இவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்!! (மகளிர் பக்கம்)
“கார்த்தி தம்பி படத்துல அக்கான்னு கூப்பிட்டுச்சு. இன்னிக்கு தமிழ்நாடே அக்கான்னு கூப்பிடுது. எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் நல்ல எண்ணத்தோடவே இருந்தா, என்னைக்காவது ஒரு நாள் மக்கள் முன்னாடி நல்ல பிள்ளையாவே அறிமுகம் ஆவோம்” என்று கூறும் குணச்சித்திர நடிகை தீபா சங்கர், தான் நடிக்க வந்த அனுபவம், குடும்ப பின்னணி, தற்போது நடித்து வரும் படங்கள், சீரியல், வெப்சீரிஸ் என, பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.‘‘தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் எனக்கு சொந்த ஊர். சின்ன பிள்ளையில இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். காரணம், ஸ்கூல் வாத்தியாரான எங்க அப்பா, ஒரு மோனோ ஆக்டர். பசங்களுக்கெல்லாம் நடிக்க சொல்லி கொடுக்கும் போது ஒளிஞ்சு நின்னு பார்ப்பேன். டிவில எதாவது பாட்டு போட்டா அதே மாதிரி ஆடுவேன்.
சென்னை மியூசிக் காலேஜ்ல படிக்கும் போது, ஏதாவது நிகழ்ச்சின்னா மோனோ ஆக்டிங் பண்ணுவேன். அப்பதான் என் ஃபிரண்டு விஜித்தா, ‘நீ நல்லா நடிக்கிற சினிமால ட்ரை பண்ணுன்னு’ சொன்னா. நமெக்கெல்லாம் வாய்ப்பு தருவாங்களான்னு யோசிக்கும் போது, திருமுருகன் சார் மெட்டி ஒலி சீரியலில் நடிக்க விளம்பரம் கொடுத்திருந்தாங்க. நிறைய பேர் வந்திருந்த ஆட்களில் என்னை செலக்ட் பண்ணி ஒரு சின்ன கேரக்டர் கொடுத்தாங்க.
அங்கிருந்து தான் என் நடிப்பு பயணம் துவங்கியது.நான் இத்தனை ஆண்டு களாக நடிப்புத் துறையில் நிலைத்து நிற்பதற்கு இயக்குநர் விக்ரம் அண்ணேதான் காரணம். அவங்கதான் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, சோர்வடையும் போதெல்லாம் என் கையை பிடித்து கூட்டிச் சென்றார்” என்று பேசிக் கொண்டிருந்த தீபா இடையில், எங்க குடும்பத்த பத்திக் கண்டிப்பா சொல்லியே ஆகணும் என்று பேச ஆரம்பித்தார்.
“அப்பெல்லாம் பொதுவா நடிக்க பொம்பள பிள்ளைங்கள விடமாட்டாங்க. அப்படித்தான் எங்க அப்பாவும். நடிக்க வந்தா தப்பா பேசுவாங்கன்னு விடவே மாட்டேன் என்றார். எங்க அம்மாதான் அவளுக்கு என்ன விருப்பம் இருக்கோ அதுல விடுங்கன்னாங்கன்னு எனக்கு சப்போர்ட் செய்தாங்க. அப்படித்தான் நான் நடிக்க வந்தேன். ஆனா, தம்பிதான் எட்டு வருசமா பேசாம இருந்தான். என் கல்யாணத்துக்குக் கூட அவன் வரல. இப்படி என் மேல வீட்டில் இருக்குறவங்க கோவமா இருந்தாலும், அம்மாதான் இன்னிக்கு வரைக்கும் சப்போர்ட். நடிக்க வந்த ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். என்னதான் நா் நடிக்க வந்துட்டேன்னு என் மேல கோவமா இருந்தாலும், நான் கஷ்டப்பட்ட நேரத்துல அண்ணா, தம்பி, அப்பா எல்லாம் பார்த்துகிட்டாங்க.
அவங்க இல்லைன்னா, பொருளாதார தேவைக்கா நிறைய பேர் என்னென்னமோ முடிவெடுக்குறாங்க, அதில் நானும் சிக்கியிருப்பேன். அந்த அளவிற்கு எங்க குடும்பம் விடல. எங்க அண்ணி, அம்மா மாதிரி பார்த்துக்குவாங்க. என்னோட நடிப்புக்கு யார் சப்போர்ட்டா இருக்காங்களோ அவங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தகால்ல நின்னேன். நல்ல வேலையில் இருக்குற மாப்பிள்ளைகள் வந்தும் வேண்டாம்ட்டேன். ஆனா என் கணவர், எனக்கு உறுதுணையாக இருக்கார்.
எனக்கு குழந்தை பிறந்தப்ப, பேசாம இருக்கும் தம்பி பார்க்கட்டும்ன்னு அவன் முன்னாடி போய் அப்படி, இப்படின்னு காட்டுவேன். திரும்பி கூட பார்க்க மாட்டான். எனக்கு ரொம்ப வருத்தமாயிட்டு. நடிக்கிறேங்கறதுக்காக என்னை பார்க்கல… என் பிள்ளை என்ன பண்ணுச்சுன்னு வருத்தமாக இருந்தது. ஒரு நாள் பாத்ரூம் போகறதுக்காக வெளியில போய் இருந்தேன். லேசா கதவ திறந்து பார்க்கும் போது, பிள்ளைய தூக்கி முத்தமா கொடுத்து கொஞ்சிகிட்டு இருந்தான். அவன் மனசுல எவ்வளவு ஆசை வச்சு இருக்கான்னு நினைச்சிட்டு அப்படியே கதவ பூட்டிட்டு உட்கார்ந்துட்டேன். என்னால அழுகைய அடக்க முடியல. எனக்கு ஒரு தங்கை. அவ சட்டம் படிச்சு இருக்கா. அவளும் நானும் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துட்டு எதாவது கதை பேசிட்டு இருப்போம்” என்று தனது குடும்பம் பற்றி பேசிய தீபா, தான் கற்றதை தன்னோடு நிறுத்திவிடாமல் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
“நான் நடிக்கிறது எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப திருவள்ளூர்ல இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறோம். அதில் டான்ஸ், பாட்டு, கீ போர்டு, டிரம்ஸ்… சொல்லிக் கொடுக்கிறோம். பரதநாட்டியம் படிச்சுட்டு சும்மா இருக்குறோமேன்னு ஆரம்பத்துல கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு சும்மா எடுக்க ஆரம்பிச்சேன். இதையே ஏன் நம்ம தொடர்ந்து செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. இப்ப எல்லா பசங்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். எல்லோருக்கும் ஏதோ ஒரு லட்சியம் இருக்கும். நாலு பேருக்கு உதவி செய்யணும்னு நினைப்பாங்க. ஆனா, அவங்ககிட்ட காசு இருக்காது. சயின்ஸ் படிச்ச ஒருத்தருக்கு அதை சொல்லிக் கொடுக்கக் கூடிய திறமை இருக்கும். பக்கத்துல இருக்கிற குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். பொருள், நிதி கொடுத்துதான் உதவி செய்யணும்ன்னு இல்லை.
இன்னைக்கும் நிறைய சம்பாதிச்சுட்டேன் என்றெல்லாம் சொல்லிற முடியாது. சினிமா ஃபீல்டுல பணம் சம்பாதிச்சேனோ இல்லையோ நிறைய உறவுகள் சம்பாரிச்சு இருக்கிறேன். சீரியல் மூலமா நிறைய அண்ணன்கள் கிடைச்சிருக்காங்க. சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர் இயக்குநர் ஜவகர் அண்ணே எங்க ஊர்காரங்க. லேசா நடிச்சாலே, சூப்பரா நடிக்கிறம்மான்னு சொல்லுவாங்க. தொழில் விஷயத்தில் கரெக்ட்டா இருப்பாங்க. ஒரு நாள் விளையாட்டா சேட்ட பண்ணேன்னு சத்தம் போட்டாங்க. ரொம்ப அன்பானவர். காமராஜர் மாதிரி எளிமையான குணம் கொண்ட ஆட்களை கண்டா ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி வரிசையில் இருக்குறவங்க கூடத்தான் பயணம் செய்துட்டு இருக்கேன். ‘செம’ படம் எடுத்த வள்ளிகாந்த், இயக்குநர் ஏகாதேசி அண்ணே இவங்க எல்லாம் என்னை பின் இருந்து இன்றும் உந்திவிடுகிறார்கள். கடைக்குட்டிப் படத்துக்கு பிறகு இப்ப நிறைய படங்களில் ஆபர் வருது. சந்தோஷமா இருக்கு. த்ரிஷா கூட பரமபதம், ஆர்யா கூட நடிச்சிருக்கேன். இப்ப விஜய் சேதுபதி படத்துல கூப்பிட்டு இருக்காங்க.
இதுபோக வெப் சீரிஸ் பண்ணிட்டு இருக்கேன்.தப்பானவள்னு யாரும் நம்மள விமர்சித்திடக் கூடாது. எங்க அப்பா இதுக்குதான் பயந்தாங்க. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நேர்மையாகத்தான் இருக்கேன். அதற்கு கிடைத்த பரிசு மக்களுடைய அன்புன்னு நினைக்கிறேன்’’ எனக் கூறும் தீபா, இங்கு நடிப்பு துறையில் கருப்பானவர்களுக்கான இடம் எப்படி இருக்கிறது என்பது பற்றி பேசும் போது, “இப்ப கருப்பா இருக்குறவங்களுக்குதான் வாய்ப்பு. விஜய் சேதுபதி தம்பியெல்லாம் கருப்பாதா இருக்காங்க. நடிகர்கள் எப்படி இருந்தாலும் ஏத்துக்குறாங்க. நடிகைகள் மட்டும் கலரா இருக்குற பிள்ளைகள கருப்பு அடுச்சு நடிக்க வைக்கிறாங்களே ஒழிய, அதுக்கு ஒரு கருப்பா இருக்குற பிள்ளைங்களே எவ்வளவு திறமையா இருக்காங்க, அவங்கள கூப்பிட்டு நடிக்க வைக்கலாம்’’ என்றவர் சினிமா பெண்களுக்கானதான்னு கேட்ட போது… ‘‘சினிமாவுக்கு வரணும்ன்னு நிறைய பேர் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. வீட்டுல சம்மதிக்கலைன்னா… இதில் வரவேண்டாம். எல்லோரும் இந்த துறையில் ஜெயிக்க முடியாது. நிறைய கஷ்டப்படணும். என்கிட்டக் கூட நிறைய பேர் வாய்ப்புன்னு கேட்பாங்க. நான் பொம்பள பிள்ளைகளுக்கு கை காட்டறது கிடையாது.
அவங்களுக்கான ஃபீல்ட் இது கிடையாது. கலைக்குன்னே பிறந்த பிள்ளைங்க வாங்க. நடிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள பிள்ளைங்க உங்க ஃபர்பாமென்ஸை காட்டுங்க.குணச்சித்திரமா நிறைய படங்களில் நடித்துவிட்டேன். காமெடியா நடிக்கணும்’’ என்று கூறும் தீபா, “ச்சீ இவல்லாம் ஒரு பொம்பளையா அப்டீன்னு திட்டணும்” அந்த அளவுக்கு ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிக்கணும்’’ என்று தனது ஆசையை கூறும் தீபா, பல நட்சத்திரங்களோடு பணிபுரிந்த அனுபவம் பற்றி பேசுகிறார், “பாண்டிய ராஜ் சார் நடிப்பையும் தாண்டி போன் போட்டு உன் பிள்ளைக்கு எந்த மாதிரி ஹெல்ப் வேணும்னு கேட்டாங்க, அதை நான் மறக்கவே மாட்டேன். கார்த்தி சார் ஃபவுண்டேஷன்ல இருந்தும் கேட்டாங்க. சரவணன் மீனாட்சியில, மீனாட்சி பாப்பாவ பத்தி சொல்லனும். எல்லோரும் சொல்லுவாங்க கோவகார பொண்ணுன்னு. எல்லாத்துக்குள்ளையும் ஒரு குணம் இருக்கும். அதை மறச்சு வச்சு இருப்பாங்க. ரொம்ப அன்பான பிள்ளை. பழகினா தான் தெரியும். எங்க இன்ஸ்டிடியூட்கூட திறந்து வச்சது மீனாட்சிதான்.
குஷ்பூ மேம் ரொம்ப அன்பா நடந்துக்குவாங்க. பொதுவா பெரிய நடிகர்கள் கூட நடிப்பது கொஞ்ச பயமா இருக்கும். அந்த பயமே இல்லாம மேடம் கூட நடிக்கிறேன். தப்பு பண்ணாலும் தோளில் தட்டிக் கொடுத்து அன்பா திருத்துவாங்க. அவங்க வீட்டிலதான் லட்சுமி ஸ்டோர் சூட்டிங் நடக்கும். ஒரு சின்ன பொருளில் சேதாரம் ஏற்பட்டாலும் கரெக்ட்டா கண்டுபிடிச்சுருவாங்க. அவ்வளவு பாதுகாப்பா இருப்பாங்க. நம்ம சம்பாதிச்சத எப்படி பாதுகாக்க வேண்டும், ஒரு வீட்டை எப்படி நடத்த வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். பொதுவா, நடிகைன்னா பொறுப்பு இல்லாம இருப்பாங்கன்னு நிறைய பேர் சொல்றாங்க. நான் பார்த்த வரைக்கும் அவங்க ரொம்பவே பொறுப்பானவங்க. நான் கூட அவங்க அப்படி, இப்படின்னு கதை பேசி இருக்கேன். அவங்களிடம் பழகினா தான் அவங்க குணம் தெரியும். இது எல்லோருக்கும் பொருந்தும்’’ என்றார்.
Average Rating