலை நடத்துதென்றால், விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அதைச் செய்திருக்க முடியும். அவ்வாறில்லாவிடின், கடும்போக்கு இனவாதச் சக்திகள் அளுத்கம, திகண, அம்பாறை ஆகிய இடங்களில், முஸ்லிம்களை இலக்குவைத்து, பேரழிவுகளை ஏற்படுத்திய வேளையில், மதஉணர்வு, பதில் தாக்குதலாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

ஆனால், ஓர் அமைதியான சூழலில், முன்பின் முரண்பாடு இல்லாத கிறிஸ்தவ மக்கள் மீது, இஸ்லாம் சொல்கின்ற சாந்தி, சமாதானம், கருணை என்பவற்றுக்கெல்லாம் முரணாக, கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை ‘மர்மங்கள்’ நிறைந்த விடயமாக நோக்கப்படுகின்றது.

அதுவும், புலனாய்வுத் தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமை அல்லது மந்தமான பாதுகாப்பு அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டமையும், தாக்குதல்களுக்குப் பின்னர், அரசியல் இலாபம் தேடும் சிலரின் கருத்துகளும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.

தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஐ.எஸ் தவிர, வேறு யாருக்கும் இதன்பின்னணியில் தொடர்பிருக்கின்றதா என்ற தெளிவின்மை, உயர்மட்டத்தினருக்கே ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.

எது எவ்வாறிருப்பினும், யாரோ கொலை செய்து விட்டு, அப்பாவி ஒருவரின் கைகளில் இரத்தத்தைப் பூசிவிட்டுச் செல்வது போல, இலங்கை முஸ்லிம்கள் மீது, ஒரு வரலாற்றுக் கறை இன்று பூசப்பட்டிருக்கின்றது.

யாரோ செய்த நாசகாரச் செயலுக்காக, இஸ்லாமிய மார்க்கமும் முஸ்லிம்களும் இன்று ஏனைய சமூகங்களால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலையை, இந்தத் தற்கொலைக் குண்டுதாக்குதல்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள், (இங்கு முஸ்லிம்கள் எனப்படுவோர், இஸ்லாமிய மார்க்கத்தைச் சாதாரணமாக அல்லது மிதமான அடிப்படையில் பின்பற்றும் மக்கள் எனக் கொள்க) ஒருபோதும் அரசாங்கத்துக்கோ, நாட்டுக்கோ எதிராகச் செயற்பட்டவர்கள் அல்லர். இரண்டாம் இராஜசிங்கன் மன்னனைக் காப்பாற்றிய முஸ்லிம் பெண்ணையே, அந்த மன்னன், ‘மா ரெக லே’ எனச் சொல்லி, ‘பங்கரகம்மானய’ என்ற ஊரையே, முஸ்லிம்களுக்குக் கொடுத்தார்.

மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த முஸ்லிம்களின் பெரும்பாலானோர், பயங்கரவாதத்துக்கோ, தீவிரவாதத்துக்கோ, சட்டத்துக்குப் புறம்பான சக்திகளுக்கோ துணை போனவர்களும் அல்லர்.

அதனாலேயே தமிழ் ஆயுதக் குழுக்கள், முஸ்லிம்களை நெருக்குவாரப்படுத்தின. அதேபோன்று, இத்தனை நெருக்கடிகள், ஒடுக்குமுறைகள் வந்த போதும், சாதாரண முஸ்லிம் மக்கள் வன்முறையைக் கையில் எடுக்கவும் இல்லை; ஆயுதங்களில் நம்பிக்கை வைக்கவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், தமக்குள் இப்படியான குழுக்கள் இல்லையென்று முஸ்லிம்கள் தொடர்ச்சியாகக் கூறிவந்த நிலையில், இப்படியான ஒரு பயங்கர எண்ணம் கொண்டவர்கள் உருவாகியிருக்கின்றார்கள் என்பதையும், மார்க்க இயக்க வேறுபாடுகளும், புதுப்புது தீவிர சிந்தனைகளும் இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன என்பதை, முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவும் அதற்காகப் பொறுப்புக்கூறவும் வேண்டும்.

இந்தப் பின்னணியில், தமக்குள் ஒரு மீள்வாசிப்பை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

மேற்படி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, முன்பே அறிந்திருந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும், இக்குழுவினர் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதும் முஸ்லிம்கள், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அரச பாதுகாப்புக்குத் துறைகளுக்கு ஆதரவாகவும் செயற்பட்டு வருகின்றமை, இப்போது பாதுகாப்புத் தரப்பினருக்கு உறுதுணையாக அமைந்துள்ளது எனலாம்.

குறிப்பாக, சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற முன்னர், அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது சந்தேகம் கொண்டது பிரதேசவாசிகளே; உடன் அவ்வீட்டுக்குச் சென்றவர்கள், கிராம சேவகர் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினரே; அதன்பிறகு, பாதுகாப்புத் தரப்பை அவ்விடத்துக்கு வரவழைத்ததும் ஊரவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீடுகளையும் பாதுகாப்பு தரப்பினருக்குத் தெரியப்படுத்தியவர்கள் முஸ்லிம் மக்களே.

அதுமட்டுமன்றி, மாவனல்லையில் சந்தேக நபரான தனது மகள், வீட்டுக்கு வந்துள்ளமை குறித்து, பெற்றோரே பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்; அரச உயர்மட்டத்தினரும் பிரதமரும் இது குறித்துச் சிலாகித்துப் பேசியிருக்கின்றனர்.

முஸ்லிம்களுக்குள் இருந்து, ஒரு குழுவினர் இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதுதான், முஸ்லிம்களுக்கே நம்ப முடியாத நிதர்சனமாகும். எனினும், தற்கொலையும் மிலேச்சத்தனமாக உயிரைக் கொல்வதும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் இன முரண்பாட்டை ஏற்படுத்துவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல என்பதை, சாதாரண முஸ்லிம்கள் அறிவார்கள்.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அதன் பின்னரான ஏனைய தாக்குதல் சம்பவங்களும் முஸ்லிம்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இடையிலான உறவில், ஓர் இரத்தக்கறையைத் தெறிக்க வைத்திருக்கின்றது என்பதை மறுக்கவியலாது.

அன்றிலிருந்து அடுத்தடுத்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அசம்பாவிதங்கள், நாட்டின் சமூக, பொருளாதார சூழலுக்கு நல்ல சகுணங்களாகத் தெரியவில்லை. சுருங்கக் கூறின், இலங்கையின் ஒவ்வொரு பொது மகனின் நிம்மதியையும் கெடுத்திருக்கின்றது.

எனவே, இந்தக் குழுவினரை இஸ்லாமிய மார்க்கத்தை முறையாக பின்பற்றுகின்ற பேர்வழிகளாகப் பார்க்காமல், தங்களுக்கு ‘நியாயம் எனக் கற்பிக்கப்பட்ட காரணத்துக்காக எதையும் செய்யத் துணிகின்ற’ ஒரு (பயங்கரவாத) குழுவினராகக் கருதி, எல்லோரும் ஒன்றிணைந்து, இவ்வாறான சக்திகளைக் கட்டுப்படுத்துவதுடன், இதன் பின்னணியையும் கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்தளவு மூளைச் சலவையையும் பணத்தையும் பக்கபலத்தையும் பயிற்சியையும் யார் கொடுத்தார்கள் எனத் தேட வேண்டியுள்ளது.

இனங்களுக்கிடையில் இப்போது படிந்திருக்கின்ற இந்தக் ‘கறையை’ கழுவினால் மாத்திரமே, இனநல்லிணக்கம் பற்றிச் சிந்திக்க முடியும்.

பக்குவமான கருத்துகள்

தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் அதிர்ந்து போயுள்ள இலங்கையின் நிலைமை, இன்னும் மோசடையாமல், அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினரும், ஓரளவுக்கேனும் பொறுப்பாகச் செயற்படுவதாகப் பொதுவானதோர் அபிப்பிராயம் இருக்கின்றது.

இந்நிலையில், சர்வமதத் தலைவர்கள் ஒருமைப்பாட்டுடன் நடந்து கொள்வதும் பக்குவமான கருத்துகளை வெளியிடுவதும் சற்று ஆறுதலளிப்பதாகத் தெரிகின்றது.

குறிப்பாகப் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தின் பேராயரான, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்துகள், மிகவும் முதிர்ச்சிகரமானவையாக அமைந்துள்ளன.

“இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் நாம், முஸ்லிம்களுக்கு எதிராக விரல்நீட்டவில்லை என்பதுடன், அவர்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்ளவும் இடமளிக்கப் போவதில்லை” என்று அவர் கூறியிருக்கின்றார்.

“முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் பிற்பாடு, சில நாடுகள் தமது ஆயுதங்களை விற்பதற்காக, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள்” என்று சுட்டிக்காட்டி, அவ்வகையில் பாதிக்கப்பட்ட நாடுகளையும் கொழும்பில் நடைபெற்ற சர்வமத ஊடக மாநாட்டில் பட்டியலிட்டுள்ளார்.

இதற்குப் பின்னால், ஒரு பாரிய அரசியல் மற்றும் வெளிநாட்டுச் சக்தி உள்ளது. அதனைப் பாதுகாப்புத் தரப்பினர் கண்டறிந்து, வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேராயர் இல்லத்தில் நடைபெற்ற விசேட ஆராதனை நிகழ்வில், “கடவுளின் பெயரால் மனித வாழ்வை அழிப்பது, மதத்துக்கு மாறுபட்ட முழுமையான ஒரு செயலாகும்” எனப் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் “பயங்கரவாதத்துக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பயங்கரவாதத்தை, தற்கொலை தாக்குதலை, இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அந்தவகையில் இப்பயங்கரவாதத்தை அடியோடு பிடுங்கியெறிய, முஸ்லிம் சமூகம் ஆதரவு வழங்கும். முகத்தை மூடும் பெண்கள் வெளியில் செல்லாமல், வீட்டுக்குள் இருக்கலாம்; நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக, அதனை அணிந்து கொள்ளாமல் செல்வது நல்லதென அறிவித்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், அரசாங்கமும் படையினரும் சர்வ மத குருமாரும் பொறுப்பாக நடந்து கொள்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களின் மீது இனவாதத்தைக் காட்டவும், முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்தவும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், சில அரசியல்வாதிகள் முனைவது கவலையளிக்கிறது. அவர்களுடைய கருத்துகள், அவர்களுடைய நோக்கத்தைத் தௌிவுபடுத்துகின்றன. அத்துடன் வேறு சில சக்திகள், எரிகின்ற வீட்டில் கொள்ளி பிடுங்க முனைவதாகத் தெரிகின்றது.

பயங்கரவாதத்தை அடக்குவதற்கு சமாந்திரமாக, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலாபம் தேடுவோரது செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைத் தேசம், தனது அனுபவங்களில் இருந்து எதையும் பாடமாகக் கற்றுக் கொள்ளவில்லை என்பதே, அதன் அர்த்தமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்சேதுபதி பண்ணது ரொம்ப தப்பு ஆவேசப்பட்ட திருநங்கைகள்!! ( வீடியோ)
Next post டூபீஸில் காற்று வாங்கும் ஆப்தே…. !! (சினிமா செய்தி)