ஹார்மோன்கள்… கோளாறுகள்…. !! (மருத்துவம்)

Read Time:9 Minute, 53 Second

பெண்மை மலர்வதில் தொடங்கி மெனோபாஸ் வரும் காலம் வரை பெண்களின் உடலையும் அவளது இயக்கங்களையும் ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டவை ஹார்மோன்கள். அவற்றின் இயக்கத்தில் ஏதேனும் தடங்கல்கள் ஏற்படுகிற பட்சத்தில், அது சின்ன கோளாறாக இருந்தாலும் கற்பனைக்கெட்டாத பெரிய பிரச்னையில் கொண்டு போய் விடலாம்.ஹார்மோன்களின் இயக்கங்களையும் அவற்றில் கோளாறுகள் ஏற்படும்போது உண்டாகிற அறிகுறிகளையும் தீர்வுகளையும் பற்றிப் பேசுகிறார் பொது மற்றும் வலி ஆதரவு சிகிச்சை மருத்துவர் ரிபப்ளிகா.மாதவிலக்கு அடைகிற வயதில் ஃபாலிக்குலர் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் மற்றும் லூட்டனைசிங் ஹார்மோன் என மூளையில் இருந்து பெரிய சுரப்பி மூலமாக சுரக்கும்.

கர்ப்பப்பையில் ஏற்படுகிற மாற்றங்களுக்கு இவைதான் காரணம். பெண்களுக்கு மூளையில் உள்ள சில ஹார்மோன்களும் உடலில் உள்ள சில ஹார்மோன்களும் கலந்து சரியாக செயல்பட்டால்தான் மாதவிடாய்முறையாக வரும். இரண்டில் எதில் கோளாறுகள் இருந்தாலும் அந்த சுழற்சி சரியாக இருக்காது.

ஃபாலிக்குலர் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் கரு உற்பத்திக்கு முக்கியமானது. லூட்டனைசிங் ஹார்மோன் அந்தக் கருவைத் தக்கவைக்க தேவையானது. இந்த இரண்டினால்தான் கர்ப்பப்பையில் உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, கருமுட்டை உற்பத்தியாவது முதல் பல செயல்களுக்கும் காரணமாகின்றன.இன்று நிறைய பெண்கள் இளம் வயதிலேயே மாதவிலக்கு சுழற்சி முறையாக இல்லை என்றும், சினைப்பை நீர்க்கட்டிகளோடும் வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மைதான்.ஈஸ்ட்ரோஜென் அதிகமாகி, புரொஜெஸ்ட்ரோன் இல்லை என்றால் மாதவிலக்கு சரியான நேரத்தில் வராது.

சுற்றுச்சூழல் மாற்றங்கள், மன அழுத்தம், வாழ்க்கை முறை மாறுபாடுகள், சரியான உணவின்மை போன்றவையே இதற்கான முக்கிய காரணங்கள்.பி.சி.ஓ.டி எனப்படுகிற கருவறையில் வருகிற நீர் கொப்புளங்களுக்கும் இவை எல்லாம்தான் காரணம். பி.சி.ஓ.டி பிரச்னை ரொம்பவும் இள வயதிலேயே வந்துவிட்டு, அதைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் பிற்காலத்தில் அதில் தொற்று அதிகமாகி, புற்றுநோயாக மாறும் அபாயமும் உண்டு. குழந்தையின்மைப் பிரச்னைக்கும் காரணமாகலாம். மாதவிலக்கை தள்ளிப் போட அடிக்கடி ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு அதன் பயங்கரமான பின்விளைவுகள் தெரிய வாய்ப்பில்லை.

‘எனக்கு எப்போதும் இப்படித்தான்…. கன்னாபின்னானுதான் பீரியட்ஸ் வரும்’ என அலட்சியப்படுத்தாமல், அந்த சுழற்சி முறைதவறியிருந்தால், மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். கூடவே முகத்தில், கை, கால்களில் அதிக ரோம வளர்ச்சியும் இருந்தால் பி.சி.ஓ.டி பாதித்திருக்கலாம்.எல்லோருக்கும் தெரிந்த இன்னொரு ஹார்மோன் தைராய்டு. நிறைய பேருக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறது.களைப்பு, ரத்த சோகை போன்றவற்றை தைராய்டின் அறிகுறிகளாக யாரும் நினைப்பதில்லை. தைராய்டு ஹார்மோன் என்பது முறையற்ற மாதவிலக்கு சுழற்சியில் தொடங்கி, மலச்சிக்கல், செரிமானமின்மை, சுறுசுறுப்பின்மை, மூட்டு வலிகள் போன்ற பிரச்னைகளுக்குக் காரணமாகலாம். இதெல்லாம் ஹைப்போ தைராய்டின் அறிகுறிகள்.ஹைப்பர் தைராய்டில் படபடப்பு, அதிக வியர்வை, சின்ன விஷயங்களுக்குக்கூட அதிகப் பதற்றம், அளவுக்கதிக ரத்தப்போக்கு போன்றவறை இருக்கும்.

தைராய்டு சரியாக சுரக்க அயோடின் சத்து மிக முக்கியம். அது குறைவானால் காயிட்டர் எனப்படுகிற தைராய்டு கட்டி வரலாம். அது ஓர் இடத்தில் நீர்க்கட்டி மாதிரி வரவோ, பிற்காலத்தில் புற்றுநோயாக மாறவோ வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான புற்றுநோய்கள் சின்ன கட்டியில் ஆரம்பிக்கும்.வலி இருக்காது. பலரும் சாதாரண கட்டிதானே என அலட்சியமாக இருப்பார்கள். தொண்டை கரகரப்பு, குரல் மாற்றம் போன்றவற்றுக்கு பல்வேறு சிகிச்சைகளை எடுத்தும் குணமாகாமல் வந்த ஒரு பெண்ணுக்கு அது தைராய்டு புற்றுநோய் என கண்டுபிடித்தோம். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்திருந்தால் புற்றுநோயாக உருவாகாமல் தவிர்த்திருக்கலாம்.

கருத்தரிக்கும் போதும் கர்ப்பப்பையில் ஹார்மோன்கள் மாறும். தாய்ப்பால் கொடுக்கும்போது புரோலாக்டின் என்கிற ஹார்மோன் அதிகமிருக்கும். அதனால் மாதவிடாய் வராது. அதை கர்ப்பம் தங்காது என்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொண்டு பலரும் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள். மனரீதியாகவும் இந்த ஹார்மோன்கள் பெண்களுக்குப் பிரச்னைகளைத் தரும். உதாரணத்துக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம். மாதவிலக்கு வருவதற்கு சில நாட்கள் முன்பு சில பெண்களுக்கு கோபம், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வரும்.எல்லாவற்றுக்கும் காரணம் ஹார்மோன்கள். மாதவிலக்கு முற்றுப்பெறுகிற மெனோபாஸ் காலத்திலும் ஹார்மோன்களின் மாறுதல்களால் அதீத வியர்வை, களைப்பு, அதிகத் தூக்கம் போன்றவை வரும். ஏற்கனவே ரத்தசோகையோ, ஊட்டச்சத்து குறைபாடோ உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் மாறுதல்களால் ஏற்படும் அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளும்போது எல்லாமே இரட்டிப்பாகத் தெரியும்.

நீரிழிவுகூட ஒருவகையான ஹார்மோன் பிரச்னைதான். சிலருக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு வரும். பிரசவமானதும் அது சரியாகி விடும். பலருக்கு அது தொடரும். பிற்காலத்தில் நீரிழிவு வரலாம் என்பதற்கான அறிகுறியாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.கருப்பையில் வரும் கட்டி புற்றுநோயாக மாறும் அபாயத்தை அதிகம் பார்க்கிறேன். தொப்பை இருக்கிறது என நினைத்துக் கொண்டு வயிறு வீக்கத்தை அலட்சியப்படுத்துவார்கள்.சோதித்துப் பார்த்தால் அது புற்றுநோய் கட்டியாக இருப்பது தெரிய வரும். எனவே, எந்த வயதில் எந்த ஹார்மோனால் எந்த மாதிரியான பிரச்னைகள் வரலாம் என்கிற தெளிவு வேண்டும். உடல் வெளிப்படுத்துகிற சின்ன அசாதாரண உணர்வைக்கூட அலட்சியப்படுத்த வேண்டாம்.மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்பது பெண்களுக்கு மிக முக்கியம்.

மாஸ்டர் செக்கப் என்கிற பெயரில் அவர்கள் செய்கிற சோதனைகளை மட்டும் செய்து கொள்ளாமல், உங்களுக்கு இருக்கும் பிரச்னைகளின் அடிப்படையில் அவற்றுக்கான சோதனைகளை நீங்களே கேட்டுச் செய்து கொள்ளுங்கள்.வெயில் படாமல் இருப்பதைத் தவிருங்கள். ரொம்பவும் இறுக்கமான உடைகளைத் தவிருங்கள். சமீப காலமாக வைட்டமின் டி குறைபாடு பரவலாக எல்லோருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். அதன் பின்னணியிலும் ஹார்மோன்களின் பங்கு உண்டு. எனவே அதிலும் கவனம் தேவை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாள்தோறும் பா.ஜனதாவை எதிர்த்து போராடுவோம்!! (உலக செய்தி)
Next post துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!! (அவ்வப்போது கிளாமர்)