வாழ்க்கையை மாற்றிய ரிக்ஷா!! (மகளிர் பக்கம்)
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வசித்து வருபவர் ரோஜினா பேகம். இவர் ஒரு மாற்றுத் திறனாளி பெண். கால்கள் செயலிழந்த நிலையில் நடக்க முடியாமல் தவழ்ந்தே வலம் வந்த இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை பிச்சை எடுத்து தன் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறார். ஆனால் இன்று ஒரு ரிக்ஷா அவர் நிலையை மாற்றி தன்னம்பிக்கை மனுஷியாக வாழ வைத்துள்ளது. வாழ்க்கையின் மீது நம்பிக்கை நிறைந்த ஒரு பெண்ணாக டாக்காவின் தெருக்களில் பயணிகளோடு ரிக்ஷாவில் பயணிக்கிறார் ரோஜினா.
இரண்டு கால்களும் வலுவிழந்து நடக்க முடியாத நிலையில் இருந்த ரோஜினா, பெரும்பாலும் உட்கார்ந்த நிலையில் இரண்டு கால்களாலும் தவழ்ந்தேதான் அனைத்து இடங்களுக்கும் செல்ல நேர்ந்தது. இதனால் சாலை ஓரங்களில் அமர்ந்து பிச்சை எடுத்து அதில் வரும் பணத்தில் தன் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து காப்பாற்றி வந்திருக்கிறார். அப்போதெல்லாம் யாராவது ரோஜினாவிடம், எப்படி உன் குடும்பத்தை சமாளிக்கிறாய் எனக் கேட்டால் பிச்சை எடுத்துத்தான் என சொல்ல வேண்டிய நிலையே இருந்திருக்கிறது.
இதனால் ரோஜினாவின் குழந்தைகள் அவர்களின் நண்பர்களிடம் அவமானம் அடைந்திருக்கின்றனர். இதை அறிந்தது முதல் சாப்பாட்டிற்காக பிச்சை எடுப்பதை நான் முற்றிலும் நிறுத்திவிட்டேன் என்கிறார் ரோஜினா. என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது வேலை செய்வதைப் பார்க்கும்போது, நானும் ஏதாவது ஒரு வேலையினைச் செய்து அதில் வரும் வருமானத்தைக்கொண்டு என் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் கால்கள் வலுவிழந்த நிலையில், எந்த வேலையும் செய்ய முடியாத என் நிலையை நினைத்து பெரும்பாலும் கண்கலங்கி துயரப்பட்டு இருக்கிறேன்.
கொஞ்சமாகவாவது சம்பாதித்து என் குழந்தைகளைக் காப்பாற்ற எனக்கு ஒரு வேலை வேண்டும் என பல நேரங்களில் யோசித்திருக்கிறேன். அப்போது எனக்குத் தெரிந்த சகோதரர் ஒருவர் ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் ரிக்ஷாவை ஓட்டக் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டேன். அதற்கு அவர் மாற்றுத் திறனாளியான உன்னால் எப்படி ரிக்ஷாவை ஓட்ட முடியும் என என்னிடம் கேட்டார். மோட்டார் இயந்திரம் பொருத்தப்பட்ட ரிக்ஷா என்றால் மட்டுமே உன்னால் ஓட்ட முடியும் என்று என்னிடத்தில் சொல்லிவிட்டார்.
இந்நிலையில் கொஞ்ச நாளிலேயே மோட்டார் மூலம் இயங்கும் ரிக்ஷாக்கள் டாக்காவில் அறிமுகமாகத் தொடங்கின. எண்ணி ஆறே மாதத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷாவைக் ஓட்டக் கற்றுக்கொண்டேன். எனக்கு ரிக்ஷா ஓட்டுவது நன்றாகவே பழகிவிட்டது. இன்று என்னால் மிகவும் சர்வசாதாரணமாக ஆண்களுக்கு இணையாக ரிக்ஷாவை ஓட்ட முடிகிறது. ஆனாலும், பெண் என்பதால் என் ரிக்ஷாவில் ஏற பலர் முதலில் தயங்கி நின்றனர்.
அவர்கள் ஏறுவதற்கு தயங்கும்போது, அவர்களிடத்தில் நான் ஒரு மாற்றுத் திறனாளி. என் ரிக்ஷாவில் ஏறி எனக்கு உதவுங்கள் என அவர்களிடத்தில் என் நிலையை விளக்குவேன். என் கோரிக்கையை ஏற்று சில பயணிகள் என் ரிக்ஷாவிலும் பயணிக்கத் தொடங்கினர். நடக்க முடியாத நிலையில் என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு எனக்கு பிச்சை போட்டவர்கள் எனது தன்னம்பிக்கை மிக்க செயலைப் பார்த்து பிரமித்து நிற்க்கிறார்கள்.
மேலும் தன்னம்பிக்கையோடு உழைத்து சம்பாதிக்கும் ஒரு பெண்ணாகவும் என்னைப் பார்க்கிறார்கள். பலரும் எனக்கு ஆதரவு கொடுத்து தொடர்ந்து என் ரிக்ஷாவிலும் பயணிக்கிறார்கள். துவக்கத்தில் ஒரு நாளைக்கு 200 முதல் 250 வரை சம்பாதிக்கத் தொடங்கினேன். இப்போது என்னால் தன்னம்பிக்கையோடு என் குழந்தைகளின் தேவைகளை தயக்கமின்றி பூர்த்தி செய்ய முடிகிறது. வாழ்க்கை மீதான நம்பிக்கை கண்களில் மிளிர பேசி முடித்தார் டாக்காவின் நம்பிக்கை நாயகி ரோஜினா பேகம்.
Average Rating