குட்டி ஹீரோயின்… லவ்லின்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 19 Second

தமிழ்த் திரையுலகத்திற்கு புதிதாக ஒரு வாரிசு நடிகை வரப்போகிறார். அவர் வேறு யாருமல்ல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தில் அறிமுகமான விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின். சகோதரி நடிகைகள் சரிதாவும், விஜியும் பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர்கள்.

இவர்களின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளமை ததும்பும் கதாநாயகியாக ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகும் லவ்லின், நடிப்பு துறைக்கு வருவதற்கான காரணத்தையும், தனது முதல் பட அனுபவத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
‘‘பி.எஸ்.சி சைக்காலஜி முடித்திருக்கிறேன். தற்போது சென்னை பல்கலைக் கழகத்தில் மாஸ்டர் கவுன்சிலிங் சைக்காலஜி படித்து வருகிறேன்.

நடிப்பு…

நடிப்பு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே அம்மா ஷூட்டிங் போகும் போது நானும் அவங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எல்லாம் போவேன். அம்மா, மேக்கப், காஸ்டியூம் எல்லாம் போடும் போது, அதை அப்படியே இமிடேட் செய்து அதே மாதிரி நானும் பண்ணி பார்ப்பேன். அப்படி ஒரு டைம் நான் இதெல்லாம் பண்ணும் போது, சமுத்திரக்கனி சார் என்னை பார்த்துவிட்டு ‘குட்டி ஹீரோயி’ன்னு அழைத்தார். அன்று முதல் எங்க வீட்டில் எல்லாரும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

அம்மா…

அம்மா, பெரியம்மா இருவருமே நடிகைகள். இருவருக்கும் இன்றும் சினிமாத் துறையில் தனி மதிப்பு, மரியாதை உண்டு. அவங்களும் நடிகை என்பதால் நடிப்பு பற்றி அவங்களுக்கு தெரியும். அதனால் அவங்க எனக்கு முழுசா சப்போர்ட் செய்தாங்க. நடிப்பு மேல் ஆர்வம் இருந்தாலும், அவங்களுக்கு படிப்புல தான் முக்கியத்துவம் முதலில் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. அதன் பிறகு தான் நடிப்புன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. நானும் அவங்க வார்த்தையை தட்ட விரும்பல. பட்டப்படிப்பு முடிச்சேன். இப்ப நடிக்க வந்துட்டேன். பணம், பொருள், செல்வத்தைக் கூட மற்றவர்கள் பறித்து விடும் வாய்ப்புள்ளது. ஆனால் கல்வித் திறமையை யாராலும் பறிக்க முடியாது. அது ஒருவரின் தனித்திறமை. இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு கல்வி ரொம்ப முக்கியம். அவர்களுக்கு அது தன்னம்பிக்கையை தருவதோடு, வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்தையும் எளிதாக எதிர்கொள்ள உதவுகிறது.

ஹவுஸ் ஓனர்…

லக்ஷ்மி மேடம் படம் செய்ய போறாங்கன்னு கேள்விப்பட்டேன். உடனே அந்த படத்திற்கான ஆடிஷனுக்கு போனேன். நடிச்சு காண்பிச்சேன். அவங்க பார்த்திட்டு எதுவுமே சொல்லல. அடுத்த நாள் ட்விட்டரில், “என்னுடைய ராதா”ன்னு என்னை குறிப்பிட்டு இருந்தாங்க. அதன் பிறகு தான் நான் செலக்டாகி இருக்கேன்னு எனக்கே தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களில் ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க. இரண்டு வாரம் என்னுடைய கால்ஷீட் கேட்டாங்க. படத்தில் நடித்தும் முடித்தேன். ‘பசங்க’ கிஷோர் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. லக்ஷ்மி மேடம் எனக்கு நல்ல பரிச்சயம் என்பதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவே கம்பர்டபிளா ஃபீல் பண்ணினேன். ‘ஆடுகளம்’ கிஷோர் சார் கூட படத்தில் எனக்கு பெரிய அளவில் காம்பினேஷன் கிடையாது. இருந்தாலும் அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்து போனேன்.

ராதா…

எனக்கு புடவை கட்ட தெரியாது. இந்த படத்தில் புடவையை வித்தியாசமா வேற கட்டணும். அத மட்டும் இல்லை, இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது, அதை எப்படி வெளிப்படுத்தணும்ன்னு எனக்கு தெரியல. ஷூட்டிங் ஸ்பாட்டில் லக்ஷ்மி மேடம் தான் எனக்கு நடிச்சு காண்பிச்சாங்க. முகத்தில் எப்படி எக்ஸ்பிரேஷன் கொடுக்கணும், எப்படி பார்க்கணும் எல்லாமே செய்து காண்பிச்சாங்க. நான் அதை அப்படியே செய்த போதுதான் எனக்கு நடிப்பு பற்றி ஓரளவு புரிந்து, ஈசியானது. ராதா 1971களில் இருக்கும் பெண். அமைதியான, பழமைவாதியான பாலகாட்டு பொண்ணு. அந்த காலத்து பெண் என்பதால் அவர்களின் நடை, பாவனை எல்லா வற்றிலும் மாற்றம் காண்பிக்க வேண்டும். அடுத்து டயலாக். எக்ஸ்பிரஷனுக்கு ஏற்ப பேசும் போது சவாலாக தான் இருந்தது. முதல் படம் என்றாலும் மேக்கப் இல்லாம தான் நடிச்சிருக்கேன். ராதா புதுமையானவள், சிட்டிவேஷனுக்கு சொல்லும் போது அதற்கு ஏற்ப நடிக்கணும். கடைசியாக டப்பிங். நானே செய்த போது ரொம்பவே சவாலாக இருந்தது.

முதல் படம்…

முதல் முறை நடிப்பதால், கேமரா, அதில் வைக்கப்படும் ஆங்கில் எதுவுமே எனக்கு தெரியாது. ஒரே டயலாக்கை பல கோணத்தில் எடுப்பாங்க. பல முறை ஒரே விஷயத்தை நடிக்கும் போது, நான் சரியா நடிக்கல அதான் மறுபடியும் மறுபடியும் ஷூட் செய்றாங்கன்னு தோணும். சில சமயம் வருத்தப் பட்டும் இருந்திருக்கேன். போக போகத்தான் தெரிந்தது, அது வெரைட்டி ஷார்ட்ஸ். அதாவது இருவர் டயலாக் பேசும் போது, முதல் ஷாட்டில் ஒருவரை க்ளோசப் காண்பிப்பாங்க. அடுத்த ஷாட்டில் மற்றவரை எடுப்பாங்க. அதைத் தான் பல முறை ஷூட் செய்தாங்கன்னு அதன் பிறகு தான் புரிந்தது. அதே போல் ஒரு கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கும் போது, அதற்கு எப்படி ஒர்க் அவுட் பண்ணனும் என்பதையும் கத்துக்கிட்டேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாடமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

விரும்பும் கதாபாத்திரம்…

இன்றைக்கு ஸ்கிரிப்ட்டுதான் முக்கியம். அதே சமயம் நடிப்புக்கும் சவாலாக இருக்கணும். நடிப்பு ஒருவருக்குப் பிடித்த விஷயமாக இருக்கும் பட்சத்தில் அவரின் கடைசிக்காலம் வரை நடிகராக தான் இருப்பார். பொறுமையாக நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்வு செய்து, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.

திரைப்பட வாய்ப்புகள்…

‘ஹவுஸ் ஓனர்’ படத்திற்கு பிறகு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதிகப் படங்கள் நடிப்பது முக்கிய மில்லை. நல்லப் படங்களாக இருக்க வேண்டும். குறைந்த அளவு படங்கள் நடித்தாலும், அது நல்ல கதாபாத்திரம், ஸ்கிரிப்ட் அமைந்தால் பண்ணலாம்.

குறும்படம், தியேட்டர், வெப் சீரிஸ்…

எல்லாமே பெர்ஃபார்மென்ஸ் தான். எல்லாவற்றிலும் கால் வைத்தால் நாம தான் விழுவோம். படிப்படியாக போவோம். இப்போது படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். எதிர்காலத்தில் வெப் சீரிஸ் பண்ணலாம் என்ற யோசனை உள்ளது.

நடிப்பு தவிர…

டிரைவிங் பிடிக்கும். வீட்டில் ஸ்பீக்கரை அலற விட்டு டான்ஸ் ஆட பிடிக்கும். நிறையப் படங்கள் பார்ப்பேன். இந்தி படங்கள் கொஞ்சம் அதிகம். இப்ப இருக்கிற தலைமுறைக்கு நிறையப் பழைய நடிகர், நடிகைகள் யார் என்பது தெரிவதில்லை. இந்தத் துறையில் இருந்து அதுகூட தெரியவில்லை என்றால் வெட்கம். அதனால் பழைய படங்களும் பார்க்கிறேன். அந்த படங்களில் நடிப்பு கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிர்காலத்தில் ஆஸ்ரமம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

ரோல் மாடல்…

ஒருத்தர் மாதிரி இருக்க வேண்டும் என்று நாம் ஏன் நினைக்கணும். ஏன் நம்மை பார்த்து மற்றவர்கள் இருக்கக் கூடாதா? ஒருவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், யார் மாதிரியும், யாராலும் இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

அம்மா நடித்த படம்…ஆரோகணம்.

அம்மா, பெரியம்மா… அம்மா நடிச்ச படங்களை விட பெரியம்மா நடிச்ச படங்கள்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அம்மாவின் பாடம்…

இயக்குநரின் நடிகராக இருக்க வேண்டும். பஞ்சுவாலிட்டி. எதையும் பொழுது போக்காக எடுத்துக் கொள்ளாமல், உண்மையாகவும், அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டும். செய்யும் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்யணும்’’ என்றார் தலையை கோதியபடி லவ்லின்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பே O குரூப் இது புதுசு! (மருத்துவம்)
Next post உலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங்!! ( வீடியோ)