பிரச்னைகளே இல்லை… ஆனாலும் பிரச்னை! (மருத்துவம்)
குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருகிற பலரும் புலம்புகிற ஒரு விஷயம்…‘நிறைய டாக்டர்களை பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும்தானே? அப்புறம் ஏன் அதுல தாமதம்?’ என்பது.பிரச்னையே இல்லாததுதான் பிரச்னையா? கருத்தரிப்பதில் தாமதம் ஏன்?
– விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘‘உண்மைதான்… எல்லாமே நார்மல் என்றால் அவர்களுக்குக் குழந்தை உண்டாகியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் இன்னும் கருத்தரிக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அடிப்படைப் பரிசோதனைகளை செய்துவிட்டு, எல்லாம் நார்மல் என்று வந்தால் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்போம்.இதன்படி, குழந்தை இல்லாத பட்சத்தில், கணவன் – மனைவி இருவருமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவிக்கு பரிசோதனை செய்கையில் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
1. கர்ப்பப்பையின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ(Polyp)
அல்லது தடுப்புகள்(Septum) போன்றவையோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.
2. கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.
3. சூலகம் என்கிற முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.
4. கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன் சுரப்புகள் எஃப்.எஸ்.ஹெச்., எல்.ஹெச், டி.ஆர்.எல்., தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.ஏன் கருத்தரிக்கவில்லை என்பதை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லிவிட முடியும்.
கருத்தரிக்காத பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை உரிய நேரத்தில் செய்தாக வேண்டும். அதன்படி…
*மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும்.
*மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி. மற்றும் எக்ஸ்ரே.
*மாதவிடாயான 21-வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட் ரோன் சோதனை.
*மாதவிடாயான 7-வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடி.
கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சிக்கு, சினை முட்டை வெளிவருதல்(Ovulation) என்று பெயர். அந்த நேரத்தில் என்டோமெட்ரியம் எனப்படுகிற திசுவானது 8 மி.மீ. அளவு வளர்ச்சியுடன் இருந்தால்தான், உருவான கருவானது கருப்பையில் பதியும்.இப்படி எல்லாவற்றையும் பார்த்து, எல்லா பரிசோதனை களும் நார்மல் என்று தெரிந்தால், டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி(Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும் குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம்.
மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும். ஆணுக்கு விந்தணுப் பரிசோதனை அவசியம். விந்தணு எண்ணிக்கை, குறைந்தபட்சம் 20 மில்லியன் இருக்க வேண்டும். அதில் 50 சதவிகிதம் வேகமான, உந்து சக்தியுள்ள உயிரணுக்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது. அதற்கும் சிறப்புபரிசோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம்.எனவே, மனம் தளராமல் சிறப்பு சிகிச்சைகளுக்கு உங்கள் கணவருடன் தயாராகுங்கள். மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்!’’
Average Rating