வேப்பம்பூ பருப்பு ரசம்!! (மருத்துவம்)
புளி பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி 1
உப்பு தேவையான அளவு
பெருங்காயத்தூள் சிறிது
மஞ்சள் தூள் சிறிது
து. பருப்பு 50 கிராம்
வேப்பம் பூ பொடி 2 டீஸ்பூன்
ரசப்பொடி 2 டீஸ்பூன்
கடுகு சிறிது
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
செய்முறை
புளியைக் கரைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தக்காளி சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ரசப்பொடி மற்றும் வேப்பம் பூ பொடியையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். புளியின் பச்சை வாடை போனவுடன் வேகவைத்த துவரம் பருப்பை அதனுடன் சேர்த்து கொத்தமல்லித் தழை தூவி இறக்க வேண்டும். கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் கலந்து பரிமாறலாம். ரசத்தின் சுவையில் சிறிது மாற்றமிருந்தாலும் குழந்தைகள் இதை அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள். அதேபோல், மிளகு குழம்பு மற்றும் காரக்குழம்பு செய்யும்போதும் அதனுடன் நெய்யில் வறுத்த வேப்பம் பூவை சேர்க்கலாம். இதனால் சுவை கூடுவதுடன் உடலுக்கும் நல்லது.
நாம் அலட்சியமாக நினைத்து, சாதாரணமாகக் கடந்து போகும் வேப்பம் பூவுக்கு இத்தனை மரியாதையா என்று ஆச்சரியமாக இருந்தது. அதன்பின்னர் விசாரித்ததில் வேப்பம் பூ உடல்நலனுக்கு மிகவும் நல்லது என்றும், ரசம் வைக்கவும் துவையல் செய்யவும் வேப்பம் பூ பாக்கெட் வாங்கிச் செல்கிறார்கள் என்பதும் தெரிந்தது. அப்படி என்ன வேப்பம்பூவில் விசேஷம் இருக்கிறது? சித்த மருத்துவர் நந்தினியிடம் பேசினோம்..
‘‘நம்முடன் இருப்பவர்களின் அருமையையோ, நம் உடன் இருக்கும் விஷயங்களையோ நாம் மதிப்பதில்லை. அதற்கு ஓர் உதாரணம்தான் இந்த வேப்பம் பூ. யோகா என்பதையே வெளிநாட்டுக்காரர்கள் அங்கீகரித்த பிறகுதான் நம்மவர்கள் அதன் பெருமையைப் புரிந்துகொண்டு பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டுக்காரர்களுக்குத் தெரிந்த அளவுக்குக் கூட நம் பாரம்பரியமும், நம்மிடம் இருக்கும் பொக்கிஷங்கள் பற்றிய புரிதலும் இல்லை என்பது வருத்தத்துக் குரியது’’ என்பவர், வேப்பம்பூவின் மருத்துவ பலன்கள் பற்றிக் கூறுகிறார். ‘‘வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மருந்தாகக்கூடியவை. அதனால் தான் நம் குடும்பங்களில் வேப்ப இலையை அரைத்து மருந்தாகவும், வேப்பம் பூவை சமையலில் பயன்படுத்தியும் வருகின்றனர். இது சித்திரை மாதத்தில் பூக்கக்கூடியது.
வெயில் காலத்தில் இவை நமக்கு கிடைக்கும்போதே இவற்றை எடுத்து சுத்தப்படுத்தி காய வைத்துக் கொண்டால் அந்த வருடம் முழுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். காய வைத்து உபயோகிப்பதால் அதன் மருத்துவ குணம் குறையாது. பூவின் தன்மை மாறாமல் அதே மருத்துவ குணத்துடன் இருக்கும். பொதுவாக, வேப்பம் பூ கசப்புத் தன்மை கொண்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது நம் உடலில் உள்ள கிருமிகளையும், வயிற்றில் உள்ள பூச்சிகளையும் வெளியேற்றக் கூடிய திறன் கொண்டதாக இருக்கிறது. நாவிலும், வயிற்றிலும் இருக்கும் புண்களை ஆற்றக்கூடியது. வேப்பம் பூ உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. உடலுக்கு பலத்தை தரக்கூடியது. குழந்தைகளுக்கு ரசமாகவும் அல்லது வேப்பம் பூ குழம்பாகவும் செய்து கொடுக்கலாம். பெரியவர்கள் இதை கஷாயமாக வைத்தும் குடிக்கலாம்.
அதனால் வயிறு சுத்தமாகி ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தோல் அரிப்பு, திடீர் திடீரென்று கை கால்களில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க வேப்பம் பூவை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் தோல் சார்ந்த பிரச்னைகளை தவிர்க்கலாம். பெரியவர்களுக்கு உடலில் ஏதாவது இடத்தில் அடிக்கடி வலி ஏற்படும். அதாவது உடலில் அங்கங்கு காற்று சேர்ந்து வலியை உண்டாக்கும். இதுபோல், அதிகப்படியான காற்று உடலில் புகுந்து வலி நோயால் அவதிப்படுபவர்கள் வேப்பம் பூவைத் தொடர்ந்து உட்கொள்வதால் தேவையற்ற காற்று உள் சேராமல் தடுக்க முடியும். இதன்மூலம் கை, கால் மூட்டு வலிகள் வராமலும் இருக்கும். மேலும் நாக்குப்புண் உடையவர்களும் வேப்பம் பூ எடுத்துக் கொள்வதால் அவற்றை சரிப்படுத்தலாம்.
வேப்பம் பூவானது நாக்கில் ஏற்படும் Fungal infection-யும் சரி செய்யும். வேப்பம் பூவை ஊறவைத்து அந்த நீரை பருகுவதால் அல்லது அந்த நீரால் வாயை கொப்புளிப்பதாலும் இவற்றை சரி செய்ய முடியும். இது அல்சருக்கும் அருமருந்து’’ என்கிற நந்தினி, வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் பற்றித் தொடர்கிறார். ‘‘வயிற்றில் உள்ள பூச்சிகளை முழுமையாக அழிக்கும் தன்மை கொண்டது வேப்பம்பூ. தினமும் வேப்பம் பூவை உணவின் மூலம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்ற பெரிய பிரச்னைகளையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம். சமநிலையில் இருக்கும். வேப்பம்பூ உடலில் உள்ள தேவையற்ற காற்றை வெளியேற்றுவதால் தானாகவே ரத்த அழுத்தம் குறையும். அதேபோல் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பும் சேராமல் பார்த்துக் கொள்ளும்.
குழந்தைப்பேறு அடைந்தவர்கள் வேப்பம் பூ பொடியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றில் உள்ள ரணத்தை ஆற்றும். அதனால் வேப்பம் பூவை கஷாயமாகவோ அல்லது பொடியாகவோ தினமும் கால் தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளலாம். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் மட்டும் வேப்பம் பூவை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், உடல் சூட்டை அதிகப்படுத்தும். வயிற்றுப்போக்கு, மூல நோய் மற்றும் அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. இது வெப்பம் உண்டாக்கும் பூ என்பதுதான் இதற்கும் காரணம். எனவே, உஷ்ணம் சம்பந்தப் பட்ட நோய் உள்ளவர்கள் மட்டும் வேப்பம் பூவை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்!’’
Average Rating