சின்னதம்பி சமத்தானவன்!! (மகளிர் பக்கம்)
வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டது புகைப்படக் கலை. நம் ஒவ்வொருவரின் வாழ்வுடன் இணைந்த புகைப்படங்கள், பல படிகளைக் கடந்து வந்துள்ளன. பல விஷயங்களை அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள உதவுவதும் புகைப்படமே. பல நூறு பக்கங்கள் எழுத வேண்டிய விஷயத்தைக்கூட ஒரு புகைப்படம் விளக்கிவிடும். புகைப்படக் கருவியை உருவாக்குவதற்கான முயற்சி பல நூற்றாண்டு களுக்கு முன்னரே தொடங்கினாலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நவீன புகைப்படக் கருவிகள் தோன்றின.
செல்போனில் பட மெடுக்கும் வசதி வந்த பிறகு, ஒவ்வொருவரும் போட்டோகிராபர் களாகி விட்டோம். சிலர் செல்ஃபி எடுக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.புகைப்படங்களில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பிரஸ் போட்டோகிராபி, இன்டஸ்ட்ரியல், வைல்டு லைஃப், கிட்ஸ், நேச்சர், ஈவன்ட், ப்ராஜக்ட், சினிமா, லேண்ட்ஸ்கேப், போர்ட்ரெய்ட், மேக்ரோ, ஸ்ட்ரீட் போட்டோகிராபி எனப் பல வகைகள் உள்ளன.
இவற்றில் சவால் நிறைந்ததாகக் கருதப்படுவது `வைல்டு லைஃப் போட்டோகிராபி’. அடர்ந்த வனப் பகுதி யில் பல நாட்கள் காத்துக் கிடந்தாலும், சில சமயங்களில் எதிர்பார்க்கும் புகைப்படம் கிடைக்காது. அதேசமயம், எதிர்பாராத வகையில் ஒரு விநாடியில் சிறந்த புகைப் படம் கிடைக்கும். இதிலும் ஒரு பெண்ணாக இருக்கும் போது சவால்கள் அதிகம். வைல்டு லைஃப் போட்டோகிராபராக மட்டுமில்லாமல், இயற்கை ஆர்வலராகவும் தனது வாழ்வை இயற்கையோடு வாழ்ந்து வருகிறார் தேவி.
உடுமலைப்பேட்டை அருகில் சின்னாறு என்னும் ஊரில் பிறந்து வளர்ந்த இவருக்கு சிறு வயதிலிருந்தே காடுகள் மீதான ஈர்ப்பு மிகையானது. “அப்பாவின் ஃபேக்டரிக்கும், காட்டுக்கும் நூறு மீட்டர் இடைவெளியே. விவரம் தெரிந்த வயதிலிருந்து விடுமுறை நாட்களைக் கழித்தது இந்தக் காடுகளில் மட்டுமே. இதற்கு முழு காரணம் அப்பா. யானை என்றால் பைத்தியம். கையில் டாட்டூக் கூட யானை படம் வரைந்திருக்கிறேன். அப்படித்தான் வளர்ந்தேன்.
சிறு வயதிலிருந்தே காடுகளில் அதிகம் பயணித்ததால், அங்குள்ள ஃபாரஸ்ட் ரேன்ஜர்ஸ், டிப்பார்ட்மென்ட் ஆபிசர்கள் எல்லாரும் பழக்கம். கல்லூரி காலங்களில் ட்ெரக்கிங் போக ஆரம்பித்தேன். 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு எனது வாழ்க்கை காடு என்றாகிவிட்டது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள காடுகள். கேரளா, கர்நாடகா, வடக்கில் தடோபா… என சுற்றி திரிந்தேன். இதனோடு நின்று விடாமல், டிப்பார்ட்மென்ட் ஆட்களோடு இணைந்து பணிபுரியவும் ஆரம்பித்தேன். யானை, புலி போன்ற விலங்குகள் பற்றிய சர்வே செய்வேன். அவற்றின் கால் தடங்களைக் கொண்டு அதன் பழக்க வழக்கங்கள் என்ன என்று கண்டறிவேன்” என்றார்.
இயற்கை ஆர்வலராக மட்டுமே பயணித்து வந்த தேவி, புகைப்படக் கலைஞராக மாறிய தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். “2012, ட்ரக்கிங் நண்பர்களோடு சென்றேன். அந்த சமயத்தில் தான் என் கணவரை சந்தித்தேன். அவர் புகைப்பட நிபுணர். வைல்ட் லைஃபில் எனக்கிருக்கும் ஆர்வத்தைப் பார்த்தவர், “நீ பார்ப்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று ஊக்குவித்ததோடு, புகைப்படங்கள் எடுக்கவும் கற்றுக் கொடுத்தார். இப்போது அவருக்கும் வைல்டு லைஃப்பில் ஆர்வம் ஏற்பட, இருவரும் சேர்ந்து பயணித்துக் கொண்டு இருக்கிறோம்’’ என்றவருக்கு பிடித்த வன விலங்கு யானையாம்.
‘‘நான் காடுகளிலேயே அதிகம் பயணித்திருப்பதால், என் மேல் காட்டின் வாசனை தான் அதிகம் இருக்கும். அந்த வாசனை விலங்குகளுக்கு ஓரளவு தெரியும். புதிய நபர்களையும், பெரிய பெரிய புகைப்படக் கலைஞர்களையும் அழைத்துச் செல்லும் போது பல முறை எங்களை யானைகள் துரத்தியிருக்கிறது. கீழே விழுந்து உருண்டு பிரண்டு எல்லாம் தப்பித்து வந்து இருக்கோம். அந்த சமயத் தில் சர்வசாதாரணமாக அடிபடும். யானைக்கு, புல்லட் போன்ற வாகனங்களின் சத்தம் பிடிக்காது. ஒரு சில யானைகள் மனித நடமாட்டம் இருக்கும் இடங்களைப் பழகியிருக்கும். காட்டுக்குள் நான் நான்கு நாட்கள் இருந்தாலும் குளிக்க மாட்டேன். பர்ஃப்யூம் கூட போடமாட்டேன். நாம எப்படி இருக்கோமோ அப்படித்தான் இருக்கணும். காற்று வீசும் திசையில் யானைகள் இருந்தால் அது உடனே நம் வாசனையை உணர்ந்திடும்” என்றவரிடம் கடந்த சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் சின்னதம்பி யானையை பற்றி வினவிய போது…
‘‘இது மிகப்பெரிய தவறு. அதை காட்டில் விட்டுவிட்டாலே சந்தோஷமா இருக்கும். அதற்கும் குடும்பம் இருக்கிறது. 2007 ஆம் ஆண்டிலிருந்தே சின்னதம்பியை பார்த்து வருகிறேன். அவ்வளவு சமத்தானவன். அதன் பாதுகாப்புக்காக மட்டுமே மிரட்டுவானே தவிர, யாரையும் ஏதும் செய்ய மாட்டான். அதைக் கொண்டு போய் கும்கியாக்குவதோ, வேற காட்டுக்குள் விடுவதோ அதற்குத்தான் ஆபத்து. ஓரிடத்தில் பழக்கப்பட்டதை வேறு இடங்களில் கொண்டுபோய் விடும்போது, மற்ற யானைகள் அதை எப்படி நடத்தும் என்பது கேள்விக்குறி. இதனால் அவை உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். காரணம் அதற்கென தலைவர், குடும்பம்… எனத் தேர்வு செய்து வைத்திருக்கும். திடீரென ஒன்றை மட்டும் பிடித்து வேறொரு பழக்க வழக்கத்திற்கு விடும் போது, அதற்கான தேவைகளை தேடுவதற்கே நேரம் போய்விடும். அதன் எதிரி யார் என்பது கூடத் தெரியாது. இதையெல்லாம் அம்மா யானை தான் சொல்லித் தந்து குட்டியினை கூட்டிக் கொண்டு போகும். ஆனால் அதுவே இடம்பெயர்ந்து போவது வேறு.
சின்னதம்பி காட்டுக்குப் போக விருப்பமில்லாததற்கு காரணம், இருக்கு மிடத்தில் போதிய உணவு கிடைத்து இருக்காது. இப்ப வந்திருக்குமிடத்தில் அதற்கான தேவைகள் கிடைத்து விட்டால், அங்கிருந்து செல்வதற்கு கொஞ்ச நாள் யோசிக்கும். அதை நாம் ஏதோ ஒரு காட்டுக்குள் விட்டுவிட்டால், அந்த இடத்தில் ஏற்கனவே வசிக்கும் மற்ற முரட்டு யானைகள் இதனிடம் எப்படி நடந்து கொள்ளும் என்பது தெரியாது. அதான் கொஞ்சம் பயமா இருக்கு. எந்த ஒரு யானையும் புதிதாக ஒரு காட்டிற்குள் போகிற போது, அங்கு குடிபெயர்வது கொஞ்சம் கஷ்டம். பெண் யானையாக இருந்தால் அட்ஜஸ் செய்து கொள்ளும்.
தந்தம் வைத்த ஆண் யானையாக இருந்தால் கொஞ்சம் சிரமம்” என்கிறார் தேவி. இவர் குழந்தைகளை காட்டிற்குள் அழைத்து சென்று அவர்களுக்கு இயற்கை மற்றும் அங்குள்ள விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ‘‘குழந்தைகள் கிரிக் கெட், கண்ணா மூச்சி என வெளியே விளையாடு வது குறைந்துவிட்டது. இப்ேபாதேல்லாம் அதே கிரிக்கெட் விளையாட்டினை மொபைல் போனில் விளையாடுகிறார்கள்.
அவர்களின் கவனத்தை திசை திருப்ப, பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அவர்கள் வாழும் இடத்தில் பறவைகள், விலங்குகளை எப்படி அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். உதாரணத்திற்கு சுவின் கம்மை சாப்பிட்டு அப்படியே கீழே போடும் போது அதை உண்ணும் பறவைகள் இறந்து விடுகின்றன. காட்டுக்குள் டிரெக்கிங் செல்பவர்கள், பிளாஸ்டிக் பாக்கெட் மற்றும் பாட்டில்களை காடுகளில் அப்படியே போட்டுவிட்டு போகிறார்கள்.
அதெல்லாம் எவ்வாறு இயற்கை சூழலை பாதிக்கும் என்பதை குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே புரிய வைக்கிறேன். இதன் மூலம் அவர்களும் இயற்கை சார்ந்து வாழ கற்றுக் கொள்வார்கள். நீங்க எந்த அளவிற்கு இயற்கையை தொந்தரவு செய்கிறீர்களோ, அதைவிட பன்மடங்கு எதிர்வினையாக மாறும் என்பதை நாம் எல்லாரும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்பவர் காட்டு விலங்குகள் அதன் இயல்பு தன்மை மாறாமல் இருக்க நாம் தான் முயற்சிக்க வேண்டும் என்றார்.
“பொதுவாக நீங்க மலை அல்லது காட்டுப் பகுதியில் பயணம் செய்யும் போது, செக்போஸ்ட் அருகில் குரங்கு கள் அதிகமாக இருக்கும். கார ணம், மக்கள் கையில் உள்ள உணவுப் பொருட் களை அதற்கு கொடுத்து பழக்கி விடுகிறார்கள். இதனால் இவை காட்டுக்குள் செல்லாமல் இங்கு சுற்றித் திரிந்து கொண்டு இருக்கிறது. குரங்கு தானே என்று நாம் அலட்சியமாக இல்லாமல், அவையும் நம்மை தாக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் எந்த காட்டுக்குள் செல்லும் போதும் ஃபாரஸ்ட் ரேன்ஜர்ஸ் சொல்லும் அறிவுரைகளைக் கேட்க வேண்டும். அதையும் மீறி குடித்துவிட்டு செல்வோரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றவர் விலங்குகள் விளை நிலங்களை அதிகம் தாக்க காரணம் உணவு பற்றாக்குறை என்று வருத்தப்பட்டார். “உணவுப் பற்றாக்குறை இருக்கும் போதும், மழை பொய்த்து போகிற காலங்களிலும், காட்டோரங்களில் பயிரிடப்படும் பயிர்களின் வாசனை வரும்.
நாம் தான் சம்பாதிக்கும் நோக்கத்தில் யானைகள் வசித்து வந்த இடத்தில் ரெஸ்டாரன்ட், கெஸ்ட் ஹவுஸ், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் கட்டியிருக்கிறோம். அதனுடைய இடங்களை ஆக்கிரமிக்கும் போது, இதுதான் நிகழும். எந்த ஒன்றையும் தொந்தரவு செய்யாத வரை பிரச்சினை இருக்காது. அதை சீண்டும் போதுதான் அது விஸ்வரூபமாக மாறும் இது இயற்கை, விலங்குகளுக்கும் பொருந்தும். தூரத்திலிருந்து பார்த்து ரசிப்பதோடு நின்றுவிட்டால் நல்லது. அரசாங்கமும், இயற்கை ஆர்வலர்களும் என்னதான் வலியுறுத்தினாலும், நாம் நடந்து கொள்ளும் நடவடிக்கைகளில்தான் இருக்கிறது அடுத்த தலைமுறைக்கான சொத்துகளைப் பாதுகாப்பது. எனவே ஒரு மரம் வெட்டினால், நான்கு மரங்கள் நட்டு வையுங்கள்” என்கிறார் வைல்டுலைஃப் புகைப்பட நிபுணர் தேவி.
Average Rating